முன்னைய பகுதிகளில் மின்காந்த அலைகள் என்றால் என்ன என்றும், அவற்றின் பண்புகள், மற்றும் ரேடியோ அலைகள், நுண்ணலைகள், அகச்சிவப்புக் கதிர்கள் என்பனவற்றைப் பற்றிப் பார்த்துவிட்டோம், அவற்றை நீங்கள் வாசிக்க கீழே உள்ள இணைப்புக்களைப் பயன்படுத்துங்கள்.
- மின்காந்த அலைகள் 1 : அறிமுகம்
- மின்காந்த அலைகள் 2 : பண்புகள்
- மின்காந்த அலைகள் 3: ரேடியோ அலைகள்
- மின்காந்த அலைகள் 4: நுண்ணலைகள்
- மின்காந்த அலைகள் 5: அகச்சிவப்புக் கதிர்கள்
- மின்காந்த அலைகள் 6: கட்புலனாகும் ஒளி
புறவூதாக் கதிர்கள், கட்புலனாகும் ஒளியின் அலைநீளத்தைவிடக் குறைவான அலைநீளத்தைக் கொண்டவை. மனிதக் கண்களுக்கு புலப்படாத மின்காந்த அலையாக இருப்பினும் சில பூச்சிகள், பறவைகள் மற்றும் தேனிக்களால் இவற்றை பார்க்க அல்லது உணரமுடியும். மேலும் குறிப்பிட்ட சூழலில் குழந்தைகளால் அல்லது இளம் மனிதர்களால் கூட புறவூதாக் கதிர்களை பார்க்கக்கூடியதாக இருக்கும்.
புறவூதாக் கதிர்கள், கட்புலனாகும் ஒளியின் அலைநீளம் குறைந்த பிரதேசத்தில் இருக்கும் ஊதா நிறத்திற்கு அப்பால் இருக்கும் பிரதேசமாகும். இதன் அலைநீள வீச்சு 400nm தொடக்கம் 30nm வரை செல்கிறது; 30nm அப்பால் எக்ஸ் கதிர்கள் காணப்படுகின்றன.
நமது சூரியன் புறவூதாக் கதிர்களின் முழு நிறமாலையிலும் புரவூதக் கதிர்களை வெளியிடுகிறது. புறவூதாக் கதிர்களை அதன் நிறமாலையைக் கொண்டு மூன்று பகுதிகளாக பிரித்துள்ளனர்.
UV-A: இதன் அலைநீளம் 315-400nm வரையாகும்; இது நமது பூமியின் ஓசோன் படையால் உறிஞ்சப்படுவதில்லை. மற்றும் இது உயிரினங்களுக்கு பாத்திப்பை ஏற்படுத்துவதில்லை.
UV-B: இதன் அலைநீளம் 280-315nm வரையாகும்; மத்திம அலைநீளத்தைக் கொண்ட இந்த வீச்சு, பெரும்பாலும் ஓசோன் படையால் உறிஞ்சப்படுகிறது. வெயில் காயங்களை உருவாக்கும் காரண கர்த்தா இந்த அலையாகும். இந்தக் கதிர்வீச்சின் மூலம் உயிருள்ள அங்கிகளின் DNA மற்றும் கலங்களில் தாக்கங்கள் மற்றும் பாதிப்புக்கள் ஏற்படும்.
UV-C: இதன் அலைநீளம் 100-280nm வரையாகும். இது மிகவும் ஆபத்தானது, இது உயிருள்ள அங்கிகளின் கலங்களை சிதைப்பதுடன் அவற்றின் இனப்பெருக்க தொகுதியை பாதிக்கின்றது, நுண்ணங்கிகள் இறக்கும் ஆபத்தும் உண்டு. இதனால்த் தான் 254nm அலைநீளம் கொண்ட புறவூதாக் கதிர் கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. இதில் மிகப்பெரிய நல்லவிடயம் என்னவென்றால், சூரியனில் இருந்துவரும் UVC அனைத்தும் ஓசோன் படையால் உறிஞ்சப்படுகிறது.
இந்த மூன்று பிரிவையும் தவிர வேறு சில பிரிவுகளாகவும் புறவூதாக் கதிர்களை விஞ்ஞானிகள் பிரித்துள்ளனர். அண்மிய புறவூதாக் கதிர்கள், மத்திம புறவூதாக் கதிர்கள், நீண்ட புறவூதாக் கதிர்கள் மற்றும் தீவிர புறவூதாக் கதிர்கள் என்பன அவற்றில் சில; பெரும்பாலும் வானியல் ஆய்வுகளில் ஈடுபடும் விஞ்ஞானிகளே இப்படியான பிரிவுகளைப் பயன்படுத்துகின்றனர். பூமி பற்றிய ஆய்வு மற்றும் பூமி விஞ்ஞானத்தில் மேலே குறிப்பிடப்பட்ட மூன்று பிரிவுகளே பயன்படுகின்றன.
புறவூதாக் கதிர்களின் கண்டுபிடிப்பு, அகச்சிவப்புக் கதிர்களின் கண்டுபிடிப்பைப் போன்றதே, அண்ணளவாக் அதே காலத்தில் நிகழ்ந்த கண்டுபிடிப்பும் கூட!
1800 இல் வில்லியம் ஹெர்ச்சல் அகச்சிவப்புக் கதிர்களை கண்டறிந்துவிட்டார் என்று கேள்விப்பட்ட ஜோஹன் ரிட்டர், ஊதா நிறத்திற்கு அப்பால் ஏதாவது கதிர்கள் உள்ளனவா என்று கண்டறிய ஆவல் கொண்டார்.
1801 இல் ரிட்டர் சில்வர் குளோரைட்ஐப் பயன்படுத்தி பல ஆய்வுகளை மேற்கொண்டார். சில்வர் குளோரைட் சூரிய ஒளியில் கருப்பு நிறமாக மாறும். அதிலும் சிவப்பு நிற ஒளியில் சில்வர் குளோரைட் அடையும் தாக்கத்தை விட நீல ஒளியில் அதிக தாகம் அடைவதை ரிட்டர் கேள்விப்பட்டார், ஆகவே ஒரு பரிசோதனை மூலம், ஒளியில் உள்ள வேறுபட்ட நிறங்களின் மூலம் எந்தளவு தாக்கம் சில்வர் குளோரைட்டில் இடம்பெற்று அது கருப்பு நிறமாக மாறுகிறது என்று கண்டறிய திட்டமிட்டார்.
அரியத்தைக் கொண்டு கட்புலனாகும் ஒளியை அதன் நிறக் கூறுகளாகப் பிரித்து, ஒவ்வொரு சிவப்பில் இருந்து ஊதா வரை ஒவ்வொரு நிறத்திலும் சில்வர் குளோரைட்டை வைத்தார். சிவப்பு நிறத்தில் வைக்கப்பட்ட சில்வர் குளோரைட் பெரிதாக எந்தவித மாற்றத்தையும் காட்டவில்லை, ஆனால் அப்படியே படிப்படியா ஊதா நிறத்தை நோக்கிச் செல்லும் சில்வர் குளோரைட் அதிகளவு கருப்பு நிறமாக மாறியது, அதிலும் ஊதா நிறத்தில் வைக்கப்பட்ட சில்வர் குளோரைட் அதிகளவு கறுப்பாக மாறியது!
இதனை அவதானித்த ரிட்டர், ஊதா நிறத்திற்கு அப்பால், அதாவது எந்தவொரு நிற ஒளியும் இல்லாத பிரதேசத்தில் சில்வர் குளோரட்டை வைத்தார், அவர் ஆச்சரியப்படும் விதமாக ஊதா நிறத்தில் இடம்பெற்ற தாக்கத்தை விட இந்தப் பிரதேசத்தில் அதிகளவு தாக்கம் இடம்பெறுவதை அவர் அவதானித்தார். இதனை அவர் இரசாயனக் கதிர் எனப் பெயரிட்டார், பின்னர் இது புறவூதாக் கதிர் என பொதுவாக அழைக்கப்பட்டது.
இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், கட்புலனாகும் ஒளியின் இரு துருவங்களான சிவப்பு மற்றும் ஊதா நிறங்களுக்கு அப்பாலும் கட்புலனாகாத ஒளி உள்ளது என நிருபிக்கப்பட்டது.
புறவூதாக் கதிர்கள் தற்போது பல்வேறு துறைகளில் பயன்படுகிறது. அன்றாட வாழ்வு தொடக்கம், விண்ணியல் ஆய்வுகள் வரை புறவூதாக் கதிர்களின் பயன்பாடு காணப்படுகிறது.
மேலும் துணிகளின் வெண்மை நிறத்தை அதிகரிக்க நிறமற்ற புளோரசென்ட் / ஒளிரும் சாயங்கள் பயன்படுகின்றன, இவற்றின் மீது புறவூதாக் கதிர்கள் படும்போது, இவை நீல நிற ஒளியை வெளியிடும், இது உடையில் உள்ள மஞ்சள் நிற அழுக்குகள் இருந்தால் அவற்றின் நிறத்தில் கலந்து உடையின் வண்ணங்களை மேலும் பிரகாசப் படுத்தும். வெறும் வெள்ளை நிற ஆடைகள் மேலும் வெண்மையாகும். வெள்ளை நிற பாடசாலை சீருடைகளுக்கு சொட்டு நீலம் பாவிப்பது இதனால்த்தான்.
புறவூதா புளோரசென்ட் சாயங்கள் வெள்ளைக் கடதாசி மற்றும் பெயின்ட்களிலும் பயன்படுகிறது.
UV-B ஆபத்தான கதிராக இருந்தாலும் உடலில் வைட்டமின் D ஐ உற்பத்தி செய்ய உதவுகிறது. ஆனால் கட்டடங்களில் உள்ள கண்ணாடி இவற்றை உறிஞ்சிவிடுவதால், நேரடி சூரிய ஒளியில் இருந்ததுதான் வைட்டமின் D ஐ உற்பத்தி செய்யமுடியும், ஆனால் ஒன்று நீண்டநேரம் UV-B கதிர்வீச்சில் இருந்ததால் அது புற்றுநோயைக் கூட உருவாக்கலாம்.
புளோரசென்ட் மின்விளக்குகள், அல்லது டியூப் பல்ப் எனப்படும் மின்விளக்குகள் UVC கதிர்களை உருவாக்குகின்றன, இந்த மின்விளக்குக்குள் இருக்கும் பாதரச ஆவியில் இலத்திரன்கள் பயணிக்கும் போது அவை புறவூதாக் கதிர்களாக ஒளியை வெளியிடுகின்றன. இதனால்த்தான் புளோரசென்ட் மின்விளக்குகள் வெள்ளை நிற ஒளியை வெளிவிடுகின்றன.
விண்ணியல் ஆய்விலும் புறவூதாக் கதிர்கள் பயன்படுகின்றன.
பெரும்பாலான புறவூதாக் கதிர்களை பூமியின் வளிமண்டலம் உறிஞ்சிக்கொள்வதால், புறவூதாக் கதிர்வீச்சை செய்மதிகளைக் கொண்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். புதிதாகப் பிறந்த விண்மீன்களை ஆய்வு செய்வதற்கு புறவூதாக் கதிர்களே சிறந்தது, ஏனெனில் புதிய விண்மீன்கள் பெருமளவு கதிர்வீச்சை புறவூதாக் கதிர்களாகவே வெளியிடுகின்றன.
ஒரு விண்மீன் பேரடையை புறவூதாக் கதிர்வீச்சிலும், சாதாரண கட்புலனாகும் ஒளியிலும் பார்ப்பதன் மூலம், குறித்த விண்மீன் பேரடையைப் பற்றி பல்வேறு விடயங்களை அறிந்துகொள்ள முடியும். புறவூதாக் கதிர்வீச்சில் அந்த விண்மீன் பேரடையில் இருக்கும் புதிதாகப் பிறந்த விண்மீன்களே தெரியும், ஆனால் கட்புலனாகும் ஒளியில், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் தெரியும் விண்மீன்கள் பழையவை, ஆகவே இவற்றை ஒப்பிடுவதன் மூலம் விண்மீன் பேரடைகளின் கட்டமைப்பைப் பற்றி அறியமுடியும்.
ஓசோனில் துளை என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். மேல் வளிமண்டலத்தில் நடைபெறும் ரசாயனத் தாக்கங்கள் வளிமண்டலத்தில் இருக்கும் ஓசோனின் அளவை மாற்றியமைக்கும். ஒவ்வொரு வருடமும், அண்டார்டிக்கா பகுதிக்கு மேலே உள்ள வளிமண்டலத்தில் இருக்கும் ஓசோன் படலத்தின் தடிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதன் மூலம் பூமிக்குள் நுழையும் ஆபத்தான புறவூதாக் கதிர்கள் உயிரினங்களை பாதிக்கும்.
இதனை அளப்பதற்கு நாசாவின் Aura செய்மதி Ozone Monitoring Instrument என்கிற ஒரு கருவியைக் கொண்டுள்ளது. இதிலிருந்து வரும் தகவல்களைக் கொண்டு பூமிக்கு வரும் புறவூதாக் கதிர்வீச்சை அளவை கணக்கிடும்.
புறவூதாக் கதிர்களைப் பற்றி சொல்லிக்கொண்டே செல்லாலாம், ஆனால் இதோடு புறவூதாக் கதிர்களை பற்றிய பகுதியை முடித்துக் கொண்டு அடுத்த பாகத்தில் எக்ஸ் கதிர்களைப் பற்றிப் பார்க்கலாம்.
படங்கள் மற்றும் தகவல்கள்: நாசா, விக்கிபீடியா, மற்றும் இணையம்
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :-https://web.facebook.com/parimaanam