சூரியத் தொகுதியிலேயே பூமியில் திரவ நிலையில் நீர் இருக்கிறது என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரியும். மேலும் பூமியும் மேற்பரப்பை எடுத்துக்கொண்டால் மூன்றில் இரண்டு பங்கு நீரால் மூடப்பட்டுள்ளது. ஆனால் சூரியத் தொகுதியில் இருக்கும் மற்றிய கோள்களையும் குறிப்பாக துணைக்கோள்களைக் கருத்தில் கொண்டால், பூமியில் நீர் என்பது அரிதாகக் காணப்படும் ஒரு வஸ்து என்றே கூறிவிடலாம். காரணம் அவ்வளவுக்கு அதிகளவான நீரை இந்தத் துணைக்கோள்கள் கொண்டுள்ளன.
இவற்றைப் பற்றி பார்க்கும் முன்னர், தொலைந்துபோன சமுத்திரங்கள் பற்றியும் தெரிந்துகொள்வோம். பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர், வெள்ளியில் பூமியைப் போலவே பாரிய சமுத்திரம் இருந்தது. பூமியைப் போல பலமான காந்தப்புலம் வெள்ளிக்கு இல்லாததால், வெள்ளியால் வளிமண்டலத்தை பாதுக்கக்க முடியவில்லை. இதனால் பச்சைவீட்டு விளைவு அதிகமாக இடம்பெற்று வெள்ளியில் இருந்த சமுத்திர நீர் எல்லாம் ஆவியாகி விண்வெளியில் கலந்துவிட்டன.
இதேபோல தான் செவ்வாயும்; சில பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியைப் போலவே செவ்வாயும் சமுத்திரம் சூழ, நல்ல அடர்த்தியான வளிமண்டலத்தோடு காணப்பட்டது. வெள்ளியைப் போலவே, சில பில்லியன் வருடங்களுக்கு முன்னர் செவ்வாய் தனது காந்தப்புலக் கோளத்தை இழக்கவும், அதனைத் தொடர்ந்து வளிமண்டலம் மற்றும் சமுத்திர நீர் ஆவியாகிவிட்டது. இன்றும், மணித்தியாலத்திற்கு 400 கிலோகிராம் என்கிற அளவில் செவ்வாயின் வளிமண்டலம் செவ்வாயில் இருந்து சூரியப் புயலால் காவிச் செல்லப்பட்டுக்கொண்டு இருப்பதை நாசாவின் MAVEN விண்கலம் கண்டறிந்துள்ளது.
செவ்வாய் தன்னிடம் இருந்த நீரில் 87% மான நீரை இழந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எஞ்சி இருக்கும் நீர் இன்று செவ்வாயின் துருவப்பகுதியில் செவ்வாயின் மண்ணுக்கடியில் உறைந்து காணப்படுகிறது.
சரி, சமுத்திரங்களைப் பற்றி பார்க்கலாம் வாருங்கள். சமுத்திரங்கள் என்றால் பாரிய திரவக் கட்டமைப்பு என்று கருதலாம் அல்லவா? பூமியில் நீரால் ஆன சமுத்திரங்கள் இருக்கின்றன. ஆனால் வேறு திரவங்களையும் கருதினால், சூரியத் தொகுதியிலேயே மிகப்பெரிய சமுத்திரம் வியாழனில் உள்ளது!
ஆம்! வியாழன் ஒரு வாயு அரக்கன் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் அல்லவா? அது பெரும்பாலும் ஹைட்ரோஜன் மற்றும் சிறிதளவு ஹீலியம் ஆகிய வாய்க்களால் உருவாகியிருக்கிறது. மேற்பரப்பு வாயுவாக காணப்பட்டாலும், வியாழனின் அளவு மிகப்பெரியது என்பதால், அதன் மேற்பரப்பில் இருந்து உள்ளே செல்லச் செல்ல, வாயுக்களின் அடர்த்தி அதிகரித்து ஒரு கட்டத்தில், ஹைரோஜன் வாயு அங்கே திரவநிலையில் காணப்படுகிறது. காணப்படுகிறது என்று சொல்வதை விட, காணப்பட வேண்டும் என்று இயற்பியல் விதிகள் கூறுகின்றன. அதனடிப்படையில் பார்த்தால், வியாழனின் மேற்பரப்பிற்கு கீழே, மிகப்பெரிய ஹைட்ரோஜன் சமுத்திரம் இருக்கவேண்டும், மேலும் இந்த சமுத்திரத்தின் ஆழம் அல்லது தடிப்பு அண்ணளவாக 40,000 கிமீ ஆக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அண்ணளவாக இது பூமியின் சுற்றள்ளவு! அண்மையில் வியாழனுக்குச் சென்ற ஜூனோ விண்கலம் இந்த தகவலை உறுதிப்படுத்தலாம். அல்லது மேலதிக தகவலை தரலாம்.
சரி, நீர் சார்ந்த சமுத்திரங்களைப் பற்றி பார்க்கலாம். பூமியில் உள்ள மொத்த நீரின் அளவு 1.333 பில்லியன் கன கிமீ (cubic km) ஆகும்! இதில் 96.5% மான நீர் பூமியின் சமுத்திரங்களில் இருக்கிறது. பூமியின் மொத்த நீரில் வெறும் 3% மட்டுமே நன்னீர், அதாவது குடிக்கக்கூடிய நீர். அதிலும் மூன்றில் இரண்டு பங்குக்கு அதிகமான நன்னீர் பூமியின் துருவப்பகுதியில் இருக்கும் பனிப்பாறைகளில் இருக்கிறது.
பூமியில் இருக்கும் நீரின் அளவோடு ஒப்பிட்டால், வியாழனின் துணைக்கோளான யுரோப்பாவின் பனிப்பாறைகளுக்கு கீழே அண்ணளவாக 3 பில்லியன் கன கிமீ அளவு திரவ நீர் இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். ஆனாலும், வியாழனின் மிகப்பெரிய துணைக்கோளான கனிமேட்தான் வெற்றிப் பதக்கத்தை அடைந்தவர். பூமியில் இருக்கும் நீரைப் போல 30 மடங்குக்கும் அதிகளவான நீர் கனிமேட்டின் மேற்பரப்பு பனிப்பாறைகளுக்கு கீழ் உள்ளதாம். சராசரியாக 100 கிமீ ஆழமான உப்புநீர் சமுத்திரம் கனிமேட்டில் உண்டு.
வியாழனின் இன்னொரு துணைக்கோளான கலிஸ்ட்ரோவிழும் சமுத்திரம் காணப்படுகிறது. கலிஸ்ட்ரோவின் மேற்பரப்பில் 200 கிமீ தடிப்பான பனிப்பாறை காணப்படுகிறது. இதற்கு கீழே, 10 கிமீ தடிப்பான/ஆழமான திரவ நீர்ச் சமுத்திரம் காணப்படுகிறது.
வியாழனின் துணைக்கோள்கள் என்று இல்லாமல், சனியின் துணைக்கோள்களிலும் சமுத்திரங்கள் காணப்படுகின்றன. சனியின் துணைக்கோளான என்சிலாடஸ்ஸின் தென்துருவப்பகுதியில் 30-40 கிமீ தடிப்பான பனிப்பாறைக்கு கீழே 10 கிமீ ஆழமான சமுத்திரம் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதில் ஒரு குறிப்பிடப்படவேண்டிய விடயம், இந்த சமுத்திர நீரில் அதிகளவான சேதனப்பொருட்கள் (organic materials) காணப்படுகின்றன. இவை உயிர் தோன்ற அடிப்படையான அம்சமாகும்!
மேலும் சனியின் இன்னொரு துணைக்கோளான டைட்டானில் சமுத்திரம் காணப்படுகிறது. 50 கிமீ தடிப்பான பனிப்பாறைக்கு கீழே, மிக உப்புத்தன்மையான சமுத்திரம் காணப்படலாம் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.
சனியின் இன்னொரு துணைக்கோளான மீமாஸில் சமுத்திரம் இருக்கவேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 20-30 கிமீ தடிப்பான பனிப்பாறைகளுக்கு கீழே இந்த சமுத்திரம் ஒழிந்திருக்கலாம்.
இவற்றை எல்லாம் விட மிகவும் தொலைவு சென்றால், நேப்டியுனின் துணைக்கோளான Triton இன் மேற்பரப்பில் இருக்கும் அமைப்புகள், அதன் அடியில் நீர் இருக்கலாம் என கருதவைக்கிறது, ஆனால் இது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சூரியனில் இருந்து மிகவும் தொலைவில் இருக்கும் புளுட்டோவின் மேற்பரப்பில் நைட்ரோஜன் மற்றும் மீதேன், நீரால் ஆன பனிபாறைகள் காணப்படுகின்றன. புளுட்டோவில் காணப்படும் பல நூறு கிமீ நீளமான வெடிப்புகள், புளுட்டோவின் மேற்பரப்பிற்கு கீழே சமுத்திரம் ஒழிந்திருக்கலாம் என்று கருதவைக்கிறது!
ஆக மொத்தத்தில், சூரியத் தொகுதியில் இருக்கும் பெரும்பாலான கோள்கள்/துணைக்கோள்களில் நீர் உறைந்த நிலையில் மட்டும் இல்லாமல், திரவமாகவும் இருப்பதற்காக வாய்ப்புகள் இருப்பதை நாம் கண்டறிந்துள்ளோம். உயிர் என்ற ஒன்று உருவாக திரவ நீர் அவசியமான விடயம் என்பது கண்கூடு. இந்தக் கோள்களில் / துணைக்கோள்களில் இருக்கும் ஏதாவது ஒரு சமுத்திரத்தில் உயிர்கள் உருவாகியிருக்குமா? மனிதர்களைப் போல கூர்ப்படைந்த உயிரினங்கள் என்று மட்டும் இல்லை. பக்டீரியா போன்ற ஒருகல/சிலகல எளிய உயிரினங்கள் தோன்றியிருக்கலாம் அல்லது தோன்றாமலும் இருக்கலாம்.
அடுத்துவரும் ஆண்டுகளில் இந்தக் கடல் உலகங்களுக்கு விண்கலங்களை அனுப்பி நிச்சயம் ஆய்வுகள் இடம்பெறும். எமக்கும் பல விடைகள் கிடைக்கலாம்.
தகவல்: நாசா / படம்: இணையம்
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.