நோபல் பரிசு வாங்கலையோ நோபல் பரிசு

இன்னைக்கு பையனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கும் போது ஒரு பெயர் பத்தி கேள்வி வந்துட்டுது. John Bardeen – யாருயா இவரு எண்டு நீங்கள் கேட்கலாம். எனக்கும் இந்தப் பெயர் அவ்வளவு ஞாபகம் இல்லை, சரி தேடித் பாப்போம் எண்டு பார்த்தா… ஆசாமிதான் இலத்திரனியல் புரட்சிக்கு வழிவகுத்த டிரான்சிஸ்டரைக் கண்டுபிடிச்சவர்களில் ஒருவர். இதுல முக்கியமான விடையம், இதுக்கு இவருக்கு 1956 இல் நோபல் பரிசு கிடைச்சிருக்கு. ஆனா ஆசாமி அதோட நிருத்தியிருக்கணும், ஆனா எதோ அல்வா கடைக்கு போய் அல்வா வாங்கிட்டு வார மாதிரி, திரும்பவும் 1972 இல் இவருக்கு நோபல் பரிசு வாங்கியிருக்காரு – எதுக்கு? மீயுயர்கடத்தி, அதாவது superconductivity க்காக. மனிசன் பிச்சு பிச்சு… வைச்சு வைச்சு… உலகத்திலேயே இயற்பியலில் இரண்டு முறை நோபல் பரிசு வாங்கிய ஒரே ஆசாமி மிஸ்டர் ப்ரடீன் மட்டும்தான்.

இவ்வளவு நாளா நான் ஒரு தடவைதான் ஒருத்தருக்கு நோபல் பரிசு கொடுப்பாங்க என்று நினைத்துக்கொண்டு இருந்தனான். திடீரெண்டு இவரைப் பற்றி வாசிக்கப் போய், கடைசில நோபல் பரிசுகளைப் பற்றி ஒரு தேடல் தொடங்கியது. அதில் பல சுவாரசியமான விடையங்கள் கிடைச்சிருக்கு, இதோ உங்களுக்காக சில தகவல்கள்.

நோபல் பரிசு இயற்பியல்/பௌதீகவியல், இரசாயனவியல்/வேதியல், உடலியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கு வழங்கப்படுகிறது. கணிதம், நுண்கலை போன்றவற்றுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை, காரணம், நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த அல்பர்ட் நோபல் என்ற செம கையோட, ஐ மீன், பெரிய புள்ளி ஒருவரது உயிலில் இருந்து உருவானது.

நோபல் சாகும் போது, ஒரு உயிலை எழுதி வைச்சுட்டு செத்துப்போயிடுறாரு. அதுல மேலே சொன்ன துறைகளில் இருப்பவர்களுக்கு தனது சொத்தில் இருந்து ஒவ்வரு வருடமும் தேர்வு செய்து, பணமுடி வழங்குமாறு இருக்கிறது. அநியாயத்துக்கு அதுல கணிதம் இல்லை! அவர் இப்படி பரிசாக கொடுக்கச் சொல்லிய அவரது சொத்தின் இன்றைய மதிப்பு 472 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

francis-h-c-crick-nobel-prize-medal-1

1968 இல் சுவீடன் மத்திய வங்கி பொருளியல் துறைக்கும் நோபல் நினைவாக பரிசுகளை வழங்கத்தொடங்கியது. இன்று இந்தப் பரிசும் நோபல் பரிசு என்றே கருதப்பட்டாலும், உண்மையான நோபல் பரிசு மேலே கூறிய துறைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

1901 இல் இருந்து 2016 வரை, பொருளியல் உள்ளடங்கலாக 579 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை 911 பேர் பெற்றுள்ளனர். சரியாக சொல்லவேண்டும் என்றால் 885 மனிதர்கள், 26 நிறுவனங்கள்.

நோபல் பரிசு ஒரு துறையில் ஒரு வருடத்தில் ஒருவருக்கு வழங்கப்படலாம், அல்லது ஒன்றுக்கு மேட்பட்டவர்களுக்கும் வழங்கப்படலாம். ஆனால் மூன்று பேர்களுக்கு மேலே ஒரு துறையில் நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை. இருவருக்கு பரிசு என்றால், பரிசுத்தொகை சமமாகப் பிரிக்கப்படும், மூண்டு பேர் என்றால், நோபல் குழு எப்படி பரிசு பிரிக்கப்படவேண்டும் என்று தீர்மானிக்கும்.

ஒரு துறைக்கு அண்ணளவாக ஒரு மில்லியன் அமேரிக் டொலர் பரிசாக வழங்கப்படும்! காசாயா முக்கியம்? காசு மட்டும் இல்லை, ஒரு டிப்ளோமா, மற்றும் தங்க மெடல் ஒன்றும் வழங்கப்படும்.

இதுவரை ஆககூடிய பரிசு வாங்கிய துறை – இயற்பியல் (இயற்பியல் தான்யா கெத்து!). மொத்தம் 110 பரிசுகள், 204 பேருக்கு. இயற்பியலிலும், துகள் இயற்பியல் துறைக்கே அதிகளவான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இரசாயனவியலை/வேதியலை எடுத்துக்கொண்டால் உயிர்இரசாயனவியல் / உயிர்வேதியல் துறைக்கே அதிகளவான நோபல் பரிசுகள்.

மேலே சொன்னது போல Joan Bradeen இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர், ஆனால் ஒவ்வொரு முறையும் இவர் வேறு சிலரோடு பரிசை பகிர்ந்துகொண்டுள்ளார். ஆனால் மொத்தமாக தனக்கே என்று இரண்டு முறை பரிசை கபளீகரம் செய்த பெருமை ஆசான் Linus Carl Pauling இற்கே சாரும் – மனிசன் 1954 மற்றும் 1962 இரண்டு முறையும் வேதியல் துறையில் தனியாக நின்று நோபல் பரிசு பெற்றவர்.

இவர்களைப் போல இன்னொருவர் மேடம் மேரி கியூரி. எலேய் லைனஸ் நீ ஒரே துறைல தான்யா நோபல் பரிசு வாங்குவே, நாங்க அசால்டா துறை விட்டு துறை மாறியே நோபல் பரிசு வாங்குவோம் என்று காட்டிய ஒரே பெண்மணி. 1903 இல் இயற்பியலிலும், 1911 இல் வேதியலிலும் நோபல் பரிசு வாங்கியவர்.

மேரி கியூரியைப் பற்றிக் கதைத்தால், நிச்சயம் நோபல் பரிசையும் பெண்களையும் பற்றிப் பார்க்க வேண்டும். இதுவரை 49 பெண்களுக்கு பொருளியல் உள்ளடங்கலாக நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய பெண்மணி, சின்னப்பெண்மணி என்றும் சொல்லலாம் – Malala Yousafzai. 2014 இல் சமாதானத்திற்கான நோபல் பரிசை வென்றவர். மேலும் மிகச் சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்கிற பெருமை இவரையே சாரும். பரிசு பெறும் போது இவருக்கு வயது 17.

இதனைப் போலவே இயற்பியலில் மிகக்குறைந்த வயதில் நோபல் பரிசு பெற்றவர் William Lawrence Bragg. 1915 இல் இவர் பரிசு பெறும்போது இவருக்கு வயது 25.

எங்களுக்கு வேனாம்யா உங்கள் நோபல் பரிசு என்று கூறியவர்களும் இருக்கிறார்கள். 1964 இல் இலக்கியத்துக்காக நோபல் பரிசை ஏற்க மறுத்தவர் Jean-Paul Sartre.  அதேபோல 1973 இல் வியட்நாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர பாடுபட்ட Le Duc Tho வும் நோபல் பரிசை நிராகரித்துவிட்டார்.

நோபல் பரிசை வாங்கும் போது ஜெயிலில் இருந்த ஆசாமிகளும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே சமாதானத்திற்கான நோபல் பரிசுகளை பெற்றவர்களே. ஜெர்மன் ஊடகவியலாளர் Carl Von Ossietzky, பர்மா நாட்டு அரசியல்வாதி Aung San Suu Kyi, சீன மனித உரிமை ஆர்வலர் Liu Xiaobo ஆகியவர்கள்தான். இவர்கள் ஜெயிலில் இருக்கும் போதோ தெரிந்திருக்கவேன்டாமா. நல்லவங்களை புடிச்சு ஜெயில்ல போடுறதே இந்த அரசாங்கங்களுக்கெல்லாம் வேலையா போயிடிச்சி போல.

சரி, நீங்க எப்போ நோபல் பரிசு வாங்கப்போறீங்க?