பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து செல்கிறதா?

14 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், பெருவெடிப்பு (Big Bang) மூலமாக இந்தப் பிரபஞ்சம் உருவாகியது என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அன்றிலிருந்து இன்றுவரை இந்தப் பிரபஞ்சம் பெரிதாகிக்கொண்டே வந்துள்ளது – இன்னும் அது பெரிதாகிக்கொண்டே இருக்கிறது!

பிரபஞ்சத்தில் எந்தத் திசையில் பார்த்தாலும், அங்கிருக்கும் விண்மீன் பேரடைகள் எம்மைவிட்டு வேகமாக விலகிச்செல்வதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. எவ்வளவு தொலைவில் அவை இருக்கின்றதோ, அவ்வளவு வேகமாக அவை எம்மைவிட்டு விலகிச்செல்கின்றன. இது பிரபஞ்ச விரிவடைதல் (expansion of the Universe) எனப்படுகிறது.

பிரபஞ்சம் விரிவடைவதையோ அல்லது வளர்வதையோ பல்வேறு வழிகளில் நாம் அளக்கலாம். அதில் ஒரு முறை பிரபஞ்சம் உருவாகிய பின்னரான பின்ஒளிர்வை (afterglow) அளப்பதன் மூலம் கண்டறிவது. அதாவது, வாண வேடிக்கைகள் முடிவடைந்ததும் அதிலிருந்து வரும் புகை பரவுவதைப் போல, பிரபஞ்ச பெருவெடிப்பின் பின்னர் அதன் பின்ஒளிர்வு இன்றும் பிரபஞ்சத்தில் எஞ்சி இருக்கிறது.

heic1702a
படத்தின் மத்தியில் ஒரே விண்மீன் பேரடை ஈர்ப்புவில்லை எனப்படும் இயற்கை விளையாட்டின் மூலம் பல இடங்களில் தெரிவதைப் பார்க்கலாம். படம்:ESA/Hubble, NASA, Suyu et al.

அடுத்த முறை, ‘பிரபஞ்ச வில்லைகள்’ எனும் இயற்கையின் விசித்திர அமைப்பை பயன்படுத்துவது. ஒரு விண்மீன் பேரடைக்கு பின்னால் இன்னொரு விண்மீன் பேரடை இருக்கும் போது, நாம் அதனை இங்கிருந்து பார்க்கும் போது இந்த பிரபஞ்ச வில்லை என்னும் அமைப்பு உருவாகிறது. பின்னால் இருக்கும் விண்மீன் பேரடையில் இருந்து வரும் ஒளி முன்னால் இருக்கும் விண்மீன் பேரடையின் ஈர்ப்பு விசை காரணமாக வளைக்கப்படுகிறது.

பின்னால் இருக்கும் விண்மீன் பேரடை முன்னால் இருக்கும் விண்மீன் பேரடையால் மறைக்கப்படாமல், பின்னால் இருக்கும் விண்மீன் பேரடையின் உருவம் ஒளிவில்லையின் மூலம் சிதைக்கப்பட்ட உருவம் போல வளைந்து நெளிந்து தெரியும். சில வேளைகளில் ஒரே விண்மீன் பேரடையின் ஒன்றுக்கு மேற்பட்ட ஆவி உருவங்களும் தென்படும். மேலே உள்ள படத்தின் மையத்தில் நீங்கள் இந்த அமைப்பைப் பார்க்கலாம்.

இப்படித் தெரியும் உருவங்களின் அமைப்பு மற்றும் இடத்தைக்கொண்டு பார்க்கும் போது ஒவ்வொரு உருவமும் குறித்த விண்மீன் பேரடை வெவேறு பருவ வயதுகளில் இருந்த அமைப்பைக் காட்டும். ஒவ்வொரு பிரபஞ்ச வில்லை படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது குறித்த விண்மீன் பேரடை எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதனைக் கணிப்பிடமுடியும். இதனைப் பயன்படுத்தி பிரபஞ்சம் எவ்வளவு வேகமாக விரிவடைகிறது என்பதனையும் கணிக்கமுடியும்.

பிரபஞ்சத்தின் விரிவு பற்றிய புதிய முடிவுகள் பழைய முடிவுகளுடன் ஒத்துப்போக மறுப்பதை விஞ்ஞானிகள் தற்போது அவதானிக்கின்றனர். புதிய ஆய்வு முடிவுகளின்படி ஏற்கனவே கணக்கிட்டதைவிட இன்னும் வேகமாக பிரபஞ்சம் விரிவடைவது புலப்படுகிறது!

மேலதிக தகவல்

எல்லா விண்மீன் பேரடைகளும் எம்மைவிட்டு விலகிச்செல்வதால் நாம் இந்தப் பிரபஞ்சத்தின் மையத்தில் இருப்பதாக கருதவேண்டியதில்லை. இதற்கு நல்ல உதாரணமாக பழத்துண்டுகள் கொண்ட கேக் ஒன்றை அவனில் வேகவைப்பதைக் கருதலாம். நன்றாக வேகிய கேக் விரிவடைந்த்திருக்கும். இப்போது முன்னர் இருந்ததை விட எல்லாப் பழத்துண்டுகளும் சற்றே விலகிச் சென்றிருக்கும். கேக்கின் எந்தப் பகுதியில் இருக்கும் பழத்துண்டும் அதனை விட்டு மற்றைய துண்டுகள் விலகிச்சென்றிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://www.unawe.org/kids/unawe1703/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam