புவியின் காலநிலை மாற்றத்தினால் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில், நேரடியாக அவதானிக்கக்கூடியதாக இருப்பது துருவங்களில் இருக்கும் பனியின் அளவு குறைவடைவதே.
அமெரிக்கக் தேசிய பனி பற்றிய தகவல் நிலையத்தின் (NSIDC) தகவல்ப்படி கடந்த வாரத்தில் அண்டார்டிக்கா கடற்பரப்பின் மேலே இருக்கும் பனிப்பாறையின் அளவு 2.22 மில்லியன் சதுர கிமீயாக குறைவடைந்துள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட அளவீடுகளில் இதுவே மிகவும் குறைந்த அளவாகும்.
புவியின் வெப்பநிலை அதிகரிப்பால் கடந்த மூன்று தசாப்தமாக ஆர்டிக் பனியின் அளவு சீராக குறைந்துவந்துள்ளது, ஆனால் தென்துருவத்தில் இருக்கும் அண்டார்டிக்காவில் 1970 இல் இருந்து பெறப்பட்ட தகவல்கள் குழப்பம் மிக்கதாகவே இருந்துள்ளது. ஆனால் இந்த பெப்ரவரி 14 இல் தான் முதன் முதலாக 1997 இற்கு பிறகு இதே காலப்பகுதியில் இருந்ததைவிட பனியின் அளவு குறைந்துள்ளது.
2012 இல் எப்போதும் இல்லாதளவு அண்டார்டிக்காவில் பனியின் அளவு மிக அதிகமாக அதிகரித்தது, இதற்குக் காரணம் உருகும் பனியின் நீர் மீண்டும் அதிகளவான பணியை உருவாக்குவதாக விஞ்ஞானிகள் புதிய கோட்பாடு ஒன்றை உருவாக்கினர். ஆனால் 2012 இல் இருந்து இன்றுவரை அண்டார்டிகாவில் உருகும் பனியின் அளவு அதிகரித்துக்கொண்டே வருவதை புதிய தரவுகள் தெளிவாக காட்டுகின்றன.
கடலின் மேலே இருக்கும் பனிப்பாறைகள் உருகுவது கடல் நீரின் மட்டத்தை அதிகரிக்கும், இதனால் தாழ்ந்த கடல்மட்டத்தில் உள்ள நாடுகளுக்கு ஆபத்து ஏற்படும். பச்சை வீட்டு வாயு, நிலக்கரி மற்றும் பெற்றோலிய பாவனை பூமியின் வெப்பநிலை அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக இருக்கிறது.
கடந்த வருட இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் NSIDC, “பூமியின் மொத்த மேற்பரப்பில் இருக்கும் பனியின் அளவு மிகக் குறைவாக இருப்பதாக” கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தகவல்: http://news.nationalgeographic.com/2017/02/antarctica-sea-ice-hits-record-low-global-warming/
மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam