ஐம்பது வருடத் தேடல் : வெள்ளைக்குள்ளன் பிடிபட்டார்

ஐம்பது வருட தேடலின் பின்னர் இறுதியாக விஞ்ஞானிகள் வெள்ளைக்குள்ளன் வகை விண்மீனைக் கண்டறிந்துவிட்டனர். அண்ணளவாக பூமியின் அளவைக்கொண்ட இந்த வெள்ளைக்குள்ளன், பூமியைவிட 200,000 மடங்கு திணிவைக் கொண்டது, மேலும் பூமியைப் போல 100 மில்லியன் மடங்கு காந்தப்புலத்தையும் கொண்டுள்ளது.

வெள்ளைக்குள்ளன் ஒரு பல்சார் / துடிப்பு விண்மீன் வகை விண்மீனாகும். 1960 களில் எதேர்ச்சையாக கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது பல்சார் விண்மீனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பல்சார் விண்மீன்களை இதுவரை நாம் கண்டறிந்துள்ளோம். ஆனால் வெள்ளைக்குள்ளன் வகை விண்மீன்களை இதுவரை பார்த்ததே இல்லை.

முதன் முதலாக 1960 களில் விண்வெளியில் இருந்துவரும் ரேடியோ சிக்னல்களை தேடிக்கொண்டிருக்கும் போது திடிரென அகப்பட்டவர் தான் முதலாவது பல்சார், நண்டு நெபுலாவில் இருக்கும் இதனை உணர்ந்த விஞ்ஞானிகள், இது ஒரு வெள்ளைக்குள்ளன் வகை விண்மீனாக இருக்கவேண்டும் என்று கருதினர். ஆனால் இந்த பல்சார் மிக வேகமாக சுழன்றுகொண்டு / துடித்துக்கொண்டு இருந்ததால் இதனை ஒரு நியுட்ரோன் விண்மீன் என உணர்ந்துகொண்டனர்.

white-pulsar_1024

நியுட்ரோன் விண்மீன் மற்றும் வெள்ளைக்குள்ளன் வகை விண்மீன் இரண்டுமே பெரிய விண்மீன்களின் இறப்பிலே உதிக்கின்றன. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம், வெள்ளைக்குள்ளன் வகை விண்மீன், ஒப்பீட்டளவில் திணிவு குறைந்த விண்மீனின் சுமுகமான இறப்பின் பின்னர் உருவாகிறது. ஆனால் நியுட்ரோன் விண்மீன், திணிவு அதிகமான விண்மீன் ஒன்றின் சுப்பர்நோவா வெடிப்பின் பின்னர் உருவாகிறது.

ஆகவே இரண்டு விண்மீன்களுக்கும் இடையிலான ஆரம்ப திணிவின் அளவு பெரிதாக வேறுபடுவதால், அதிக திணிவு கொண்ட நியுட்ரோன் விண்மீன் பிறக்கும் போது கூடிய வெப்பநிலையுடனும், வேகமான சுழற்சி மற்றும் அதிகளவான காந்தப்புலம் போன்ற பண்பைக்கொண்டிருக்கும்.

முதலாவது பல்சாரின் கண்டுபிடிப்பு, அது ஒரு வகையான நியுட்ரோன் விண்மீன் என்பதை மாத்திரம் எமக்குச் சொல்லவில்லை. அதற்கும் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியொரு விண்மீன் இருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதிய ஒரு வகை விண்மீனான ‘நியுட்ரோன் விண்மீன்’ என்று ஒன்று உண்டு என்றும் உறுதிப்படுத்தியது.

பல்சாரின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு, இரட்டை விண்மீன் தொகுதிகளில் பல்சார் இருப்பதற்கான வாய்ப்பையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இப்படியான இரட்டை விண்மீன் தொகுதியில் ஒரு விண்மீன் நியுட்ரோன் விண்மீனாகவோ அல்லது வெள்ளைக்குள்ளன் வகை விண்மீனாகவோ இருக்க மற்றையது நமது சூரியனைப் போன்ற சாதாரண விண்மீனாக இருக்க வாய்ப்புள்ளதாக கருதினர். ஆனால் இதுவரை வெள்ளைக்குள்ளனை கொண்டுள்ள விண்மீன் தொகுதியை நாம் கண்டறியவில்லை.

தற்போது பிருத்தானிய வோர்விக் பல்கலைக்கழகமும், தென்னாபிரிக்க விண்வெளி ஆய்வுக்கழகமும் சேர்ந்து AR Scorpii என்னும் விண்மீனை வெள்ளைக்குள்ள பல்சார் வகை விண்மீனாக வகைப்படுத்தியுள்ளது. இந்த AR Scorpii பூமியில் இருந்து வெறும் 380 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.

இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை சுழலும் இந்த வெள்ளைக்குள்ளன், தனக்கு அருகில் இருக்கும் சிவப்புக்குள்ளன் வகை விண்மீனை தனது சக்திவாய்ந்த ஏற்றமுள்ள துணிக்கைகளால் இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை தாக்கிக்கொண்டே இருக்கிறது.

AR Scorpii யை நாம் பெரியதொரு டைனமோ என்று கருதலாம் – பூமியின் அளவுள்ள டைனமோ. இது இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை சுழல்வதால் தனக்கு அருகில் இருக்கும் அடுத்த விண்மீனில் அதிகளவாக மின்சாரத்தை உருவாக்குகிறது. இந்த மின்சாரம் அந்த விண்மீனில் இருந்துவரும் ஒளியில் மாற்றங்களை செய்கிறது.

முதன்முதலாக இப்படியொரு வெள்ளைக்குள்ளன் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், இதனைப் போல வேறு பல வெள்ளைக் குள்ளன்களையும் கண்டறிய விஞ்ஞானிகள் குழு தயாராகிறது.

தகவல்: sciencealert மற்றும் nature astronomy

http://www.sciencealert.com/the-first-white-dwarf-pulsar-in-the-universe-has-been-found-after-half-a-century-of-searching

http://www.nature.com/articles/s41550-016-0029


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam