பூமியின் காந்தப்பட்டையை படமிடல்

ஆபத்தான பிரபஞ்ச கதிர்வீச்சில் இருந்தும், பூமியைத் தாக்கும் துணிக்கைகளிடம் இருந்தும் பூமியை பாதுகாக்க பூமியைச் சுற்றி கூடு ஒன்று காணப்படுகிறது. இந்தக் கூடு இல்லாவிட்டால் பூமியில் உயிர் என்பது தோன்றியிருக்காது. இந்தக் கூடு கண்களுக்கு புலப்படாத கூடு. இதுதான் பூமியின் காந்தப்புலம்.

பூமியின் காந்தப்புலத்தின் பெருமளவு, பூமியின் அகப்பகுதியில் உருகிய நிலையில் இருக்கும் இரும்புத் தாதினால் உருவானவை. ஆனால் காந்தப்புலத்தில் சிறிய பகுதி பூமியின் மேற்பரப்பிற்கு அருகில் இருக்கும் காந்தப் பாறைகளால் உருவாக்கப்பட்டுள்ளது.

பூமியின் மேலோடு திண்மப் பாறையால் ஆனது, இதனில் தான் நாம் வாழ்கிறோம். பூமி ஒரு ஆப்பிள் பழத்தின் அளவிருந்தால், மேலோடு ஆப்பிள் பழத்தின் தோலின் தடிப்பே இருக்கும். மற்றைய பாகங்களோடு ஒப்பிடும் போது, பூமியின் மேலோடு தடிப்பு மிகக்குறைந்தது. சமுத்திரத்திற்கு அடியில் இது அண்ணளவாக 10 கிமீ தடிப்பாக காணப்படுகிறது, அதேவேளை கண்டங்களுக்கு கீழே இருக்கும் மேலோடு 80 கிமீ வரை தடிப்பாக காணப்படுகிறது.

பூமியின் மேலோட்டை ஆராய்வது ஒன்று இலகுவான காரியமில்லை. இலகுவாக துளை ஒன்றை இட்டுவிட்டு அதனூடாக அதனது அமைப்பு மற்றும் ஆக்கக்கூறை அறிந்துவிட முடியாது. இதற்கு நாம் Swarm செய்மதிகளை பயன்படுத்துகிறோம்.

Swarm பூமியை சுற்றிவரும் செய்மதிக் குழுவாகும். இதனது நோக்கம், பூமியின் மேலோட்டால் உருவாக்கப்படும் வலிமை குறைந்த காந்தப்புலத்தைப் பற்றி ஆய்வு செய்து எமக்கு அதனைப் பற்றி விரிவாக புரிந்துகொள்ள உதவுவதே.

மூன்று வருடங்களாக சேகரித்த தகவல்களில் இருந்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை உருவாக்கப்பட்ட வரைபடங்களில் பூமியின் காந்தபுலத்தை மிகத் துல்லியமாக காட்டும் வரைபடம் இதுவாகும்! படத்தில் காந்தப்புலம் குறைவாக இருக்கும் பிரதேசங்கள் நீல நிறத்திலும், காந்தப்புலம் அதிகமாக இருக்கும் பிரதேசங்கள் சிவப்பு நிறத்திலும் காட்டப்பட்டுள்ளது. இந்த காந்தப்புல மாறுபாட்டிற்கு காரணம் பூமியின் மேலோட்டின் அமைப்பாகும்.

Magnetic_field_Bangui
படம்: ESA

இதில் பல விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான பகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன. இதில் ஒன்று Central African Republic எனப்படும் நாட்டில் காணப்படுகிறது. இங்கு காந்தப்புலத்தின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது. இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் சரியாக கண்டறியப்படவில்லை. ஆனால் சில விஞ்ஞானிகள் இதற்குக் காரணம் இந்தப் பிரதேசத்தில் 540 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் விழுந்த ஒரு விண்கலாக இருக்கலாம் என்கின்றனர்.

http://www.esa.int/spaceinvideos/content/view/embedjw/484033

மேலதிக தகவல்

இந்தப் புதிய வரைபடத்தில் இருக்கும் இன்னொரு குறிப்பான விடயைம் சமுத்திரஅடியில் காணப்படும் கோடுகள் போன்ற அமைப்பாகும். இது ஒரு காலத்தில் நம் பூமியின் காந்தபுலத்தின் வடதுருவமும் தென் துருவமும் திசை மாறியதற்கு சான்றாக இருக்கிறது. இது ஒவ்வொரு நூறாயிரம் வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது. இது உங்கள் திசை காட்டி வடக்கிற்கு பதிலாக தெற்கை காட்டவைக்கும்!


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://www.unawe.org/kids/unawe1710/


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam