வில்லியம் ஹெர்ச்செல் : இசை ஞானியில் இருந்து இயற்பியலாளர் வரை

18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் வில்லியம் ஹெரச்சல். 1738 இல் ஜெர்மனியில் உள்ள ஹனோவர் எனுமிடத்தில் பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே இசையில் ஆர்வம் கொண்டு பல்வேறு இசைக்கருவிகளில் தேர்ச்சிபெற்றார். ஆனாலும் அறிவியலிலும் ஆர்வம் இருந்தது.

19 வயதில் ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு குடிபெயர்ந்த பின்னரே இவரது அறிவியல் ஆர்வம், குறிப்பாக விண்ணியலில் அதிகரித்தது. இவரது சகோதரி கரோலின் ஹெர்ச்செல்லின் உதவியுடன் ஒளித்தெறிப்பு தொலைக்காட்டி ஒன்றை வடிவமைத்து அதன் மூலம் இரவு வானின் அற்புதங்களை ஆராயத்தொடங்கினார். மே 1773 இல் இருந்து தனது தங்கை கரோலினுடன் வீட்டுத்தோட்டத்தில் இருந்து இரவுவானை தினமும் அவதானிப்பது தொடங்கிற்று.

800px-William_Herschel01

விண்ணில் தெரியும் பல புள்ளிகள் உண்மையில் ஒரு விண்மீன் அல்ல மாறாக அவை இரண்டு விண்மீன்கள் மிக மிக அருகில் இருப்பதால் வெறும் கண்களுக்கு ஒரு போல தெரிகிறது என்று தனது தொலைநோக்கி ஆய்வுகளில் கண்டறிந்தார்.

மார்ச் 13, 1781 இரவில் அவரது வீட்டுத் தோட்டத்தில் இருந்து வானை அவதானிக்கும் போது ஒரு ஆச்சர்யம் நிகழ்ந்தது. முதலில் அது ஒரு நெபுலா அல்லது வால்வெள்ளி என்றே ஹெரச்சல் கருதினார், ஆனால் நீண்ட அவதானிப்புகளுக்கு பிறகும், வேறு பலரின் அளவீடுகளுக்கு பின்னரும் அது ஒரு பெரிய கோள் என்று முடிவானது. அதுதான் இன்று நாமறியும் யுறேனஸ் கோள்.

தனது வாழ்நாளில் நூற்றிற்கும் மேற்பட்ட இருமைவிண்மீன்கள், ஆயிரக்கணக்கான நெபுலாக்கள் என்பவற்றை அட்டவனைப்படுத்தினார்.

அதுமட்டுமல்லாது, கட்புலனாக ஒளியின் அலைநீளத்தில் இருக்கும் அகச்சிவப்பு கதிர்வீச்சைக் கண்டறிந்தவரும் இவரே. இதன் மூலம்சூரியனில் இருந்து பட்புலனாகும் ஒளி மட்டுமல்ல, கண்களுக்கு புலப்படாத வேறுபல கதிர்வீச்சுக்களும் வருகின்றன என்று முதன்முதலில் முடிவெடுத்தவர் இவரே.

எவ்வளவு புகழ் வந்தாலும், இறுதிவரை ஒரு சாதாரண விஞ்ஞானியாகவே, இயற்கயின் அற்புதங்களை கண்டறிய ஆவல் கொண்ட சிறுவனாகவே தன்னை அவர் நினைத்துக்கொண்டார். விஞ்ஞானத்தின் வரலாற்றில் மிகச் மிகச்சிறந்த கதைகள், இயற்கை மீது கொண்ட காதலால் உருவானது என்பதனை யாரும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam