பகலில் பாலூட்டிகளை மிரட்டிய டைனோசர்கள்

பாலூட்டிகளான நாம் டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருக்காவிடினும், எமது பாலூட்டி முன்னோர்கள் ஜுராசிக் காலம்தொட்டு வாழ்ந்திருகின்றனர். இக்காலத்தில் நிலத்தை டைனோசர்கள் ஆக்கிரமித்திருந்தபோது, அக்கால பாலூட்டிகள் சிறிய பெருச்சாளி அளவில் காணப்பட்டன – பெரும்பாலும் தாவரங்களையும், பூச்சிகளையும் உண்டு தங்கள் காலத்தை போக்கின. டைனோசர்களோடு போட்டி போடுமளவுக்கு அக்கால பாலூட்டிகளுக்கு வலு இருக்கவில்லை எனலாம்.

ஒரு மேலதிக தகவல் என்னவென்றால், 2011 இல் சீனப் பகுதியில் சீன விஞ்ஞானிகளால் கண்டெடுக்கப்பட்ட படிமங்கள் Juramaia என்கிற ஒரு சிறிய பாலூட்டி 160 மில்லியன் காலத்திற்கு முற்பட்டதாக தற்போது அறியப்படுகிறது. கிட்டத்தட்ட ஜுராசிக் காலத்தின் ஆரம்பப்பகுதி. இதனால் நமக்கு தெரிய வருவது, பாலூட்டிகளின் கூர்ப்பு நாம் கணக்கிட்டததை விட முன்னரே தொடங்கிவிட்டது என்பதுதான்.

Skeletal and fur reconstructions of the Jurassic eutherian Juramaia sinensis
Juramaia

இந்தக் கட்டுரையின் விடயத்திற்கு வருவோம். பாலூட்டிகளில் பெரும்பாலானவை, இரவாடுதல் (nocturnality) பண்பைக் கொண்டுள்ளன. இரவாடுதல் என்பது, இரவு வேளையில் சுறுசுறுப்பாக இயங்கி, வேட்டையாடி, பகல் வேளையில் உறங்கும் விலங்கின் பண்பைக்குறிக்கும். இந்த விலங்குகள் இரவாடிகள் (nocturnal animals) என அழைக்கப்படும். இப்படியான விலங்குகளுக்கு கண்கள் பெரிதாகக் காணப்படும், காரணம் என்னவென்றால், குறைந்த ஒளியிலும் தெளிவாக பார்க்க வேண்டும் அல்லவா? அதுதான்!

தற்போது பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலான பாலூட்டிகளின் கண்கள், பகலில் வாழும் உயிரினங்களின் கண்களைவிட, இரவாடும் விலங்குகளின் கண்களை ஒத்தே காணப்படுகின்றன. இதனை அவதானித்த விழிப்பார்வை ஆய்வாளர் Gordon Lynn Walls, 1942 இல் “இரவாடல் இடர்பாடு” என்ற ஒரு புதிய கருதுகோள் ஒன்றை முன்வைத்தார். அதாகப்பட்டது, முன்னொரு காலத்தில் எல்லா பாலூட்டிகளும் இரவாடிகளாகவே இருந்திருக்கவேண்டும் என்பதே அந்தக் கருதுகோள்!

Loris
ஒளி குறைந்த வேளையில் நடமாடக் கூடியவாறு பெரிய கண்களைக் கொண்ட இராவாடி பாலூட்டி.

Walls இன் கணக்குப்படி, இந்த “இரவாடல் இடர்பாடு” மேசொசொயிக் சகாப்த்தத்தில் (Mesozoic Era) இடம்பெற்றிருக்க வேண்டும். இந்தக் காலகட்டம் அண்ணளவாக 252 – 66 மில்லியன் வருடங்களுக்கு முந்தையது. கிரீத்தேசியக் காலம் (145 million years – 66 million years), ஜுராசிக் காலம் (201.3 million years – 145 million years), டிராசிக் காலம் (251.9 million years – 201.3 million years) ஆகிய காலகட்டங்கள் எல்லாமே மேசொசொயிக் சாகாப்த்த்திலேயே உள்ளடங்குகிறது.

Mesotimeline

இந்தக் காலகட்டத்தில் டைனோசர்கள் வகையறாக்கள் நிலத்தை ஆக்கிரமித்திருந்த்தால், பாலூட்டிகளால் பகல் வேளையிலே வெளியே நடமாடி உணவைப் பெற முடியவில்லை. 65 மில்லயன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் அழியும் வரை இந்த நிலையே காணப்பட்டது, ஆகவே நமது முன்னோர்களான பாலூட்டிகள் இரவு வேளையில் உணவைத் தேடி இரவாடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இந்தக் கருத்தில் உள்ள சிக்கல் என்னவென்றால், இன்றும் பல பாலூட்டிகளின் கண்கள் இரவாடிகளின் கண்களை ஒத்ததாக காணப்படுவதால், எக்கால கட்டத்தில் பாலூட்டி விலங்குகள் பகலாடிகளாக மாற்றமடைந்தன என்று உறுப்பியலை அடிப்படையாக வைத்து கணிக்க முடியாது.

அடுத்த சிக்கல் நாம் எம்மைப் பற்றியும், பரிசோதனைக் கூடத்தில் வைத்திருக்கும் குரங்குகள், மற்றும் எலிகள் போன்ற பாலூட்டிகளின் நடத்தைக் கோலத்தையே மிகவும் உன்னிப்பாக ஆய்வு செய்துள்ளோம். உலகில் 5488 வகையான பாலூட்டி இனங்கள் உள்ளன, அவை 1299 பேரினங்களில் 153 குடும்பங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 29 வரிசைகளில் அடங்குகின்றன.

ஆகவே பல்வேறு குடும்பங்களில் இருக்கும் பாலூட்டிகளின் நடத்தைக்கோலத்தை ஆய்வு செய்ய, இஸ்ரேல் மற்றும் இங்கிலாந்து உயிரியலாளர்களும் மரபியலாளர்களும் சேர்ந்து இதுவரை 2415 வகையான வேறுபட்ட பாலூட்டி இனங்களின் நடத்தைக் கோலத்தை ஆய்வு செய்துள்ளனர். இதில் 29 வரிசைகளில் உள்ள பாலூட்டிகளில் 90 வீதமானவை அடங்கும். இந்தப் பாலூட்டிகளின் நடத்தைக் கோலத்தை ஆய்வு செய்வதன் மூலம், பாலூட்டிகளின் முன்னோர்களின் நடத்தைக் கோலத்தை அறிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதன் மூலம் எப்போது பாலூட்டிகள் பகலாடிகளாக மாற்றமடைந்தன என்று கண்டறியலாம்.

பல்வேறுபட்ட விஞ்ஞான முறைமைகளைப் பின்பற்றி செய்த ஆய்வுகளுக்குப் பிறகு இரவாடல் இடர்பாட்டின் கூற்றை ஆதரிப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அதாவது ஒரு காலத்தில், குறிப்பாக, டைனோசர்கள் நடமாடிய காலத்தில் இருந்த பாலூட்டிகள் எல்லாமே இரவாடிகளாக இருந்துள்ளன. பகலாடி பாலூட்டிகள் முதன் முதலில் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு (செனோசொயிக் சகாப்தம்) முன்னரே தோன்றியிருக்கவேண்டும். ஆனால் முதலில் இந்தப் பாலூட்டிகள் இரவாடிகளாகவும் இல்லாமல், பகலாடிகளாகவும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்டத்தாக (cathemeral phase) இருந்ததாக கருதப்படுகிறது.

முதன் முதலில் முழுமையான பகலாடிப் பண்பைக் கொண்ட பாலூட்டியாக உருவெடுத்தது வாலில்லாக் குரங்குகள், குரங்குகள் ஆகியவற்றுக்கு பொதுவாக இருக்கும் மிக அண்மைய மூதாதேயர் அல்லது யானைமூஞ்சுறு எனப்படும் சிறிய பாலூட்டி விலங்கின் மிக அண்மைய மூதாதேயர் ஆகும்.

யானை மூஞ்சுறு
யானை மூஞ்சுறு

தகவல்: ArsTechnica, Nature Ecology and Evolution


மேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்:- https://facebook.com/parimaanam