பிறவிண்மீன் கோள்களுக்கான தேடலின் ஆரம்பம்: பகுதி 1

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் (ஏப்ரல் 16, 2018) நாசா TESS (Transiting Exoplanet Survey Satellite) எனப்படும் செய்மதியை SpaceX நிறுவனத்தின் Falcon 9 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பிவைத்தது. சூரியனுக்கு அருகில் இருக்கும் 200,000 விண்மீன்களை அலசி ஆராய்ந்து அதனைச் சுற்றி கோள்கள் இருகின்றனவா என்று கண்டறிவதே TESS இன் ஒரே குறிக்கோள்.

விண்மீன் ஒன்றைச் சுற்றிவரும் கோள் ஒன்று குறித்த விண்மீனிற்கும் TESS இற்கும் இடையில் வரும் போது, குறித்த விண்மீனின் ஒளியின் அளவு குறைவடையும். இந்த ஒளி வித்தியாசத்தை TESS துல்லியமாக கணக்கிட்டு அந்த ஒளி வித்தியாசத்திற்கு காரணமாக இருப்பது அதனைச் சுற்றிவரும் கோள்களா என்று தரவுகளை சேகரிக்கும்.

TESS தொலைநோக்கி

இதற்கு முன்னரும், நாசா Kepler எனும் செய்மதியை எமக்கு அருகில் இருக்கும் விண்மீன்களை சுற்றிவரும் கோள்களை கண்டறிய அனுப்பியிருந்தது. ஆனால் தற்போது சென்றிருக்கும் TESS Kepler செய்மதி ஆய்வுசெய்த பிரதேசத்தை விட 400 மடங்கு பெரிய பிரதேசத்தை ஆய்வு செய்யும்.

முதலாவது பிறவிண்மீன் கோள் 1995 இல் கண்டறியப்பட்டாலும், கெப்லரின் 2009 ஆம் ஆண்டு தேடலில் பல திடுக்கிடும் புதிர்கள் வெளிவரத் தொடங்கியதே பிறவிண்மீன் கோள்களை கண்டறிவதற்கான தேடலை முடுக்கியது எனலாம்.

இந்தக் கட்டுரையில் பிறவிண்மீன் கோள்களுக்கான தேடல் எப்படி தொடங்கியது மற்றும் அதில் எமக்குத் தெரியவந்த உண்மைகள் என்ன என்று பார்க்கபோகிறோம். நாம் மட்டும்தான் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கிறோமா என்கிற கேள்விக்கான விடை கிடைக்கும் வேளை நெருங்கிவிட்டதா? பார்க்கலாம்.

இரண்டு விண்ணியலாளர்களும் ஒரு ஹாட் ஜுபிட்டரும்!

சூரியத் தொகுதியைத் தாண்டி கோள்கள் இருகின்றனவா? என்கிற கேள்விக்கான விடை பல காலமாக விஞ்ஞானிகள் தொடக்கம் சாதாரண மக்கள் வரை கேட்கப்பட்ட ஒன்றுதான்.

பதினாறாம் நூற்றாண்டளவில் கியோர்டானோ புருனோ ஏனைய விண்மீன்கள் சூரியனைப் போன்றவையே என்றும் அவற்றைச் சுற்றி கோள்கள் இருக்கலாம் என்று கூறியதோடு நிற்காமல், அங்கே மனிதனைப்போல உயிரினங்களும் இருக்கலாம் என்று வெளிப்படையாக கருத்துக்கூறி வத்திக்கானின் கோபத்துக்கு ஆளாகி நெருப்பில் இட்டு எரிக்கப்பட்டு கொல்லப்பட்டது தனிக்கதை.

அக்காலத்தில் இருந்தே, அல்லது அதற்கு முன்னிருந்தே பலரும் பூமியைத் தாண்டி கோள்கள் இருக்கலாம் அங்கே உயிர்களும் இருக்கலாம் என்று நம்பியிருந்தனர். ஆனால் எல்லாமே வெறும் நம்பிக்கைதான். ஆனால் அதற்கான முதலாவது ஆதாரம் 1995 இல் எமக்குக் கிடைத்தது.

Michel Mayor மற்றும் Didier Queloz என்று இரண்டு விண்ணியலாளர்கள் 1995 இல் முதலாவது பிறவிண்மீன் கோள் ஒன்றைக் கண்டறிகின்றனர். அதனது வின்மீணிற்கு மிக மிக அருகில் சுற்றிவந்த இந்தக் கோள் நமது வியாழனின் அளவில் அண்ணளவாக பாதி அளவு. அதனது தாய் விண்மீனை வெறும் நான்கே நாட்களில் சுற்றிவந்துவிடும் அளவிற்கு மிக மிக அருகில் சுற்றிக்கொண்டிருக்கிறது இந்தக் கோள்.

Swiss astronomers Didier Queloz and Michel Mayor

இதற்கு 51 Pegasi b என தற்போது பெயரிட்டுள்ளனர்.

இந்தக் கோளை கண்டறிந்த முறைதான் அட்டகாசம். அதாவது இந்தக் கோள் அதனது தாய் விண்மீனை மிக மிக அருகில் வேகமாக சுற்றிவருவதால், இதனது ஈர்ப்புவிசை அந்த விண்மீனை அதனது சுழற்சிப் பாதையில் இருந்து சற்றே ஆட்டுகிறது. இதனை wobbling என்று அழைக்கின்றனர். அதாவது, இரண்டு பொருட்கள் ஒன்றையொன்று சுற்றும் போது, இரண்டுக்கும் பொதுவான ஈர்ப்புமையத்தை அச்சாகக் கொண்டே சுற்றிவரும்.

திணிவான பொருளொன்று மிக அருகில் ஒரு விண்மீனைச் சுற்றிவரும் வேளையில் அதன் ஈர்ப்புவிசை காரணமாக பூமியில் இருந்து பார்க்கும் போது குறித்த விண்மீன் முன்னுக்கும் பின்னுக்கும் அசைவது போல தெரியும். அதெப்படி அவ்வளவு தொலைவில் இருக்கும் விண்மீன் முன்னுக்கும் பின்னுக்கும் அசைவது போல தெரியும் என்று நீங்கள் சந்தேகிக்கலாம்.

அதாகப்பட்டது, இப்படியாக விண்மீன் முன்னுக்கும் பின்னுக்கும் அசையும் போது அதனில் இருந்துவரும் ஒளியின் அலைநீளத்தில் மாற்றங்கள் உருவாகும். முன்னுக்கு பின்னுக்கு என்று சென்றுவரும் போது, அலைநீளம் கூடிக் குறைந்து தொடர்ச்சியான ஒரு கோலம் அல்லது அமைப்புமுறை ஒன்று உருவாகும்.

இப்படியான ஒரு அமைப்புமுறையை எம்மால் அவதானிக்க முடிந்தால், நிச்சயம் குறித்த விண்மீனை மிக அருகில் வேறு ஒரு பொருள் சுற்றிவருகிறது என்று கண்டறியலாம். அது வேறு ஒரு விண்மீனாக இருக்கும் பட்சத்தில் எம்மால் அதனையும் அவதானிக்கக்கூடியதாக இருக்குமல்லவா? அப்படி அவதானிக்க முடியாமல் போகும் போதும், மேலும் சில பண்புகளை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கும் போதும் அந்த மர்ம நபர் ஒரு கோள் என்ற முடிவுக்கு வரமுடியும்.

அப்படித்தான் இந்த ஐரோப்பிய குழு 51 Pegasi b ஐ கண்டறிந்தது. இவர்கள் கண்டறிந்ததை வேறு பல ஆய்வுக்குழுக்களும் தனிப்பட்ட ரீதியில் கண்டறிந்து உறுதிப்படுத்தவே, முதலாவது பிறவிண்மீன் கோள் என்ற ஒன்று இருப்பதற்காக முதலாவது ஆதாரம் எமக்கு கிட்டுகிறது.

இதற்கு அடுத்தகட்டமாக நூற்றுக்கணக்கில் விண்ணியலாளர்கள் மேலே குறிப்பிடப்பட்ட நுட்பத்தைப் பயன்படுத்தி வேறு பல பிறவிண்மீன் கோள்களை கண்டறிய தொடங்குகின்றனர்.

இந்த நுட்பத்தை பயன்படுத்தி கோள்களை கண்டறிவதில் இருக்கும் ஒரு முக்கிய விடையம், ஒரு விண்மீனிற்கு மிக அருகில் சுற்றிவரும் பாரிய கோள்களையே எம்மால் கண்டறிய முடியும். ஏனென்றால் அப்படியான கோள்களால் தான் போதியளவு ஈர்ப்புவிசையை குறித்த விண்மீன் மீது செலுத்தி அதனை முன்னும் பின்னும் அசைக்கக்கூடியவாறு இருக்கும்.

எனவே இக்காலகட்டத்தில் கண்டறியப்பட்ட கோள்களை அனைத்தும் விண்மீனிற்கு மிக மிக அருகில் சுற்றிவந்த ‘சூப்பர் ஜுபிட்டார்’ வகை பாரிய அரக்கர்களாகவே இருந்தன. ஒரு கட்டத்தில் இப்படியாக கோள்கள் தான் இந்த விண்மீன் பேரடை முழுதும் நிரம்பியிருக்குமோ என்ற அச்சமும் எழாமல் இல்லை.

நமது சூரியத் தொகுதியை நீங்கள் ஒப்பிட்டுப்பார்த்தால், ஜுபிட்டார் (வியாழன்) போன்ற பாரிய வாயு அரக்கர்கள் என அழைக்கப்படும் கோள்கள் சூரியனில் இருந்து அதிகளவு தொலைவிலேயே இருகின்றன. பாறையால் உருவான கோள்களே (பூமி, செவ்வாய், வெள்ளி மற்றும் புதன்) சூரியனுக்கு மிக அருகில் இருக்கின்றன. மேலும் வியாழன், சனி போன்ற பாரிய கோள்கள் பூமி சூரியனைச் சுற்றிவரும் பாதைக்கு வெளியே சூரியனைச் சுற்றிவருவது, பூமியில் உயிரினம் தோன்ற ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அதாவது, இப்படியாக வெளிச் சூரியத் தொகுதியில் காணப்படும் பாரிய கோள்கள், உட்சூரியத் தொகுதிக்குள் நுழையும் வால்வெள்ளிகள் மற்றும் சிறுகோள்களை தங்கள் ஈர்ப்புவிசையைக் கொண்டு கவர்ந்து / அவற்றின் பயணப்பாதையை மாற்றிவிடுவதால் பூமியில் மோதும் வால்வெள்ளிகளின் / சிறுகோள்களின் அளவு குறைவடைந்தது. உயிரினம் தோன்ற இப்படியாக நீண்ட மோதல்கள் அற்ற காலப்பரப்பு தேவை. இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் வியாழன் போன்ற கோள் ஒன்று பூமி போன்ற கோளொன்றில் உயிர் தோன்றக் காரணமாகும் என்று!

நமக்கெல்லாம் உயிர்ப்பிச்சை போட்ட வியாழன்!

எனவே, சூரியனுக்கு மிக மிக அருகில் வியாழன் போன்ற கோள்கள் தென்படவும், அப்படியான தொகுதியில் உயிரினம் உருவாகக்கூடிய பண்புகளைக் கொண்ட கோள்கள் இருப்பதுவோ, அல்லது துணைக்கோள்கள் இருப்பதுவோ அரிது என்று விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தனர்.

அடடா, சூரியத் தொகுதிக்கு அப்பால் இப்படியாக கோள்களை கண்டறிந்தும், அவற்றில் உயிர் இருப்பதற்கான சாத்தியக்கூறு மிக மிக அரிது அல்லது இல்லவே இல்லை என்று ஒரு நிலை வந்தால்? என்னசெய்வது!

ஆனால் முதலாவது கோள் கண்டறிந்து அடுத்த ஆண்டிலேயே வித்தியாசமான பிறவிண்மீன் கோள்கள் கண்டறியப்படுகின்றன. முதலாவது கோள் 70 Verginis – இதன் சுற்றுகைக் காலம் 116 நாட்கள். அடுத்த கோள் – 47 Ursae Majoris, இதன் சுற்றுகைக் காலம் 2.5 வருடங்கள். இந்தக் கோள்கள் குறித்த விண்மீன்களை மிக மிக அருகில் சுற்றிவரவில்லை எனவே இப்படியான கோள்களின் கண்டுபிடிப்பு பிறவிண்மீன் கோள்கள் பற்றி எம்மை மேலும் சிந்திக்கவைத்தது எனலாம்.

மேலே குறிப்பிட்ட கோள்களை கண்டறிந்த குழு அடுத்த பத்து வருடங்களில் 70 இற்கும் மேற்பட்ட கோள்களை கண்டறிந்தது. இவை அனைத்தும் பூமியில் இருக்கும் தொலைநோக்கிகளைக் கொண்டே கண்டறியப்பட்டன. 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு, பிறவிண்மீன்களை கண்டறிவதற்கு என்றே தனிப்பட்ட தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்புவது பற்றிய கருத்துக்கள் வலுப்பெற்றன. இதற்குக் காரணம் 1990 களில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஹபிள் தொலைநோக்கியின் வெற்றி என்றுகூட சொல்லலாம்.

ஏற்கனவே பெரிய ஒரு தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பிய அனுபவம் நாசாவிற்கு இருப்பதால், மீண்டுமொருமுறை அப்படியான ஒரு திட்டத்தை அவர்கள் முன்னெடுக்க தயங்கவில்லை.

நாசாவின் கெப்ளர் திட்டம் பிறந்தது.

தொடரும்…


படங்கள்: இணையம், தகவல்: நாசா, விக்கிபீடியா மற்றும் இணையம்