காலநிலை மாற்றம் வேகமாக புவியின் பல்வேறு பகுதிகளிலும் மாற்றங்களை உருவாக்கி வருவதை நாம் உணர்கிறோம். இதில் குறிப்பாக மிக மோசமாக தாக்கப்படுவது பூமியின் துருவங்களில் இருக்கும் பனிப்பாறைகளே. புவியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பால் வருடத்திற்கு 200 பில்லியன் டன் என்கிற வீதத்தில் அண்டார்டிக்காவின் பனி கரைகிறது!
தொண்ணூறுகளில் இருந்து பல ஆய்வு நிறுவனங்கள் அண்டார்டிக்கா பனியின் அளவை தொடர்ச்சியாக அளந்து வந்துள்ளன. பல செய்மதிகள் மூலம் இந்த தரவுகள் சேகரிப்பபட்டு தொடரான அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. தரவுகளை சேகரித்த சில செய்மதிகளால் பனிப்பாறைகளின் நிறையைக் கூட அளக்கும் திறன் உண்டு.
அண்டார்டிக்காவை ஆய்வாளர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கின்றனர். இதற்குக் காரணம் இந்த மூண்டு பகுதிகளும் வெவ்வேறு அளவுகளில் மாற்றங்களைக் காட்டுவதாலாகும். இதில் குறிப்பாக மேற்கு அண்டார்டிக்கா பிரதேசத்தில் உருகும் பனியின் அளவு வருடத்திற்கு 53 பில்லியன் டன்னில் இருந்து 159 டன்னாக அதிகரித்துள்ளது. இந்த மாற்றம் 1992 இல் இருந்து 2017 இற்குள் இடம்பெற்ற மாற்றம் தான்.
தென் அமெரிக்காவை பார்த்த மாதிரி இருக்கும் வடக்கு அண்டார்டிக்காவில் உருகும் பனியின் அளவு 7 டன்னில் இருந்து 33 டன்னாக வருடத்திற்கு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக நிலப் பனிப்பாறைகளுக்கு முன்னே நீரில் மிதந்துகொண்டிருக்கும் பனிப்பாறைகள் உடைந்து துண்டாவதே முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் கிழக்கு அண்டார்டிக்காவில் பனிப்பாறைகள் உருகுவதற்கு மாறாக அது வளர்கிறது. ஆனாலும் அண்டார்டிக்காவின் மற்றைய பிரதேசங்களில் உருகும் பனியின் அளவோடு ஒப்பிடும் போது இங்கே வளரும் அளவு ஆண்டுக்கு வெறும் ஐந்து பில்லியன் டன் மட்டுமே.
இந்த மாறுபாடுகளைக் கொண்டு சிலர் ஒரு பக்கம் கரைந்தாலும் மறு பக்கம் வளர்கிறது. இது இயற்கைதான் என்று கருத்து கூற வாய்ப்பு உண்டு. ஆனால் உருகும் வீதத்துடன் ஒப்பிடும் போது, இந்த வளர்ச்சி வீதம் ஒரு பொருட்டே இல்லை என்று இந்தனை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் குழு கூறுகிறது.
வருடம் ஒன்றிற்கு கடல் நீர் மட்டம் 3mm வரை அதிகரிக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருப்பினும், முக்கிய பங்காளியாக இருப்பது அண்டார்டிக்காவில் உருகும் பனிப்பாறைகள் தான்.
1992 இல் இருந்து இதுவரை அண்ணளவாக 2.7 ட்ரில்லியன் டன் பனி அண்டார்டிக்காவில் இருந்து உருகியுள்ளது. இது கடல் நீர் மட்டத்தை 7.5mm இற்கும் அதிகமாக இதுவரை உயர்த்தியுள்ளது. இது சிறிய ஒரு மாற்றம் என்று நீங்கள் கருதலாம், ஆனால் சிறுதுளி பெருவெள்ளம் போல் சிறிய கடல் மட்ட மாற்றம் கூட பெரியளவில் பூமியின் காலநிலையை மாற்றும் சக்திக்கு வித்திடும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.