இந்த வருடத்தில் தென் அரைக்கோளத்தில் வெப்பமான கலிபோர்னியா தொடக்கம் பனி நிறைந்த ஆர்டிக் வட்டம் வரையில் அதிகளவான காட்டுத்தீக்கள் பரவியதை நாம் பார்க்கலாம்.
இதில் ஒரு தீ போர்த்துக்கல் நாட்டில் உள்ள மொன்சிக்கே எனும் ஊரினூடாக பரவியதில் அண்ணளவாக 50 பேர் காயமடைந்ததுடன் 2000 இற்கும் அதிகமான மக்கள் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய சூழ்நிலைக்கும் ஆளாக்கியது. இந்த தீயை அணைக்க 1000இற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் பாடுபட்டனர்.
இதில் முக்கியமான விடையம் என்னவெனில், மூன்று மாதங்களுக்கு முன்னர் போர்த்துக்கல் நாட்டில் எங்கெங்கெல்லாம் தீ பரவக்கூடிய ஆபத்து உள்ளது என ஒரு மேப் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கினர். அதில் மிகக் கூடிய காட்டுத்தீ ஆபத்து உள்ள இடம் என்று அவர்கள் குறித்துக்கொண்டது – மொன்சிக்கே.
அவர்களுக்கு அது முன்கூட்டியே எப்படி தெரிந்தது?
காட்டுத்தீ உருவாக அதற்கு முக்கியமாக மூன்று காரணிகள் தேவை: முதலாவது மூலம், சிகரெட் அல்லது கூடார முற்றலில் பற்றவைக்கும் நெருப்பின் ஒரு துளி, சிலவேளை மின்னல் கூட காரணமாகலாம். இரண்டாவது எரிபொருள், பொதுவாக காட்டில் இருக்கும் மரங்கள்தான். குறிப்பாக காய்ந்த சருகுகள் மற்றும் புற்கள், ஒடிந்து விழுந்த கிளைகள். அடுத்தது சரியான காலநிலை. அதிக வெப்பநிலை, போதியளவு காற்று மற்றும் உலர்ந்த சூழல் வேகமாக நெருப்பு பரவக் காரணமாகும்.
ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு முறை வானில் பல கிமீ உயரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் செய்மதிகள் ஐரோப்பாவை முழுமையாக ஸ்கேன் செய்கின்றன. இவை காலநிலை, தாவரங்கள் மற்றும் காட்டுத்தீயால் உருவாகும் வெப்பம் என்பவற்றைப் பற்றிய முழுத்தகவலையும் எமக்குத் தரும்.
இந்தத் தரவுகளை காலநிலை எதிர்வுகூறும் சுப்பர்கணனிகளுடன் இணைத்துவிட்டால், இந்த செய்மதிப் படங்கள் எமக்கு அருமையான தகவல்களைக் காட்டுகின்றன. அதாவது கட்டுப்பாட்டில் கொண்டுவரக்கூடிய ஆபத்தற்ற தீ, ஊரையே அழிக்கும் கட்டுக்கடங்கா காட்டுத்தீயாக மாறும் அந்த பாயிண்ட் எது என்பதை இந்தத் தகவல்கள் எமக்கு காட்டுகின்றன.
இந்த பாயிண்ட் எது என்று அறிந்துகொண்ட விஞ்ஞானிகள், போர்த்துக்கல் நாட்டில் ஆபத்தான காட்டுத்தீ பரவக்கூடிய இடங்களை சரியாக கணித்துக் கூறினர். வெகு விரைவில் இப்படியான செய்மதிகளைக் கொண்டு மற்றைய நாடுகளிலும் பரவக்கூடிய காட்டுத்தீ பற்றி எம்மால் முன்கூட்டியே அறிந்துகொள்ளக் கூடியவாறு இருக்கும்!
காட்டுத்தீ பற்றிய முன்கூட்டிய அறிவிப்பு காடுத்தீயைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடும் தீயணைப்பு வீரர்களுக்கு மிக முக்கிய வரப்பிரசாதமாகும். அதுமட்டுமல்லாது, தீ வரமுன்னரே அரசாங்கங்கள் பல கட்டுப்பாடுகளை விதித்து காட்டுத்தீ பரவக் காரணமாக இருக்ககூடிய மூலத்தை தடுக்கலாம்.
மேலதிக தகவல்
உலகில் 90% மான காட்டுத்தீ மனிதனின் கவனக்குறைவால் ஏற்படுகிறது. இதில் பல காட்டுத்தீக்கு காரணம் அணைக்காமல் விட்டுச்செல்லும் சிகரெட் பஞ்சுகள், கூராட முற்றலில் அணைக்காமல் விட்டுச்செல்லும் நெருப்பு மற்றும் வாகன ஸ்டார் ஸ்பார்க் போன்றவை ஆகும்.