ஒரு மென்மையான அரக்கன்

பூமியில் நாம் நிர்மானிக்கக்கூடிய கட்டமைப்புகளுடன் ஒப்பிடும் போது விண்வெளியில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் அளவில் மிகப் பெரியவை. அவற்றில் சிலவற்றின் அளவை நம்மால் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாது!


ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி அளவில் மிகப்பெரிய சுருள் விண்மீன் பேரடை ஒன்றை படம்பிடித்துள்ளது.

படவுதவி: NASA, ESA, and B. Holwerda (University of Louisville)

இந்த விண்மீன் பேரடையை “UGC 2885” என அடையாளமிட்டுள்ளனர். பால்வீதி உட்பட அருகில் இருக்கும் ஐம்பது விண்மீன் பேரடைகளின் தொகுதியாக கருதப்படும் “உள்ளூர் பிரபஞ்சத்தில்” (Local universe) இருக்கும் மிகப்பெரிய பேரடை இதுவாகத்தான் இருக்கும். நமது பால்வீதி போல 2.5 மடங்கு அகலமானதும் 10 மடங்கிற்கும் அதிகமான விண்மீன்களையும் இது கொண்டுள்ளது.

அசுர அளவில் இந்தப் பேரடை இருந்தாலும் விண்ணியலாளர்கள் இதனை “மென்மையான அரக்கன்” என்றே அழைக்கின்றனர். இதற்கு காரணம் பல பில்லியன் வருடங்களாக எந்தவொரு பெரும் செயற்பாடுமின்றி அமைதியாக விண்வெளியின் அமர்ந்திருப்பது போல இது இருப்பதுதான். ஸ்டாரோ மூலம் ஜூஸ் மெதுவாக உறிஞ்சிக் குடிப்பதுபோல இந்தப் பேரடையும் மெதுவாக அதைச் சுற்றியுள்ள வாயுக்களை உறிஞ்சி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது.

விண்ணியலாளர்கள் இந்த விண்மீன் பேரடை இவ்வளவு பெரிதாக வளர்ந்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஆய்வுகளை செய்கின்றனர். இது விண்வெளியில் மிகவும் தனித்த இடத்தில் இருப்பதால் இதன் வாழ்வுக்கு காலத்தில் வேறு ஒரு பேரடையுடனும் மோதி அதன் உருவம் சிதையாமல் இருப்பதும் ஒரு காரணமாக கருதமுடியும்.

படவுதவி: NASA, ESA, and B. Holwerda (University of Louisville)

மேலதிக தகவல்

படத்தில் மிகப் பிரகாசமாக விண்மீன் பேரடையின் இடப்புறத்தில் தெரியும் விண்மீன் உண்மையில் இந்தப் பேரடையில் இல்லை. 232 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இந்தப் பேரடைக்கும் எமக்கும் இடையில் இந்த விண்மீன் நமது பால்வீதியில் இருக்கிறது.