இரும்புத் தணலென பெய்யும் மழை

சில கோடை கால மாதங்களில் நாம் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்று குறைபட்டுக்கொள்வதுண்டு. உலோகமே உருகிவிடும் அளவிற்கு நாளாந்த வெப்பநிலை கொண்ட கோள் ஒன்றில் வாழ்வதைப் பற்றி உங்களால் கற்பனை செய்யமுடியுமா?

ஐரோப்பிய தெற்கு அவதானிப்பகத்தின் மிகப்பெரும் தொலைநோக்கி (Very large Telescope) கோள் ஒன்றைக் கண்டறிந்துள்ளது. அதன் வெப்பநிலை 2400 பாகை செல்சியசிற்கும் அதிகமாகும். இது நாம் கேக் வெதுப்பகத்தின் வெப்பநிலையைபோல 13 மடங்கு அதிகம்.

இரும்பு நீராவிபோல ஆவியாகி வளிமண்டலம் எங்கும் நிறைந்து பின்னர் குளிரால் ஒடுங்கி மழையாக பொழிவதை காட்டும் சித்திரம். படவுதவி: ESO, M. Kornmesser

WASP-76b எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விசித்திர உலகம், பூமியில் இருந்து 640 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.

இதன் காலைநேர வளிமண்டல வெப்பநிலை உலோகத்தை உருக்கி ஆவியாக்கும் அளவிற்கு அதிகமாகும். பின்னர் வேகமான புயல்காற்று இந்த இரும்பாவித் துணிக்கைகளை குளிரான இரவான பக்கத்திற்கு எடுத்துச் செல்லும் அங்கே இந்த இரும்பு ஆவி ஒடுங்கி இரும்பு மழையாக பொழிகிறது.

இதற்கு முக்கிய காரணம் இந்தக் கோள் அதன் தாய் விண்மீனுடன் ஈர்ப்புவிசை பூட்டலில்(tidal locking) இருப்பதுதான். எனவே கோளின் ஒரு பக்கம் எப்பொழுதும் விண்மீனைப் பார்த்தவாறு பகலாகவும் மறுபக்கம் எப்பொழுதும் இரவாகவும் இருக்கும்.

இந்தக் கோளின் அதிகூடிய வெப்பநிலை காரணமாக மூலக்கூறுகளும் உடைந்தது தனித்தனி அணுக்களாகின்றன. இரும்பு போன்ற உலோகங்கள் வளிமண்டலத்தில் ஆவியாகின்றன. மேலும் இதம் வெப்பநிலையில் பெருமளவு மாற்றம் பகல் வேளையிலும் இரவு வேளையிலும் நிகழ்வதால் மிகவேகமாக புயல்காற்றையும் இந்த உலகம் சந்திக்கிறது.

இது நாம் சென்று பார்க்க ஆசைப்படக்கூடாத ஒரு கோள் எனலாம்.

படவுதவி: ESO, M. Kornmesser

மேலதிக தகவல்

இதுவரை 4100 இருக்கும் அதிகமான பிறவிண்மீன் கோள்களை நாம் கண்டறிந்துள்ளோம். விண்ணியலாளர்கள் பலவிதமான நுட்பங்களைக் கொண்டு இந்த கோள்களை கண்டறிகின்றனர். இவற்றில் முக்கியமான இரண்டு நுட்பங்கள், ஒன்று விண்மீன் தள்ளாட்ட அவதானிப்பு முறை, இரண்டு விண்மீன் உருப்பெருக்கி முறை.