பிரபஞ்ச மோதல்கள்

பிரபஞ்சத்தின் அளப்பரிய அளவு காரணமாக விண்வெளியில் பொருட்கள் மோதுவது என்பது அரிதான விடையம் தான். அதிலும் அரிது இப்படியான மோதலின் சுவடுகளை கண்டறிதல். அதனைதான் விண்ணியலாளர்கள் குழு ஒன்று கண்டறிந்துள்ளது!

NASA/ESA வின் ஹபிள் விண்வெளி தொலைநோக்கியை கொண்டு வளரும் தூசு மண்டலத்தை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர். போமல்ஹாட் (Fomalhaut) எனப்படும் விண்மீனிற்கு அருகில் இரண்டு பாரிய விண்வெளிப் பொருட்கள் மோதிய அரிதான நிகழ்வு காரணமாக இந்த தூசு மண்டலம் உருவாகியுள்ளது.

போமல்ஹாட் பூமியில் இருந்து 25 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் சூரியனைப் போல 15 மடங்கு பிரகாசமான விண்மீனாகும்.

மோதிய ஒவ்வொரு விண்பொருளும் அண்ணளவாக 200 கிமீ அளவுள்ளது என விஞானிகள் அளவிட்டுள்ளனர். இந்த மோதலினால் உருவான தூசு மண்டலம் 160 மில்லியன் கிமீ அகலமானது. இது அண்ணளவாக சூரியனை வெள்ளி சுற்றிவரும் பாதையின் அளவாகும்!

மோதிய இரண்டு பொருட்டாக்களையும் நாம் planetesimals என அழைக்கிறோம். இதன் பெயரில் பிளானட் என்கிற சொல் இருந்தாலும் இவை சாதாரண கோள்களை போன்று இருக்காது. மாறாக பாறையாலும் பனியாலும் உருவான பல்வேறு பட்ட வடிவங்களைக் கொண்ட விண்பொருட்கள் இவை. இவை இன்னும் முழுமையாக கோள வடிவம் பெறாதவை.

முதலில் விண்ணியலாளர்கள் இந்த தூசு மண்டலத்தை ஒரு பிறவிண்மீன் கோள் என்றே கருதினர். ஹபிள் தொலைநோக்கி மூலம் தொடர்ச்சியாக பல வருட அவதானிப்பின் போது இந்தக் கோள் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக மறைவதை இவர்களால் அவதானிக்கக்கூடியவாறு இருந்தது.

எனவே ஹபிள் தொலைநோக்கியின் தரவுகளை மேலும் ஆய்வு செய்த விஞானிகள் இது ஒரு கோளாக இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்தனர். இது தொடர்ச்சியாக பெரிதாக்கிக் கொண்டே வரும் மிகச் தூசுத் துணிக்கைகளை கொண்ட ஒரு மண்டலம் என்று தெரியவருகிறது. இரண்டு சிறுகோள் அளவுள்ள பனிப்பாறைகள் மோதியதால் இது உருவாகியிருக்கவேண்டும். மோதலின் போது துண்டுகள் சிதறுவது போல இங்கே இந்தப் பனித் துணிக்கைகள் சிதறியிருக்கின்றன. இது விரிவடைய அதன் அடர்த்தி குறைவதால் இதனை அவதானிக்க கடினமாக இருக்கிறது.

போமல்ஹாட் விண்மீனைச் சுற்றிவரும் விண்பொருள் ஒவ்வொரு 200,000 வருடத்துக்கு ஒரு முறை மோதிவிடுகின்றன என்று இவர்கள் கணக்கிட்டுள்ளனர். இப்படியான ஒரு அரிதான நிகழ்வு பிரபஞ்ச மோதல்கள் பற்றிய பல்வேறு விடையங்களை எமக்கு தெரிவிக்கும் என்பதால் இந்த நிகழ்வுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.

படவுதவி: ESA/NASA, M. Kornmesser

மேலதிக தகவல்

அண்ணளவாக 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியுடன் ஒரு planetesimal மோதியதால் நமது நிலவு உருவானது என்று விண்ணியலாளர்கள் நம்புகின்றனர்!