பெரும் அரக்கனின் சிறப்புப் பார்வை

பூமி போன்ற கோள்கள் மட்டுமல்லாது, விண்மீன்களுக்கும் வளிமண்டலம் காணப்படுகிறது. இவ்விண்மீன்களின் வளிமண்டலம் பற்றி தெளிவாக விளங்கிக்கொள்வதற்காக ஒரு பெரும் அரக்கன் வகை விண்மீன் ஒன்றை ஆய்வாளர்கள் துல்லியமாக வரைபடமாக்கியுள்ளனர்.

பூமியின் வளிமண்டலத்தில் பல படைகள் உண்டு, ஒவ்வொரு படையும் தனிப்பட்ட பண்புகளை கொண்டுள்ளது. நாம் வாழுவது மிக அடியில் உள்ள படையான அடிவளிமண்டலம் எனப்படும் பகுதியிலாகும். இங்குதான் அதிகளவான வானிலை சார்ந்த நிகழ்வுகளும், முகில்களும் காணப்படுகின்றன. மேலே செல்லச்செல்ல வளிமண்டலத்தின் அடர்த்தி குறைவடைந்துகொண்டே சென்று படிப்படியாக விண்வெளியில் மறைகிறது.

பெரும் அரக்கனான அண்டைவீட்டுக் காரர்

பூமியின் வளிமண்டலம் பற்றி நாம் பல விடையங்களை அறிந்திருந்தாலும், விண்மீனின் வளிமண்டலம் பற்றி நாமறிந்தது வெகு சொற்பமே. இதனை அறிந்துகொள்வதற்காக விஞ்ஞானிகள் குழு ஒன்று அண்டாரிஸ் (கேட்டை விண்மீன்) விண்மீனின் வளிமண்டலத்தை துல்லியமான வரைபடமாக்கியுள்ளனர். சூரியனுக்கு அடுத்ததாக துல்லியமாக நாம் ஆய்வு செய்யும் இரண்டாவது விண்மீனின் வளிமண்டலம் இதுவாகும்.

படவுதவி: ALMA (ESO/NAOJ/NRAO), E. O’Gorman; NRAO/AUI/NSF, S. Dagnello

அண்டாரிஸ் ஒரு சிவப்பு பெரும் அரக்கன் வகை விண்மீன். பூமிக்கு மிக அருகில் இருக்கும் இவ்வகை விண்மீன் இதுதான். பிரபஞ்சத்தில் இருக்கும் மிகப்பெரிய வகை விண்மீன்களில் பெரும் சிவப்பு அரக்கன் வகை விண்மீன்களும் அடங்கும். ஏனைய விண்மீன்களுடன் ஒப்பிடும் போது இவை சற்றே குளிர்ச்சியானவை, மேலும் விண்மீனின் வாழ்வுக்காலத்தின் இறுதியில் இருக்கும் இவை சுப்பர்நோவாவாக வெடித்துவிடும்.

துல்லியமான அவதானிப்பு

விண்மீனின் மேற்பரப்பிற்கு அருகில் இருக்கும் வளிமண்டலப் படை ஒளிமண்டலம் எனப்படுகிறது. இங்கிருந்துதான் விண்மீனின் சக்தி ஒளியாக வெளியிடப்படுகிறது. இதற்கு கீழே இருக்கும் அடுத்த படை நிறமண்டலம் என அழைக்கப்படுகிறது. விண்மீனின் காந்தப்புலத்தினால் இந்தப் படை வெப்பமாக்கப்படுகிறது; மேலும் கொதிக்கும் வாயுக்கள் பெரும் குமிழிகளாக உருவாகி வெடிக்கும். இப்படித்தான் விண்மீனின் வெப்பம் வளிமண்டலத்தை கடந்து விண்வெளியை அடைகிறது.

கற்புலனாகும் ஒளியில் பார்க்கும் போது, சூரியனில் இருந்து செவ்வாயின் சுற்றுப்பாதை வரை உள்ளடக்கும் அளவிற்கு அண்டாரிஸ் பெரியது! ஆனால் ரேடியோ அலைவீச்சின் மூலம் ஆய்வாளர்கள் இதனை அவதானிக்கும் போது இவ்விண்மீன் அதைவிடப்பெரியதாக இருப்பது புலப்படுகிறது. இந்தப் புதிய ஆய்வு முடிவுகள் ஏற்கனவே கணக்கிட்ட அளவைவிட அண்டாரிஸ் விண்மீனின் வளிமண்டலம் 12 மடங்கு பெரியதாக இருப்பதை காட்டுகிறது.

மேலும் ஏற்கனவே கருதியதை விட அண்டாரிஸ் விண்மீனின் வளிமண்டல வெப்பநிலை குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஏனைய விண்மீன்களின் வெப்பநிலையுடன் ஒப்பிடும் போது “வெதுவெதுப்பான” வெப்பநிலை இது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இவ்வளவு துல்லியமான அவதானிப்புகளுக்கு காரணம் பல தொலைநோக்கிகளை கொண்டு இந்த விண்மீன் தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட்டதேயாகும்.

இந்த ஆய்வு மூலம் நமக்கு தெரியவருவது விண்மீன் ஒன்றின் வீச்சு இதற்கு முன்னர் நாம் எதிர்பார்த்ததை விட பலமடங்கு இருக்கிறது என்பதாகும். எப்படியிருப்பினும் விண்மீனின் வளிமண்டலம் தொடர்பாக மேலும் அறிந்துகொள்ள பல ஆய்வுகள் செய்யவேண்டி இருக்கிறது.

படவுதவி: ALMA (ESO/NAOJ/NRAO), E. O’Gorman; NRAO/AUI/NSF, S. Dagnello

மேலதிக தகவல்

இரவு வானில் வெற்றுக்கண்களுக்கு புலப்படக்கூடிய பல விண்மீன்களில் பெரியதும் பிரகாசமானதும் இந்த அண்டாரிஸ். அண்டாரிஸ் ஒரு இரட்டைவிண்மீன் தொகுதியாகும். ஆனாலும் இதனோடு சேர்ந்துள்ள அடுத்த சிறிய விண்மீனை உங்களால் வெறும் கண்களைக் கொண்டு பார்க்கமுடியாது.