சனியின் அளவுள்ள கோள் ஒன்று சிறிய குளிர்ச்சியான (சராசரி விண்மீன் வெப்பநிலையை விட குறைந்தளவு வெப்பநிலை கொண்ட) விண்மீன் ஒன்றை சுற்றிவருவதை தேசிய விஞ்ஞான அறக்கட்டளைக்கு சொந்தமான Very Long Baseline Array (VLBA) தொலைநோக்கியை கொண்டு விண்ணியலாளர்கள் அவதானித்துள்ளனர்.
புதயலுக்கான தேடல்
இதுவரை ஆய்வாளர்கள் 4000 இற்கும் அதிகமான பிறவிண்மீன் கோள்களை கண்டறிந்துள்ளனர். இன்னும் கண்டறியப்படாதவற்றின் எண்ணிக்கை மிக மிக அதிகம். கண்டறியப்பட்ட பிறவிண்மீன் கோள்களில் பெரும்பாலானவை நேரடியான அவதானிப்புகள் இன்றியே கண்டறியப்பட்டுள்ளன. இப்படி நேரடியான அவதானிப்புகள் இன்றி கோள்களை கண்டறிய ஆய்வாளர்கள் ஒரு உத்தியை கையாள்கின்றனர்.
உன்னிப்பாக அவதானித்தல்
VLBA இப்படியான ஒரு விசேட உத்தியை பயன்படுத்தியே 35 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் சனியின் அளவுள்ள கோளை கண்டறிந்துள்ளது. இந்த உத்தி நீண்ட காலமாக விண்ணியலாளர்களுக்கு தெரிந்திருந்தாலும், இவற்றை பயன்படுத்துவது என்பது அவ்வளவு எளிதாக இருந்திருக்கவில்லை.
முதலில் குறித்த விண்மீனின் அமைவிடத்தை துல்லியமாக கணக்கிடவேண்டும். பின்னர், தொலைநோக்கி ஒன்று குறித்த விண்மீன் விண்வெளியில் பயணிக்கும் பாதையை தொடர்ச்சியாக அவதானித்துக்கொண்டேவரும். சிலவேளைகளின் குறித்த விண்மீன் தனது பயணப்பாதையில் தள்ளாடுவதை தொலைநோக்கியால் அவதானிக்கக்கூடியவாறு இருக்கும். இந்தத் தள்ளாட்டம் மூலம் அதற்கு அருகில் கோள் ஒன்று இருப்பதை எம்மால் அறிந்துகொள்ளலாம். விண்மீனை சுற்றிவரும் கோளின் ஈர்ப்புவிசையால் இந்த தள்ளாட்டம் ஏற்படுகிறது. தள்ளட்டத்தை கண்டுகொண்டவுடன் ஆய்வாளர்களால் கணிதமுறைகளைக் கொண்டு குறித்த கோள் எங்கிருக்கிறது என்று கணக்கிடமுடியும்.
இப்படியாக தள்ளாடும் விண்மீனைக் கொண்டு அதனைச் சுற்றிவரும் கோள்களை கண்டறிவதென்பது ஒரு விசேடமான உத்திதானே!
படவுதவி: NRAO/AUI/NSF, B. Saxton
மேலதிக தகவல்
தள்ளாட்ட முறையைக் கொண்டு தொலைநோக்கி மூலம் பிறவிண்மீன் கோள் ஒன்றை கண்டறிவது இதுவே இரண்டாவது முறையாகும்.