நாம் பிறக்கும் முன்னர் இருந்தே மரங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு மரத்தின் வேர்கள், கிளைகள், இலைகளில் எல்லாம் இயற்கையின் ஆயுள்ரேகை படிந்து இருக்கின்றது. காற்றின் மூலக்கூறுகளும், கதிரின் ஒளிக்கூறுகளும், மரங்களின் அணுக்களாகின்றன. மண் படலம் உடலாகின்றது. நீரின்றி அமையும் உயிரேது உலகில்? மரமும் அத்தகையதே.
ஒரு மரத்தினை அறுக்கின்றபொழுது அதன் உட்பகுதியில் தண்டுப்பகுதியில் காணப்படுகின்ற பதிவுகள் அவை எத்தனை வருடங்களாக பூமியில் தான் வாழ்ந்து இருப்பதற்கான சான்றுகள். வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒரு மரத்திற்காக பெருந்தெருக்களை கூட மாற்றியமைக்கின்றார்கள்.
மரங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆயுளைக் கொண்டவை. அவை இருக்கும் காலத்தில் சூழலுக்கு பெரும் சேவையை ஆற்றுகின்றன. பகலில் சூரிய ஒளியில் ஒளித்தொகுப்பினை மேற்கொண்டு ஒட்சிசனை வெளியிடுகின்றன.
ஒரு மரம் அழிக்கப்படுகின்றது எனின் இன்னொரு மரம் அவ்விடத்தினை நிரப்ப வேண்டும். ஒரு பெருமரத்தினால் வெயில் நேரத்தில் கிடைக்கும் நிழலிற்கும் செயற்கையாக நாம் அமைக்கும் ஒன்றால் கிடைக்கும் நிழலிற்கும் வேறுபாடுகள் நமக்குப் புரியும்.
மரங்களை காத்து எம் எதிர்கால சந்ததியும் சிறப்பாக வாழ உதவுவோம்.