பூமியின் ஐம்பெரும் உயிர்ப் பேரழிவுகள்

நாம் எல்லோரும் அறிவியலின் தத்துவப்படி கூர்ப்பின் மூலமாக ஒரு கல அங்கியாக இருந்து இப்போது செவ்வாயில் விண்கலங்களை இறக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்ற ஒரு உயிரினமாக, வளர்ந்து நிற்கிறோம். இந்த வளர்ச்சி முற்றுப்பெற்று விடவில்லை, இயற்கைத் தேர்வு முறையில் படிப்படியாக நாம் மாற்றமடயதான் போகிறோம், உயிர் என்ற ஒன்று இருக்கும் வரை மற்றம் என்ற ஒன்று இருந்துகொண்டேதான் இருக்கும்.

பூமியில் உயிரின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு நேர்கோட்டுப் பாதையில் சென்ற ஒரு நிகழ்வு அல்ல. உயிரினக்கூர்ப்பே டி.என்.ஏ வின் பிரதி எடுப்பில் ஏற்பட்ட பிழையினால் உருவான விகாரம் என்று இன்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பாக்டீரியாவின் இனப்பெருக்கத்தின் போது ஏற்பட்ட பிழையினால் இன்று மனிதன் இவ்வுலகில் வந்து நிற்கிறான் என்று கூட சொல்லலாம்.

பூமியில் உயிரினம் தோன்றியபோதிருந்து இன்று வரை பல்வேறு மாற்றங்களுக்கு ஆளாகி இருக்கிறது, இதில் பூமியின் பங்கு மிகப்பெரிது. இதுவரை பூமியில் வாழ்ந்த உயிரினங்களில் 98 வீதமாணவை இன்று இந்த உலகில் இல்லை, அழிந்து விட்டது, முற்றாக அழிந்துவிட்டது. ஏன்?

பூமியை முழுதாக பாதிக்ககூடிய நிகழ்வுகள் அவ்வப்போது பூமியின் வரலாற்றில் நிகந்துள்ளது, இவ்வாறான நிகழ்வுகள் பூமியின் சமநிலையை பாதித்ததுடன், அப்போது வாழ்ந்துகொண்டிருந்த உயிரினங்களின் வாழ்வில் பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்ட ஒன்று, டைனோசர்களின் அழிவு.

கிட்டத்தட்ட 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் விழுந்த ஒரு விண்கல் டைனோசர்களின் சவப்பெட்டியில் இறுதி ஆணி அடித்த ஒரு நிகழ்வு, அப்படி என்றால், டைனோசர்கள் ஏற்கனவே சாகத்தொடங்கியிருந்தது. ஏன் என்பதைப்பற்றி பாப்போம், இந்த கட்டுரையின் நோக்கமே பூமியில் இவ்வாறு ஏற்பட்ட பேரழிவுகள் பற்றி பார்பதேயாகும்.

உயிரினப்பேரழிவு (extinction event or biotic crisis) என்று அழைக்கப்படும் நிகழ்வுகள், பூமியின் உயிர்ப்பல்வகைமையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியநிகழ்வுகள் ஆகும். ஏற்கனவே சொல்லியதுபோல இந்தப் பாரிய பேரழிவுகள்மூலம் பூமியில் வாழ்ந்த 98 வீதமான உயிரினவகைகள் இன்று முழுதாக அழிந்துவிட்டது அல்லது இன்று படிமமாகமட்டுமே (எல்லாம் அல்ல) காணப்படுகிறது.

கிட்டத்தட்ட கடந்த 600 மில்லியன் வருடங்களில், இவ்வாறான பேரழிவுகள் 5 முறை இடம்பெற்றுள்ளது. இவை ஒவ்வொன்றைப் பற்றியும் பார்ப்போம்.

  1. ஒர்டோவிசியன் – சிலூரியன் உயிரினப்பேரழிவு – 443 மில்லியன் வருடங்களுக்கு முன்
  2. பிந்திய டிவோனியன் உயிரினப்பேரழிவு – 359 மில்லியன் வருடங்களுக்கு முன்
  3. பேர்மியன் உயிரினப்பேரழிவு – 248 மில்லியன் வருடங்களுக்கு முன்
  4. ட்ரையாசிக் – யுராசிக் உயிரினப்பேரழிவு – 200 மில்லியன் வருடங்களுக்கு முன்
  5. கிரீடாசியஸ் – மூன்றாம் உயிரினப்பேரழிவு – 65 மில்லியன் வருடங்களுக்கு முன்

ஒர்டோவிசியன் – சிலூரியன் உயிரினப்பேரழிவு – 443 மில்லியன் வருடங்களுக்கு முன்

ordovician-silurian_extinction_event_1

உயிரினப்பேரழிவுகளில் மூன்றாவது மிகப்பெரிய அழிவு இதுவாகும், கிட்டத்தட்ட 85 வீதமான நீர்வாழ் உயிரினங்கள் அழிந்துபோயின. ஒர்டோவிசியன் காலப்பகுதியில் பெரும்பாலான உயிரினங்கள் கடலிலேயே வாழ்ந்தன. த்ரிலோபைட், ப்ரசியோபோட் போன்ற உயிரினங்களே இக்காலப்பகுதியில் பெரிமளவு வாழ்ந்த உயிரினங்களாகும்.

இரண்டு கட்டங்களாக, அதாவது சற்று இடைவெளி விட்டு இருவேறு காலப்பகுதிகளில் இந்த உயிரினஅழிவு நடந்ததாக கருதப்படுகிறது, இந்த இருவேறு காலப்பகுதிக்காண இடைவெளி, குறைந்தது ஒரு மில்லியன் ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஒர்டோவிசியன் உயிரினப்பேரழிவுக்கு காரணம், அக்காலப்பகுதியில் ஏற்பட பனியுகம் ஆகும். பூமியன் தெற்குஅரைவட்டக்கோளத்தில் உருவான பனிப்படலம், கடல் மட்டத்தை வீழ்ச்சி அடையச்செய்ததுடன் கடல் நீரின் ரசாயனத் தன்மையையும் மாற்றியது. அளவுக்கதிகமான குளிரும், நீர்த்தன்மை மாற்றமும் ஒர்டோவிசியன் உயிர்ப்பேரழிவுக்கு காரணமாயின.

பிந்திய டிவோனியன் உயிரினப்பேரழிவு – 359 மில்லியன் வருடங்களுக்கு

Late Devonian landscape, artwork

ஒரு குறிப்பிட்ட நிகழ்வு என்றல்லாமல், தொடர்ச்சியாக பல மில்லியன் ஆண்டுகளில் நடைபெற்ற ஒரு உயிரினப்பேரழிவாக இருக்கலாம் என்றும் ஆராய்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஆழமற்ற கடல் நீரில் வாழ்ந்த உயிரினங்கள் பெரும் அழிவை சந்தித்தன. கிட்டத்தட்ட மொத்த உயிரினங்களில் நாலில் மூன்று பங்கு உயிரினங்கள் அழிந்துபோயின. கடல் பவளத்திட்டுக்கள் மற்றும் அவை சார்ந்த உயிரினங்கள் மிகவும் மோசமாக பாதிப்படைந்தது. பவளத்திட்டுக்கள் மீண்டும் பழைய நிலையை அடைய கிட்டத்தட்ட 100 மில்லியன் ஆண்டுகளாயின.

கடல் மட்ட மாற்றம், விண்கல் மோதல், புதிய வகை தாவரங்களால் ஏற்பட்ட மண் மாற்றம் காரணமாக ஏற்பட்ட காலநிலை மாற்றம் போன்றவை இந்த உயிர்ப்பேரழிவுக்கு காரணமாக கருதப்படுகின்றன.

பேர்மியன் உயிரினப்பேரழிவு – 248 மில்லியன் வருடங்களுக்கு முன்

Early Earth, computer artwork

பூமியின் உயிரின வரலாற்றில் “பெரும் சாவு” (the great dying) என்று அழைக்கப்படும் அளவிற்கு மிகப்பெரிய உயிரினஅழிவாக இருந்தது இந்த பேர்மியன் அழிவு. கிட்டத்தட்ட 96 வீதமான உயிரினங்கள் முற்று முழுதாக அழிந்துபோயின. இன்று நாம் உலகில் பார்க்கும், வாழும் எல்லா உயிரினங்களும், அந்த எஞ்சிய 4 வீதமான உயிரினங்களே!

ஒர்டோவீசியன் உயிரினப்பேரழிவைப்போல பேர்மியன் அழிவும், பல மில்லியன் ஆண்டுகள் இடைவெளியில் இரு வேறுபட்ட காலப்பகுதியில் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. பெரும் பாதிப்படைந்தவை கடல்வாழ் உயிரினங்களாகும். கிட்டத்தட்ட 96 வீதமான கடல் உயிரினங்கள் அழிந்துபோயின. நிலத்தில் வாழ்ந்த உயிரினங்களில் 70 வீதமானவை அழிந்தன, அதிலும் குறிப்பாக பூச்சி இனங்களே அதிக பாதிப்படைந்தன.

அதிகளவான பாதிப்பு உயிரினங்களுக்கு ஏற்பட்டதனால், மீண்டும் உயிரினங்களின் அளவு அதிகரிக்க 10 மில்லியன் வருடங்களுக்கு மேல் ஆயிற்று.

இந்த அழிவுக்கு பல்வேறு பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன. சைபெரியன் நிலப்பரப்பில் இருந்து வந்த அளவுக்கதிகமான மீதேன் வாயு மற்றும் எரிமலை வெடிப்பு. பிராணவாயுக் குறைபாடு போன்றவை. சிலர் விண்கல் மோதலால் கூட இந்த அழிவு நிகழ்ந்துள்ளது எனக்கருதுகின்றனர்.

ட்ரையாசிக் – யுராசிக் உயிரினப்பேரழிவு – 200 மில்லியன் வருடங்களுக்கு முன்

Artist's impression of Triassic period landscape.

ட்ரையாசிக் காலப்பகுதியின் கடைசி 18 மில்லியன் ஆண்டுகளில், இரண்டு அல்லது மூன்று கட்டமாக இந்த அழிவு இடம்பெற்றது. பல்வேறு விதமான உயிரினங்கள் அழிவைச்சந்தித்தது. நீர்வாழ் ஊர்வன, சில பெரிய நீர்நில வாழ்வன, மற்றும் பவளத்திட்டுக்களை உருவாகும் உயிரினங்கள் என்பன இவற்றுள் அடங்கும். இருந்தும், பெரும்பாலான தாவரவகைகள் இந்த அழிவில் இருந்து தப்பின.

கிட்டத்தட்ட பூமியில் வாழ்ந்தவற்றில் 50 வீதமான உயிரினங்கள் அழிவடைந்தன. காலநிலை மாற்றம், பெரும் எரிமலை வெடிப்பு, மற்றும் விண்கல் தாக்கம் போன்றவை காரணமாக கருதப்படுகின்றது.

கிரீடாசியஸ் – மூன்றாம் உயிரினப்பேரழிவு – 65 மில்லியன் வருடங்களுக்கு முன்

Extinction of the dinosaurs, artwork

இது நாம் ஏற்கனவே கேள்விப்பட்ட உயிரினப்பேரழிவு. டைனோசர்களின் அழிவுக்கு காரணமாக இருந்த இந்த நிகழ்வு, ஒரு விண்கல் பூமியில் மோதியதால் ஏற்பட்டது. இந்த நிகழ்வை முடித்து வைத்த பெருமை இந்த விண்கல்லுக்கு இருந்தாலும், அதற்கு முன்னமே பல மில்லியன் வருடங்களாக, இருந்த உயிரினங்கள் அழியத்தொடங்கி இருந்தது.

சில கடல்வாழ் உயிரினங்கள், பெருமளவு பூமரங்கள், மற்றும் டைனோசர்கள் அளிவடையத்தொடங்கியிருந்த காலம், இதற்கு மிகப்பெரிய எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம்.

இறுதியாக மெக்சிகோவின் யுக்கட்டான் குடாப்பகுதியில் விழுந்த 10 கிலோமீட்டர் விட்டமான விண்கல் ஏற்படுத்திய சுனாமி மற்றும் பூமியை முழுதாக மூடக்கூடியளவு தூசு போன்றவை இந்தப்பேரழிவின் பெட்டியில் கடைசியாக ஒப்பமிட்டு இந்தப்பேரழிவை உறுதிப்படுத்தியது.

ஆக கடைசியாக இவ்வாறான ஒரு பேரழிவு நடந்து 65 மில்லியன் வருடங்கள் ஆயிற்று. பூமியின் வரலாற்றில் பல மில்லியன் கால இடைவெளியில் இவ்வாறான நிகழ்வுகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம். அப்படியான அடுத்த உயிர்ப்பேரழிவுக்கான வாசல் கதவு பூமியைப்பொறுத்தவரை என்றும் திறந்தே இருக்கும்.

சிறி சரவணா