சினிமாவும் சமுதாயமும்!

இன்று நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருகின்றோம். வேகமாக நகர்ந்துவரும் வாழ்க்கை ஒரு பக்கம் என்றாலும், வாழ்வியல் நிகழ்வுகளில் எமது பங்களிப்பின் வீதம் மிகச்சரியாக குறைந்துகொண்டே செல்கிறது. எதிலும் ஒரு பொறுப்பற்ற தன்மையை காணக்கூடியதாக இருகின்றது, ஒரே ஒரு விடயத்தை தவிர, அதான் சினிமா.

தொலைக்காட்சி நிகழ்சிகளை எடுத்துக்கொண்டால் மிகப்பிரபல்யமாக இருப்பவை, ஒன்று பாட்டு நிகழ்ச்சி, அல்லது நடன நிகழ்ச்சி. சூப்பர் ஸ்டார் என்றாலே ஒன்று பாட்டுப்படிக்கிறவர், இல்ல  டான்ஸ் ஆடுறவர். இந்த பாட்டு, டான்ஸ் எல்லாமே சினிமாவையே சுற்றிச்சுற்றி வரும் ஒரு நிகழ்வாகவே எனக்குப்படுகிறது. எத்தனை விடயங்கள் எம்மைச்சுற்றி நடகின்றது, ஆனால அவற்றைப்பற்றி பெரும்பாலும் நாம் கவலைப்படுவதில்லை, அல்லது ஒரு முகப்புத்தாக பதிவை இட்டுவிட்டால் எல்லாம் சரியாய் போவிடும் என்ற மனநிலை.

வறுமையைப் பற்றி பேசுபவர்கள் தான், நடிகர்களின் படங்களுக்கு பால், பீர் அபிசேகம் செய்கிறார்கள். சூழலை பற்றி கதைப்பவர்கள் தான் அரோகாரா என்று சாமிக்கு விழா எடுத்து, ரோட்டிலே பட்டாசு வெடித்து அந்த இடத்தையே நாஸ்தி பண்ணுகிறார்கள், அல்லது அந்தக்குழுவில் இருக்கிறார்கள். முரண்பாடு! அளவுக்கதிகமான முரண்பாடு இந்த சமுகத்தில், அதே சினிமாவால் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சமூகத்தில். நாட்டின் விடயங்களைப் பற்றி கதைப்பவர்கள் கூட, சினிமாவை தவிர்த்து விட்டு கதைபதில்லை, பதிவதில்லை. அரசியலில் தொடங்கி, ஆயா வடை சுடுவது வரை இங்கு எல்லாவற்றிலும் சினிமா சாயம் பூச வேண்டி உள்ளது.

ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது அது தன்னால் சுயமாக எவ்வளவு தூரம் வரை செல்ல முடியும் என்பதைப்பொறுத்தே இருக்க முடியும். இன்று நமது சமூகம், தொழில்நுட்ப ரீதியிலோ, பொருளாதார ரீதியிலோ வேறொரு சமூகத்தில் தங்கி இருக்கவேண்டி உள்ளது. உதாரணமாக சீனா, இனி எந்தவொரு பொருளும் உங்களுக்கு தரமாட்டோம் என்றால், அடுத்த ஒரு வருடத்தில் சூப்பர் சிங்கர் நடத்த மைக், காமரா இருக்காது! ஏன் இருக்க கதிரையே இருக்காது. எல்லாம் அவன் தரவேண்டி இருக்கிறது. நாம் காசைக்கொடுத்து அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். சூப்பர் சிங்கரில் பாடியவர் தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார் என்றால், பாடுவதற்கான மைக்கை உருவாகியவன் யார்? உலகம் பூராக அதை கொண்டு சேர்த்தவன் யார்? அவர்களை எல்லாம் எந்த லிஸ்டில் சேர்ப்பது? கவலை இல்லை, ஏன் என்றால் எம்மிடம் அப்படி ஒரு லிஸ்ட் இல்லை, ஏன் என்றால் அப்படிப்பட்டவர்களைதான் நமது சமுதாயம் உருவாக்கவில்லையே. நாம் உருவாகியது, பாடகர்களையும், நடிகர்களையும், அரசியல் கனவு காண்பவர்களையும் தான்.

அதையும் தாண்டி உருவாகியவர்கள், நமது சமூதாயத்தில் நம்மளோடு இல்லை. அவர்களின் திறமையை அறிந்தவன், அவர்களை தூக்கிச் சென்றுவிட்டான், இல்லை என்றால் நாம் அப்படி உருவாகியவர்களை புறக்கனித்தே அவர்களை அழித்துவிட்டோம்.

இங்கு  தமிழ் சம்பந்தமான எந்தவொரு இணையத்தளமோ, முகப்புத்தாக குழுவோ, எல்லாவற்றிலும் சினிமா, அதுவும், விசிறிகளின் அடிபுடி பார்க்க அகா ஓகோ! ஒரு சில குழுக்கள் மட்டுமே சினிமாவைத்தவிர்த்து இயங்குகிறது, அதுவும் பெரும்பாலும் தொழில் ரீதியான குழுக்களில் மட்டுமே, தனிப்பட்ட நபர் சார்ந்த எந்தவொரு விடயமும் சினிமாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருகிறது.

இன்று பெரும்பாலும் மொத்த இலக்கிய உலகே சினிமாவின் பின் தான் இருக்கிறது, அல்லது இருக்கிறது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். சிலவேளை இல்லாமலும் இருக்கலாம், ஆனால் எனக்கு தெரிந்த எல்லா பெரிய கைகளும் எதயோ ஒருவிதத்தில் சினிமாவில் உள்ளடக்கப்பட்டிருக்கிரார்கள். அப்படி என்றால் சினிமாவில் சம்பந்தப்படாத எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கலாம், அவர்களது தரமான படைப்புகள் பற்றி ஏன் ஒருவரும் கதைப்பதில்லை? அவர்களும் இந்த மைக்கை உருவாகிய ஆசாமிகள் போலதான், பாட்டு வந்துகொண்டிருக்கும் வரை மைக் வேலை செய்வதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.

அனால் ஒருநாள் வரலாம், மைக் வேலை செய்யாமல் போகலாம், அப்போது நமது தமிழ் சமூகம் படிக்கப்போகும் பாடத்தை வைத்து ஒருவர் இன்னுமொரு சினிமாவும் எடுக்கலாம்!

சிறி சரவணா