நல்லை நகர் நாவலர்
பதிதனை காண நினைத்த நேரம்
விதி செய்த வேலைகள் ஆயிரம்… ஆயிரம் …
அன்று நொந்ததற்கு இன்று -எனக்கு
கிடைத்து விட்டது அதிட்டம்
தீபண்ணே தந்த ரயில் டிக்கட்டுடன்
தீராத ஆசையோடு ஓடுகின்றேன்-யாழ்தேவியிலே
அளக்க முடியாதது அளவெட்டியை மட்டுமல்ல
அவர்களின் பாசத்தையும் தான்.
நாட்டுக் கோழியும் நறுக்கப்பட்ட நண்டுக்காலும்
சூப்புவதற்கு ருசியாகத்தான் இருந்தது.
“கள்” குடிக்க வேண்டுமென்ற
கொள்ளை நாள் ஆசையும் தீர்ந்தது
இனி என் கட்டையும் வேகும்.
கோயிலென்றும் குளமென்றும்
தெருவுக்குத் தெரு விடாது மணக்கிறது
இந்துவின் மண் வாசம்.
நெய்தல் நிலத்திலே நிலை கொண்ட
நயினைத் தாயின் அருள்- எங்கள்
வயிற்றுப் பசியைத் தீர்த்தது.
மட்டு நகர் மான்மியம் புகழ்
F.X.C நடராச ஐயாவைப் பெற்றெடுத்த
காரை நகர் மண்ணில் என் கால்கள்
பதிந்ததையெண்ணி அடைந்தது
மனது மட்டற்ற மகிழ்ச்சி.
ஈழந்துச் சிதம்பரம் பல அவசியங்களை
ரகசியமாய் கூறி நிற்க…
முறிந்த பனைகள் முடிந்த கதையாகாமலிருக்க
முட்டி மோதி வளர்கின்றன புதிய பனைகள்
காட்சிகளும் மனசாட்சிகளும்
தேடுகின்றன விடியலை..!?
கதிரேசபிள்ளை காண்டீபன்
படம்: இணையம்