கருந்துளைகள் 04 – விண்மீன்களின் பிறப்பு

இது ஒரு தொடர் பதிவு, மற்றைய பகுதிகளையும் படிக்க, கீழுள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

கருந்துளைகள் – அறிவியல் தொடர்

முதலில் விண்மீன்களைப் பற்றிப் பாப்போம், கருந்துளைகளில் பெரும்பாலானவை விண்மீன்களின் வாழ்வின் முடிவில்தான் பிறக்கிறது என்று முன்னர் பார்த்தோம். ஆகவே விண்மீன்களின் வாழ்கையைப்பற்றி கொஞ்சம் அலசுவோம்.

நமது பிரபஞ்சத்தில் மிகல அதிகமாக காணப்படும் ஒரு மூலகம், ஹைட்ரோஜன் அல்லது ஐதரசன் மற்றும் ஹீலியம். நாம் இரவு வானில் பார்க்கும் ஒவ்வொரு புள்ளியும் விண்மீன்களே! நமது சூரியனைப் போல அளவுள்ளவை, சில சூரியனை விட சிறியவை, பல சூரியனை விட பல்லாயிரக்கணக்கான மடங்கு பெரியவை.

விண்மீன்கள் எப்படி உருவாகிறது என்று பார்க்கலாம்.

இந்தப் பாரிய பறந்து விரிந்த பிரபஞ்சத்தில் எண்ணிலடங்கா விண்மீன் பேரடைகள் அல்லது விண்மீன் திரள்கள் உண்டு. நமது சூரியன் இருக்கும் விண்மீன் பேரடை, பால்வீதி என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறான விண்மீன் பேரடைகளில் அதிகளவான வின்மீனிடை முகில்கள் (interstellar clouds) காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் ஐதரசனாலும் (கிட்டத்தட்ட 70%) மற்றும் ஹீலியத்தினாலும் (கிட்டத்தட்ட 20%) ஆக்கப்பட்டவை. அவற்றுள் மிகச்சொற்ப அளவு ஏனைய மூலகங்களும் காணப்படலாம். அவற்றில் அடர்த்தியாக உள்ளை வின்மீனிடை முகில்கள், பூமியில் இருந்து தொலைக்காட்டியால் பார்க்கும் பொது மிக அழகான தோற்றங்களில் தென்படும் இவற்றைத்தான் நெபுலா என வானியலாளர்கள் அழைக்கின்றனர்.

இந்த நெபுலாக்கள் தான் விண்மீன்களின் பெற்றோர்கள். நேபுலாகளில் ஏற்படும் அடர்த்தி வித்தியாசத்தால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்க, அங்கு ஈர்ப்புவிசையும் தோன்றும். இந்த ஈர்ப்பு விசை காரணமாக மேலும் வாயுக்கள் அங்கு குவிய, ஒரு பந்தைப்போன்றதொரு திரள்ச்சியாக அது உருவெடுக்கும்.

இவ்வாறான திரள்ச்சியின் போது, வாயு மூலக்கூறுகள் (ஐதரசன்) மூலக்கூறுகள் ஒன்றுக்கொன்று மிக அருகில் வருவதால், அவற்றின் வெப்பநிலை அதிகரிக்கிறது, இவ் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்து, ஒரு கட்டத்தில் 10 மில்லியன் பாகை செல்சியஸ் அளவைக் கடக்கும் போது, ஒரு விண்மீனின் உயிர் மூச்சு தொடங்குகிறது. அதாவது அணுக்கரு இணைவு (fusion) எனப்படும் ஒரு செயல்பாடு தொடங்குகிறது. இது அந்த வாயுத்திரட்சியில் உள்ள ஐதரசனை, ஹீலியமாக மாற்றுகிறது, இவ்வாறு மாற்றமடையும் போது ஏற்படும் திணிவு வேறுபாடே, விண்மீனின் ஒளி, வெப்பம் மற்றும் இன்னும் பிற சக்திகளாக வெளிவிடப்படுகிறது. இந்த நிலையை அடைந்த விண்மீன்கள், முதன்மைத் தொடர் விண்மீன்கள் (main sequence star) என அழைக்கப்படுகிறது.

நெபுலா
நெபுலா

ஒரு விண்மீன், நெபுலா போன்ற வாயுத் திரட்சியில் இருந்து முதன்மைத் தொடர் விண்மீனாக மாற கிட்டத்தட்ட 50 மில்லியன் வருடங்கள் எடுக்கிறது. ஒரு குறிப்பிட்ட நேபுலாவில் இருந்து பல விண்மீன்கள் (சிலவேளைகளில் நூற்றுக்கனக்கான) தோன்றும். நமது சூரியத்தொகுதிக்கு மிக அருகில் உள்ள உள்ளது ஒராயன் நெபுலா, இது 1300 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. இங்கு பல புதிய விண்மீன்கள் தற்போது உருவாவதை வானியலாளர்கள் அவதானிக்கின்றனர்.

ஒராயன் நெபுலா
ஒராயன் நெபுலா

இவ்வாறு முழுமையாக உருவாகிவிட்ட விண்மீன், முதன்மைத்தொடர் விண்மீன் எனப்படும். நமது சூரியன் ஒரு முதன்மைத்தொடர் விண்மீன் ஆகும், அதே போல இந்த முதன்மைத்தொடர் பருவத்தில் கிட்டத்தட்ட 10 பில்லியன் வருடங்கள் வரை வாழும்!

விண்மீன்களின் மையப் பகுதியில் நடக்கும் இந்த அணுகரு இணைவே, இந்த விண்மீன்கள், அவற்றின் ஈர்ப்பு விசையால் மேற்கொண்டு சுருங்கிவிடாமல் இருக்க தேவையான வெளிநோக்கிய அழுததை வழங்குகிறது.

விண்மீன்களின் அளவிற்கும், திணிவிற்கும் ஏற்ப அதன் வாழ்க்கைக்காலமும், அதன் முடிவும் தங்கியுள்ளது, அவற்றைப் பற்றி அடுத்ததாக பார்க்கலாம்.

படங்கள்: இணையம்