தோட்டத்தில் முதல் பெண்பூசணிப்பூ மலர்ந்து நிமிர்ந்திருந்தது. அதன் குவளை முழுவதும் நிரம்பியிருந்தத நீர். வேஷத்தேனீ அதுகண்டு சுழன்று மயங்கியது. என்ன நினைத்ததுவோ! புதையலைக் கண்ட பிக்குவைப் போல கூத்தாடிக் கூத்தாடிப் படையணிக்குப் பறந்தது.
வெலவெலத்து நின்றான் சங்கர், சலனமற்றிருந்த தராசுத் தட்டுக்களில் ஒன்றின் மேல் மட்டும் திடீரெனச் சுமை இறங்கியது போல் குலுங்கியது அவன் நெஞ்சம்.
பத்து மாதங்களின் பின் திடீரென வானம் கிழிந்தது. கிடைத்த சிறு இடைவெளியில் கிசுகிசுப் பையினைத் தலையில் அணிந்து கொண்டு அப்போதுதான் சங்கர் வெளியில் வந்திருந்தான்.
மனதைக் கொள்ளையடிக்கும் மஞ்சள்வண்ண பூசணிப்பூக்களில் ஒன்றைத் தவிர மற்றவையெல்லாம் மடிந்திருந்தன. ஓற்றைப் பெண்பூ மட்டும் நிமிர்ந்திருந்தது.
ஜெட் விமானம் திடீரென இறங்கியது போல் ஓசை. கரும்புகை போல் விபரிக்க முடியாத அமைப்பு, சங்கர் மயங்கினான்.
ஒற்றைத்தேனீ பூவிளிம்பின் மேல் நடனமிட்டது. ஒரு சில தேனீக்கள் உள்ளே இறங்கிச் சட்டென்று மேலெழுந்தன.
புதிய சலன ஒலி, முந்தைய தேனீ சிறுதுண்டங்களாகியது. இமைப்பொழுதில் இன்னுமொரு வித்தியாசமான ராகம். விர்ரென்று மேலெழுந்தது ஓசை.
முகத்தில் இருந்து இரு கைகளையும் எடுத்த சங்கர் பூவில் நிரம்பியருந்த தெளிந்த மழைநீரை, துண்டங்களின் மேல் மெதுவாகச் சாய்த்தான்.
முருகேசு தவராஜா