குறுகிய காலமே வாழ்ந்து, அதிலும் வெறும் ஐந்து வருடங்கள் மட்டுமே கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், ஜி.எச். ஹார்டியுடன் கணிதத்துறையில் ஆய்வுகளை செய்து கிட்டத்தட்ட 3900 தியரிகளையும், தேற்றங்களையும், கணிதமுறைமைகளையும் நமக்கு தந்து, 32ஆவது வயதிலேயே உயிரை விட்ட மாபெரும் கணித மேதை ராமனுஜன்.
22 டிசம்பர் 1887 இல் ஈரோடு, மெட்ராசில் பிறந்த ராமானுஜனுக்கு இன்று பிறந்தநாள். கணிதத்துறையில் இருப்பவர்களுக்கும், கணிதம் மற்றும் அறிவியல் துறையில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடியவர். லண்டன் ராயல் சொசைட்டியில் பெலோ (Fellow of the Royal Society) பட்டம் வாங்கிய இரண்டாவது இந்தியர் மட்டுமல்லாது, ராயல் சொசைட்டி வரலாற்றிலேயே, மிக இளவயதில் பெலோவாகியவர்களில் இவரும் ஒருவர். அதைத்தவிர அதே வருடத்தில் ட்ரினிட்டி கல்லூரியிலும் பெலொவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ராயல் சொசைட்டி, ட்ரினிட்டி கல்லூரி என இரண்டிலும் பெலோ (fellow) ஆகிய முதலாவது இந்தியர் இவராவார்.
கணிதவியலாளர் ஜி.எச் ஹார்டி, ராமானுஜனைப்பற்றி பின்வருமாறு சொல்கிறார்.
ராமானுஜனை சாதாரண கணிதவியலாலர்களோடோ அல்லது கணிதமேதைகளோடோ ஒப்பிட முடியாது, கணித மாமேதை லியோனார்ட் ஆய்லர் அல்லது கார்ல் ஜாகோபி போன்றவர்களோடு மட்டுமே ஒப்பிடமுடியும்
1914 இல் லண்டன் போய், அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் ஆய்வுகள் நடத்தினாலும், 1919 இல், காசநோயினால் உடல் சுகவீனமுற்றதால் மீண்டும் நாடு திரும்பி, 1920இலேயே தனது 32ஆவது வயதில் உயிரிழந்தார்.
1976 இல் கண்டெடுக்கப்பட்ட, ராமானுஜனின் ‘தொலைந்த நோட்டுப்புத்தகம்’ கிட்டத்தட்ட 600 தேற்றங்களை, குறிப்பாக Mock Theta Functions எனப்படும் தூய கணித வகையைச்சார்ந்தவை.
ராமனுஜன் எழுதிய நோட்டுக்குறிப்புகள், வெறும் விடைகளை மட்டுமே கொண்ட, செய்முறைகள் அற்ற காகிதக்குறிப்பு இன்றும், கணிதவியலாளர்களால் போற்றப்படுகின்றது. அன்று ராமனுஜன் எழுதிவைத்த விடைகளுக்கான செய்முறைகளை இன்றும் கணிதவியலாளர்கள் ஆய்வு செய்கின்றனர்.
சிறிது காலமே தனது கணித ஆய்வுகளை மேற்கொள்ள முடிந்தாலும், மனிதனின் கணிதவியல் வரலாற்றில் என்றும் மறவாத இடம் பிடித்துவிட்டார் கணித மாமேதை சீனிவாச ராமனுஜன்.