இந்த 2014 ஆம் ஆண்டும் முடியப்போகிறது, எத்தனை எத்தனை மாற்றங்கள் இந்த ஒரு வருடத்தில் கடந்து வந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது… கவலை வேண்டாம், நீங்கள் எல்லாம் எதிர்பார்த்ததுபோல அவ்வளவு பெரிய மாற்றங்கள் எல்லாம் இல்லை! அதற்காக மாற்றங்கள் இல்லாமலும் இல்லை, சாதாரணவாழ்வில் நடை பெறும் விடயங்கள் நம்மை பெரிதும் பாதிக்கும் போதுதான், அது நமக்குள் பெரிய மாற்றங்களை விளைவிக்கிறது.
முதல் முதல் போலிஸ் நிலையம் போனதிலிருந்து, ஒரு வருடம் எந்தவொரு நிரந்தர வேலையும் இல்லாமல் ஒட்டியது வரை நமக்கு சாதனையும் வேதனையும் தான். இருந்தும் என்னை பாதித்த மாற்றங்கள் என்று பார்க்கும் போது, எனகென்னவோ நான் மாறியது போலவோ, அல்லது நடந்த எந்த நிகழ்வோ என்னை மாற்றியதுபோலவோ உணரவில்லை.
இருந்தும் சில நல்ல விடயங்கள், சில கெட்ட விடயங்கள் என்பவற்றை செய்துகொண்டுதான் இருந்திருக்கிறேன், இன்னும் செய்துகொண்டுதான் இருக்கிறேன். நானறிந்து நல்லவிடயங்களாக கருதுபவை இதோ
- Science Navigators உதவியோடு, மாணவர்களுக்கு வானியல் படிப்பதற்காக மட்டக்களப்பில் வகுப்புகளை ஆரம்பித்தது.
- எங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியும் என்று சொன்ன பெற்றோர்களிடம் கடுப்பாகாமல், அந்தப்பிள்ளைகளுக்கும் ஆங்கிலத்தில் வானியல் படிப்பித்தது.
- வெளிப்பாடசாலைகளுக்கு சென்று அந்த மாணவர்களுக்கும் அவர்களின் பாடத்திட்டத்தில் உள்ள வானியல் பாடங்களை படிப்பித்தது.
- “அடுத்த கிளாஸ்எப்பண்ணா?” என்று கேட்காமல், “புதுப்படம் எங்கண்ணா டவுன்லோட் பண்ணலாம்” என்று கேட்கும் மாணவனும், இன்னும் படிக்கிற பாடத்தில் அக்கறையாதான் இருப்பான் என்று நம்புவது
- நண்பர் அமர்நாத்துடன் சேர்ந்து “பரிமாணம்” என்ற ஒரு தமிழ் இணைய இதழை ஆரம்பித்தது.
- ஒவ்வொரு நாளும் ஒருவருக்காவது உதவியது, பெரும்பாலும் எனக்கு தொலைபேசியில் அழைத்து, கணினியில் இந்தப்பிரச்சினை, அந்தப்பிரச்சினை என்று கேடவர்களுக்கெல்லாம், பதில் சொல்லுவது ஒருவகை, “நாளைக்கு மழைபேய்யுமாடா தம்பி?” என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்வது இன்னொருவகை! இன்னும் சில பல வகைகளும் உண்டு. எப்படியோ உதவிசெய்தால் மனதில் ஒரு சந்தோசம்.
இவை போன்றவற்றைத் தவிர இன்னும் சில, பல நல்ல விடயங்களும் உள்ளன என்று தான் நம்புகிறேன், அனால் ஞாபகத்தில் தான் இல்லை. சிலபல சந்தோஷ துக்க நிகழ்வுகளும் நடக்காமலில்லை.
அமெரிக்காவில், வானியல்-இயற்பியலில் PhD செய்யும் நண்பர் ரிவாஜ்சுக்கு, ஆராய்ச்சியில் உதவியதற்காக எனது பெயரையும் நண்பர் ரிவாஜ் அவரது ஆராய்ச்சிக்கட்டுரையில் இணைத்திருந்தார், அதுவொரு மறக்கமுடியா சம்பவம். நான் அப்படியொன்றும் ஆராய்ச்சி செய்து கிழித்துவிடவில்லை, பைதான் மொழியை பயன்படுத்தில், அவர் ஆய்வில் இருந்த இயற்பியல் பிரச்சினையை தீர்பதற்கான அல்கோரிதத்தை உருவாக்கி ப்ரோக்ராம் எழுதிக்கொடுத்தேன் அவ்வளவே! மூன்று நாட்கள் தலையைக்குடைந்து எழுதிய ப்ரோக்ராம் இறுதியில் வேலை செய்ததுதான் ஆச்சரியமான விடயம்! இருவருக்கும் சந்தோசம்!
புதுப்பிக்க காசு இல்லாமல் எனது gravitide.com ஐ அப்படியே கைகழுவி விட்டது ஒரு துக்ககரமான சம்பவம்தான், ஆனால் எனக்கு பெரிய மனப்பாதிப்பை அது ஏற்படுத்தவில்லை. ஒரு வருடமாக அதற்கு எந்த வேலையும் வரவுமில்லை ஆக இப்போது gravitide, முகப்புத்தகத்தில் மட்டுமே இயங்குகிறது! எனக்கு அதுபோதும்!
பரிமாணம் – இதைப்பற்றி கட்டாயம் கூறியாகவேண்டும். புத்தகங்கள் வாசிப்பதென்பது எனக்கு மிகப்பிடித்த வேலை, இரவில் படுக்க போகும் முன், 10 பக்கங்களையாவது படிக்காவிட்டால் தூக்கம் வராது. எனது ஸ்மார்போனில் புத்தகத்தை ஏற்றி வைத்து வாசிப்பேன். தமிழில் அதிகம் வாசித்தது கிடையாது, பெரும்பாலும் ஆங்கில புத்தகங்களே, அதுவும் இயற்பியல், அறிவியல் சார்பான புத்தகங்கள் தான் என் விருப்பத்துக்குரியவை. தமிழில் நான் வாசித்தவை பெரும்பாலும் சுஜாதாவினுடையது தான். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் என்று.
சுஜாதாவின் நாவல்களை வாசிக்கும் போதுதான் எனக்கும் தமிழில் எழுதவேண்டும் என்ற ஆசை பிறந்தது என்றால் அது உண்மைதான். நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யத்தெரியாவிடினும் கூகிள் உதவியுடன், ஒலிசார் தட்டச்சு முறைமையைப் பயன்படுத்தி ஒருவாறு வேகமாக தட்டச்சு செய்யப்பழகிக்கொண்டேன்.
அறிவியல் சார்ந்த விடயங்களை தமிழில் எழுதுவது என்பதாக தொடங்கிய எனது அவா, நண்பருடன் சேர்ந்து, ஒரு தமிழ் ப்ளாக் ஒன்றை ஆரம்பிக்கும் அளவில் வந்து விட்டது. அதுதான் இந்த “பரிமாணம்”. நாளாந்த செய்தியோ, அல்லது, சினிமா, அரசியல் போன்றவற்றை தவிர்த்து, நல்ல எழுத்துக்களுக்கும் மட்டும் மேடையாக இது இருக்கவேண்டும் என்று இருவரும் ஒருங்கே தலையசைத்து உருவாகிய ஒன்று, மற்றவர்களுக்கும் எழுத வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் இந்த பரிமாணத்தில் இடமுண்டு.
வருட இறுதியில் கடைசியாக தொடங்கிய மற்றுமொரு முக்கிய அமைப்பு Science Panda. இந்த அமைப்பின் நோக்கமே, அறிவியல், தொழில்நுட்ப விடயங்களை மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவது, மற்றும், உலகில் உள்ள மற்றவர்களுக்கும் வழங்கி அவர்களும் அவர்களது நாட்டில் இதை தேவைகேற்றாபோல் மொழிபெயர்த்து பயன்படுத்திக்கொள்ளலாம் போன்றதொரு நிலையை உருவாகுவது. முக்கிய நோக்கம் அறிவியலை மாணவர்களுக்கு எளிய வழியில் எடுத்துச் செல்லுதல். இப்போது தான் உருவாகிக்கொண்டிருப்பதால், மேலதிகள் தவல்களை பிறகு சொல்கிறேன்.
சரி, இப்படிதான் இந்த வருடம் போய் இருக்கிறது, ஒரு மிக முக்கிய வருத்தம், இன்னும் Interstellar படம் பார்கவில்லை என்பதே! அடுத்த வருடம், மார்ச் மாதத்தில் தான் ப்ளுரே வருமாம்.. பொறுத்திருந்து பாப்போம்! அதே போல பார்த்துவிட்டு மனம்கலங்கி அழுத படம் என்றால் “பிசாசு”. மிஸ்கின் எப்பவுமே எனக்கு பிடித்த இயக்குனர், படம் அருமை என்று சொல்லலாம், ஆனால் அந்த வார்த்தை அதற்க்கு போதாது!
2014 இலேயே இதுதானாடா உனக்கு பெரிய பிரச்சினை என்று கேட்பவர்களுக்கு, “ஊர்வசி ஊர்வசி, டேக் இட் ஈசி பாலிசி” என்று பாட்டுப்படித்து விட்டு செல்லவேண்டியது தான்! ஊர்வசி என்றால் யாரு என்று மட்டும் கேட்காதீர்கள்! என்னால் புனைவுக்கட்டுரை எல்லாம் இப்போது எழுத முடியாது!
சரி முடித்துவிடுவோம்! எல்லோருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள், வரப்போகும் ஆண்டு உங்களுக்கும் சோதனையோடு(?!) சேர்ந்த சாதனைமிக்க ஆண்டாக இருக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன், இல்லாட்டி வாழ்த்த வதில்லை வணங்குகிறேன், இப்படி எதாவது ஒன்றை போட்டுக்கொள்ளவும்.
இறுதியாக, எனக்கு பிடித்த பாடல் வரிகள், பிசாசு படத்தில் இருந்து..
போகும் பாதை தூரமில்லை
வாழும் வாழ்க்கை பாரமில்லை
சாய்ந்து தோள் கொடு
இறைவன் உந்தன் காலடியில்
இருள் விலகும் அகஒளியில்
அன்னம் பகிர்ந்திடு
அன்னம் பகிர்ந்திடு
நதிபோகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை
வலிதாங்கும் சுமைதாங்கி மண்ணில் பாரமில்லை
ஒவ்வொரு அலையின் பின் இன்னொரு கடலுண்டு
நம் கண்ணீர் இனிக்கட்டுமே
கருணை மார்பில் சுனை கொண்டவர் யார்
அன்னை பாலென்றாளே
அருளின் ஊற்றைக் கண்திறந்தவர் யார்
இறைவன் உயிரென்றாரே
பெரும் கை ஆசியிலும்
இரு கை ஓசையிலும்
புவி எங்கும் புன்னகை பூக்கட்டுமே
சிறி சரவணா