1935 நத்தார்

பேடன்வெய்லருக்கு மீண்டும் வந்து, முன்னர் நான் ஈடுபட்டிருந்த கருமங்களைத் தொடர்ந்தேன். நத்தார் அணுகிக் கொண்டிருந்த வேளையில் கமலாவின் நிலையில் வீழ்ச்சி தொடங்கியது. மீண்டும் நெருக்கடி. அவளுடைய வாழ்வினை உண்மையிலேயே பயம் ஊசலாடியது. 1935ன் அந்தக் கடைசி நாட்களிலே வெண்பனி படந்திருந்த காலத்திலே என்ன செய்வதென்று தெரியாமலும், எத்தனை நாட்கள் அவள் உயிருடன் இருப்பாள் என்று தெரியாமலும் தவித்துக் கொண்டிருந்தேன்.

வெண்பனி மூடியிருந்த அந்தக் காட்சி குளிர்ந்த அமைதியான ஒரு மரணமாகத் தெரிந்தது. கடந்த காலத்து தைரியமான நம்பிக்கையினை நான் இழந்திருந்தேன்.
அந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கமலா மிகவும் தைரியமாக முயன்றாள். அவளுடைய நிலை சற்றுத் தேறியபோது பேடன்வெய்லரில் இருந்து தன்னை வேறிடத்திற்கு எடுத்துச் செல்லுமாறு எங்களை வேண்டினாள். அந்த இடம் அவளுக்கு மிகவும் களைப்பை உண்டு பண்ணியதை மறைப்பதற்கு. மற்றுமொரு காரணம், இன்னுமொரு நோயாளி அந்த மருத்துவ நிலையத்தில் மரணமானதாகும். அந்த நோயாளி கமலாவிற்கு சில வேளைகளில் மலர்கள் அனுப்பியிருந்தார். அவன் ஒரு ஐரிஸ் நாட்டு பையனாவான். அவன் கமலாவை விடவும் திருப்தியாய் இருந்ததோடு வெளியில் சென்று உலாவுவதற்கும் அனுமதிக்கப்படடிருந்தான், அப்பையனுடைய திடீர் மரணத்தை நாங்கள் கமலாவிற்குத் தெரியாமல் மறைத்தோம், ஆனால் நாங்கள் அதில் வெற்றிபெறவில்லை. நோயாளிகளிற்கு, அதுவும் இவ்வாறான சிகிச்சை நிலையங்களில் தங்கியிருப்பவர்களிற்குத் தெரியாமல் மறைக்கப்படும் விடயங்களை அறியக் கூடிய ஆறாம் அறிவு அபிவிருத்தி அடைந்ததாகவே தெரிகின்றது.

ஜனவரி முதலாம் தேதி, லண்டனுக்கு மீண்டும் ஒரு சிறிய பயணம் மேற்கொள்ள பாரிசிக்குச் சென்றேன். வாழ்வு மீண்டும் என்னை இழுத்தது. இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக நான் இரண்டாம் முறையாகவும் தெரிவுசெய்யப்பட்ட செய்தி லண்டனில் எனக்குக் கிடைத்தது. அடுத்த ஏப்பிரலில் காங்கிரஸ் கூடவிருந்தது. நண்பர்கள், இத்தெரிவு இடம்பெறும் என ஏற்கனவே தெரிவித்திருந்ததால் நான் இத்தெரிவை எதிர்பாத்திருந்ததோடு கமலாவிடமும் இதைப் பற்றி கதைத்திருந்தேன். இந்நிலையில் கமலாவை விட்டுப் பிரியமுடியாமல் தலைமைப்பதவியை இராஜினாமா செய்வது பற்றி நான் மிகவும் அந்திரப்பட்டேன். அவள் என்னை இராஜினாமாச் செய்ய அனுமதிக்கவில்லை. அவள் சற்று நன்றாயிருந்தாள், திரும்பி வந்து அவளோடு இணைந்து கொள்ளலாம் என யோசித்தேன்.

1936 ஜனவரி இறுதியில் பேடன் வெய்லரில் இருந்து சுவிஸ்லாந்தில் உள்ள லோகேன் எனும் நகருக்கு அண்மையிலிருந்த சுகநல நிலையத்திற்கு கமலாவை மாற்றினோம்.

மரணம்
சுவிஸ்லாந்திற்கு மாற்றியதையிட்டு இருவரும் மகிழ்ந்தோம். எனக்கு நன்கு பரிட்சயமான சுவிஸ்லாந்தின் அப்பகுதி, கமலாவிற்கு வீட்டிலிருந்த உணர்வை ஏற்படுத்தியது. அவள் சந்தோசமாய் இருந்தாள். அவளின் உடல் நிலையில் பெரிய மாற்றமில்லை. மீண்டும் நெருக்கடிநிலை தோன்றும் போல் தெரியவில்லை. குறிப்பிட்ட காலத்திற்கு அவளுடைய நிலை இவ்வாறு தொடரும் எனும் நிலை காணப்பட்டதோடு அவளுடைய உடல் நிலையில் மெதுவானதொரு முன்னேற்றம் காணப்பட்டது.

இந்தியாவில் இருந்து அழுத்தமான அழைப்பு வந்ததோடு நண்பர்கள் நச்சரித்துக் கொண்டேயிருந்தனர். எனது நாட்டுப் பிரச்சனைகள் பற்றிய சிந்தனையில் எனது மனம் அமைதியிழந்து தவித்தது.

சில வருடங்களாகச் சிறையினால் நான் அவளிடம் இருந்து பிரிக்கப்பட்டும் பொதுக் காரியங்களில் முழுமனதோடு ஈடுபாடு கொள்ளாமலும் அவதிப்பட்டேன். லண்டன், பாரிஸ் நாட்டுப் பயணங்களும் இந்தியச் செய்திகளும் என்னை ஆட்டிப்படைத்தன.

கமலாவோடும் வைத்தியரோடும் உரையாடி ஆலோசனை பண்ணியதால் இருவரும் எனது இந்தியப் பயணத்தை அனுமதித்தனர். கே.எல்.எம். டச்சு விமானத்தில் எனது பயணத்தை உறுதிப்படுத்திக் கொண்டேன். லோசேனியாவிலிருந்து ஜனவரி 28ல் நான் வெளியேற வேண்டியிருந்தது. எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தியான நிலையில் எனது பயணத்தை கமலா விரும்பவில்லை என்பதை நான் உணர்ந்தேன். எனது திட்டத்தை மாற்றும் படி அவள் வாயினால் சொல்லவில்லை. நீண்ட நாள் இந்தியாவில் நிற்கமாட்டேன். இரண்டு, மூன்று மாதங்களில் திரும்பிவிடுவேன் என்று கமலாவிடம் சொன்னேன். அவளுக்கு தேவையேற்படுமானால் அதற்கு முன்னதாகவே நான் வந்துவிடுவேன். ஒரு வாரத்திற்குள்ளேயே ஆகாயமூலம் அச்செய்தி கிடைக்கும் போது என்னால் வந்து விடமுடியுமென்றேன்.

எனது இந்திய பயணத்திற்கு நான்கைந்து நாட்கள் இருந்தன. இந்திரா, பெக்ஸ் எனும் பக்கத்துப் பாடசாலையில் கற்றுக்கொண்டிருந்தாள். அந்த இறுதி நாட்களை எம்மோடு கவனிக்க அங்கு வந்திருந்தாள். வைத்தியர், என்னைச் சந்தித்து ஒருவாரமோ பத்து நாட்களோ எனது பயணத்தை தள்ளிப்போடும் படி ஆலோசனை கூறினார். உடனடியாக நான் அதை ஒப்புக்கொண்டு மற்றுமொரு விமான ஆசன ஒதுக்கீட்டை அடுத்த கே.எல்.எம் விமானத்தில் பதிவு செய்தேன்.
அந்த இறுதி நாட்களில் மதிப்பிட முடியாத மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. உடலில் பெருமாற்றங்கள் இல்லை. ஆனால் அவளைச் சூழவுள்ள பொருட்களில் கவனம் குறைந்தது. தன்னையோரோ அழைப்பது போலும், யாரோ அறையின் உள்ளே வருவது போலும் தான் உணர்வதாகக் கூறினாள். என்னால் எதையும் கேட்கவோ பார்க்கவோ முடியவில்லை.

பெப்ரவரி 28 அதிகாலை அவள் தனது இறுதி மூச்சையெடுத்தாள். இந்திராவும் எமது நம்பிக்கைக்குரியவரும், தொடர்ச்சியாகக் கடந்த மாதங்களில் கமலாவைக் கவனித்து வந்த வைத்தியர். எம் ஆற்றலும் அங்கிருந்தனர். சுவிஸ்லாந்தின் அண்மித்த நகரங்களில் இருந்து வந்த சில நண்பர்களும் நாமும் லோசனில் உள்ள சேமக்காலைக்கு அவளை எடுத்துச் சென்றோம். அவளுடைய அன்பான முகமும், அழகிய உடலும், அருமையான அழகிய புன்சிரிப்பும் ஓரிரு நிமிடங்களுள் சாம்பலாய் சுருக்கப்பட்டது. பரந்த மனப்பாங்கினையும், பிரகாசத்தையும் வாழ்வு முழுவதும் கொண்டிருந்தவளின் அஸ்தி ஒரு சிறிய டப்பாவினுள் அடங்கி இருந்தது.

முருகேசு தவராஜா
முருகேசு தவராஜா

“The Discovery of India”.; (Javagallal Nahru ) என்ற நூலைத் தழுவி எழுதப்பட்டது