“மது மயக்கம் நீக்கி, மனிதத்துவம் வளர வழிசமைப்போம்….”

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.”(இல்வாழ்க்கை-50) என்ற குறள் பாவானது “நாம் வாழ வேண்டிய நெறியுடன் வாழ வேண்டும்.” என்பதை வலியுறுத்துகின்றது. இதையே எமது சான்றோர் “பொய், களவு, கொலை, மது, மாது என்பன விலக்கி, சிறப்புடன் வாழுங்கள் என்றனர். இல்வாழ்க்கையின் இலக்கணம் என்பதுவும் இதுவே. அதாவது நாமும் வாழ்ந்து, நம்மைச் சேர்ந்த அனைவரையும் வாழவைப்போம் என்பதாகும். இதுவே சிறந்த மனிதத்துவமாகவும் கருதப்படுகின்றது.

ஆனால், நாமோ! இன்று “விலை கொடுத்து, மெய்யை மறந்து, மதுவை வாங்கி, அறிவை மயக்கி; வாழும் முறை தெரியாது அல்லல்படுகின்றோம். இதையே பொய்யா மொழிப் புலவர், “கையறி யாமை யுடைத்தே பொருள் கொடுத்து
மெய்யறியாமை கொளல்”(கள்ளுண்ணாமை-925) என்கிறார். உலக மக்களின் ஆரோக்கியமான நல்வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தலாக மதுப்பாவனை இருந்து வருகின்றது. இதனால் மனித குலமே சீரழிந்து கொண்டிருக்கின்றது. புத்தாக்கங்கள் நிறைந்த புதுமையான உலகில் மேல்நாட்டுத் தயாரிப்புக்களும், உள்நாட்டுத் தயாரிப்புகளும் விதம் விதமான விளம்பர உத்திகளின் ஊடாக புதிய புதிய வடிவங்களில் அறிமுகமாகிய வண்ணமே உள்ளன. இதன் காரணமாக பல கோடிக்கணக்கான குடும்பங்கள் குட்டிச் சுவராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போதைப் பொருள்களை சட்டவிரோதமற்றவை, சட்டவிரோதமானவை என இரண்டு வகைக்குள் அடக்கலாம். குறிப்பாக புகையிலை, மதுசாரம் போன்றவை சட்டவிரோதமற்றவையாகவும், கஞ்சா, அபின் போன்றவை சட்டவிரோதமானவையாகவும் கருதப்படுகின்றன. ஆனால் சட்டவிரோதமற்ற மதுப்பாவனை எம்மை சட்டவிரோதமான செயற்பாடுகளிற்குள் தள்ளி விடும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.

இந்த வகையில் ஒருவரின் தொடர்ச்சியான மதுப் பழக்கமானது அவரை நாளடைவில் மதுவிற்கு அடிமைப்படுத்திவிடும். அதாவது மதுவைப் பாவிப்பதால் ஏற்படும் தற்காலிக இன்பமும், மனதின் உற்சாகமும் தொடர்ச்சியான மதுப்பாவனை மூலம் அது இல்லாமல் அவரால் வாழமுடியாது என்ற நிலையையேற்படுத்தும். இது உடல், உள பாதிப்புக்களுக்கும்; சமூகத் தாக்கங்களிற்கும் ஆட்பட வேண்டிய நிலையை உருவாக்கும். மேலும் ஒருவரின் சமூகப் பெறுமானத்தைக் குறைத்து அவர், தனிமனித, சமூக குழப்பங்களிற்கு காரணமானவராக அடையாளப்படுத்தப்படுவார்.

இந்த மதுப்பாவனையானது தனிமனிதனைப் பொருத்தமட்டில் மூன்று விதங்களில் தீங்கு விளைவிக்கின்றது. முதலாவது மதுபாவிப்பதால், அது உட்செல்லும் உறுப்புக்களில் ஏற்படும் விளைவுகள், இதனால் வாயில் அல்லது சுவாசப்பையில் புற்றுநோய் ஏற்படலாம். இரண்டாவது உட்சென்ற மது குருதி மூலம் எல்லாப் பாகங்களிற்கும் எடுத்துச் செல்லப்படுவதால் ஏற்படும் விளைவுகள், இதனால் மயக்கம், நடுக்கம் என்பன ஏற்படும். மூன்றாவது மது பாவிப்பதால் தனக்கு என்ன விளைவுகள் ஏற்படவேண்டும் என நினைக்கின்றாரோ அவ்வறிகுறிகள் தோன்றலாம். அதாவது சிந்தையில் ஏற்படும் குழப்பம் அவரது செயல்பாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தும். பாலியல் ரீதியான பிரச்சனைகளிற்கு இதுவே பிரதான காரணம் எனலாம்.

மேலும் இந்த மதுப்பாவனையானது பொருளாதாரச் சிக்கல், மாணவர்களின் கல்வியில் பாதிப்பு, இளைய சமுதாயத்தின் சீரழிவு, அடிமைத்தனமான சமூக உருவாக்கம் எனப் பல இன்னோரன்னான பிரச்சனைகளுக்கும் மூலமாய் உள்ளது. இந்த வகையில் மது அருந்துபவர்கள் தாங்களும் வாழாமல், பிறரையும் வாழவிடாதவர்களாகவே உள்ளனர். இந்த மதுப்பழக்கமானது கற்றவர் முதல் மற்றவர் வரையும்; நகரம் முதல் கிராமம் வரையும்; மேல்நிலை மக்கள் முதல் அடிநிலை மக்கள் வரையும்; ஆண் முதல் பெண் வரையும் என எதுவித பால், வர்க்க பேதங்கள், குல, மத, சாதி பேதங்கள் இன்றி அனைவரையும் பீடித்துள்ளதைக் காணலாம். உதாரணமாக நடனத் தாரகை மடோனா தொடக்கம் நமது சூப்பர் ஸ்டார் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

“மனிதன் ஒரு சமூகப் பிராணி” என்ற வகையில் அவனின் சமூகமயமாதல் செயற்பாட்டில் “குடும்பமே” முதல் நிறுவனமாக உள்ளது. எனவே குடும்பத்தில் ஊட்டப்படும் விழுமியங்கள், நெறிமுறைகள்இ கலாசார பண்பாட்டு அம்சங்கள், அனுபவங்கள் சார் அறிவுகள் என்பவை ஒருவனின் வாழ்விற்கு பிரதானமானவையாக உள்ளன. இந்த வகையில் ஒரு முழு மனிதனின் உருவாக்கத்தில் குடும்பமே பிரதான வகிபங்கை வகிக்கின்றது எனலாம். ஆனால் மதுப் பாவனையுள்ள ஒரு குடும்பத்திலிருந்து இப்படியான ஒருவரை நாம் எதிர்பார்க்க முடியாது. மாறாக பல்வேறு வகையில் அடிமைப்பட்ட ஒருவரே உருவாகுவார். இது வீரியமற்ற சமூக உருவாக்கத்திற்கு காரணமாகி நாளடைவில் அந்த தேசமே நொய்ந்துவிடும். இதையே எம்மவர் அன்று “மது வீட்டிற்கும் கேடு நாட்டிற்கும் கேடு” எனக் கூறினர்.

இவ்வாறு குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டோரை நாம் திருத்துவதென்றால் அவர்களிற்கு அன்பு காட்டி, புத்திமதி கூறி, சரியான சிகிச்சை அளித்து, தியான யோக பயிற்சிகளை வழங்கி வாழ்க்கையின் பெறுமதியை உணர்த்தலாம். அண்மையில் அமெரிக்க கொலராடோ மாநிலத்தில் போதை மருந்திற்கும், குடிக்கும் அடிமையான சிறார்களிற்கு தண்டனையாக வார வாரம் யோகா பயிற்சிக்கு செல்ல வேண்டுமென நீதிமன்ற தீர்ப்பு கூறப்பட்டுள்ளதாக இணையம் செய்தி தருகின்றது. தற்போது அவர்கள் போதையை விட்டு விட்டு படிப்பில் அதிக கவனம் செலுத்துவதாகவும் அது கூறுகின்றது.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் மது ஒழிப்பு சம்மந்தமாக பல்வேறுபட்ட விழிப்பூட்டல் நிகழ்வுகளை அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூக அமைப்புக்கள்; என்பவை முன்னெடுத்துள்ளதைக் காணலாம். இந்த வகையில் மன்னார், தோட்டாவெளியைத் தலைமையகமாக கொண்டியங்கும் “திருப்புமுனை புதுவாழ்வகம்” என்ற அமைப்பானது கருத்தமர்வுகள், விழிப்புணர்வுப் பேரணிகள், விழிப்பூட்டும் கலை நிகழ்வுகள், உளவள ஆற்றுகைகள் என்பவற்றின் ஊடாக பலரது வாழ்விற்கு ஒளியூட்டி வருகின்றது. அண்மையில் மட்டக்களப்பு பிராந்திய ஐக்கிய அபிவிருத்தி நிலையத்தின் (A.D.T) “குடும்ப நலம்” என்ற செயற்றிட்டத்தின் கீழ் வாகரை பிரதேச சபைப் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களிற்கு கருத்தமர்வுகள் நடைபெற்றன. இதில் பங்குபற்றிய பலர் திருப்புமுனை புதுவாழ்வகத்திற்கு சென்று புனர்வாழ்வு பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனவே இவ்வாறான செயற்பாடுகள் செயல்திறன் உள்ள வகையில் பரந்தளவில் உள்ளதா? இதனை ஒரு பாரிய சமூகப் பிரச்சனையாக எத்தனை சமூக அமைப்புக்கள் அடையாளம் கண்டுள்ளன? சர்வதேச மது ஒழிப்பு தினத்துடன் மட்டும் முடிவடையும் ஒரு செயல் திட்டமா? புனர்வாழ்வு பெற்றுத் திரும்பியவர்கள் தொடர்பான மீள் மதீப்பீடு உள்ளதா? எனப் பல வினாக்கள் தொடுக்கப்படும் நிலையில், சில அமைப்புக்களின் செயற்பாடுகள் மனநிறைவைத் தரும் வகையில் உள்ளன. இருப்பினும் ஏனைய அமைப்புக்களும் தமது செயற்பாடுகளை வலுவூட்டவேண்டியது காலத்தின் தேவையாகும்.

இந்த வகையில் “தீதும் நன்றும் பிறர் தர வரா”(புறநானுறு-192;“கணியன் பூங்குன்றனார்”;) என்பதை உணர்ந்து, உயிர்கள் இன்புற்று வாழவேண்டுமாயின் நல்லதைச் செய்து தீயதை விலக்கி மனிதப் பிறவியின் நோக்கத்தை ஈடேற்றுவோம். “மது அருந்துபவர்கள் மதிக்கப்படுவதில்லை மாறாக மிதிக்கப்படுவார்கள்” என்பதை மாற்றி அவர்களுக்கு மனிதத்துவத்தின் பெறுமதியை உணர்த்தி, சமூக நீரோட்டத்தில் இணைப்பது சமூகத் தலைவர்கள், சமூக அமைப்புக்கள் என்பவற்றின் தார்மீக கடமையாகும். இதனை சிந்தையில் ஏற்றி “நலிந்தவருக்கு கைகொடுத்து புதியதொரு உலகம் செய்வோம் வாரீர்.”

க.காண்டீபன்