“கண்ணாமூச்சி ரே…… ரே………”

 

“பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவரினதும் இலட்சியம் பல்கலைக்கழகம் என்ற உயரிய கல்விச்சாலையை அடைந்து அங்கு பட்டம் பெறவேண்டும், அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்இ பல்கலைக்கழகம் சென்றால் உங்கள் வாழ்வின் உச்சியில் நீங்கள் ஒவ்வொருவரும்………………” என்ற தமிழ் ஆசிரியரின் வழமையான நஞ்சரிப்பு அது. அதைக் கேட்டே பல்கலைக்கழகம் பற்றி கனவு கண்ட மாணவர்களுள் ரகு முக்கிய புள்ளி. உழைப்பிற்கேற்ற பலனும் கிடைத்தது.

கிணற்றுத் தவளையாய்க் கிடந்தவன் வெளியே வந்தது என்னவோ பல்கலைக்கழகம் சென்றுதான். இதை இன்றைக்குக் கூட அவன் கற்பூரம் அடித்துச் சத்தியம் பண்ணத் தயார்.

பல்கலைக்கழக நாட்கள் வாரங்களாகின, வாரங்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகிய போது தான், அவன் படித்த பழைய கவிதையொன்று ஞாபகத்திற்கு வந்தது.

“வெளியே உள்ளவர்கள்
எப்படா!
உள்ளே போவோம் என நினைப்பதும்,
உள்ளே போனவர்கள்
எப்படா!
வெளியே வருவோம் என நினைப்பதும்,
பல்கலைக்கழகத்தில்.”

இந்த வரிகளிள் உண்மை அன்றே அவனுக்கு விளங்கியது. இது அவன் மனதில் ஏற்பட்ட முதல் கோணல்.

இனம், மதம், மொழி என இரண்டுபட்டுப் போன நாட்டில், தமிழன் “வந்தான் வரத்தான்” என்ற பெயரோடு எதுவும் செய்யமுடியாத கையாலாகாதவனாக வாழும் உரிமையே கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில், பட்டம்படித்து அதை முடித்து வருவதென்னமோ கின்னஸ் சாதனைதான்.

அவனுடன் உயர்தரம் படித்த சகாக்கள் மோட்டார் சைக்கிளில் முன்னால் வந்து ஸ்பீட் பிரேக் போட்டு “என்னடா மச்சான் இன்னும் பைல விடல போல” எனக் கேட்கும் போது, மனதில் முள் குத்தியது என்னவோ உண்மைதான். “சீ….. NGO போனா இவனுகள் நாளைக்கு ரோட்டில!” என எண்ணியே மனதைத் தேற்றிக் கொள்வான்.

ஒருவாறு பட்டமும் பெற்றாகி விட்டது. இனி வேலை தேடும் படலம் ஆரம்பம். முதலில் வேலையில்லா பட்டதாரி சங்கத்தில் பெயர்ப்பதிவு. தொடர்ந்து சாலைமறியல், ஊர்வலம், சாத்வீகப் போராட்டம், உண்ணாவிரதம் இவையே இன்றைய பட்டதாரிகளின் நிகழ்ச்சி நிரல். இதற்கு ரகுவும் விதிவிலக்கா என்ன? “பட்டதாரிகளின் கவனையீர்ப்பு போராட்டம்” என்ற பெயரில் செய்யப்பட்ட போராட்டத்தில் “நீங்கள் கவனம்”!! எலக்ஷென் வரட்டும் பார்ப்போம்! என்ற பதிலே வந்தது “படித்தும் வேலையில்லாமல் ரோட்டில் திரியுரமே……” இது அவன் மனதில் ஏற்பட்ட அடுத்த கோணல்.

படைத்தவன் படியளக்க மாட்டானா? என்ற நம்பிக்கையுடன் தினமும் கிரி கொமினிகேஷன் வாசலில் நின்றதன் பலன், “08-02-2010 அன்று 2.30 மணிக்கு கொழும்பில் உள்ள எமது திணைக்கள தலைமையகத்தில் நேர்முகப் பரீட்சை தவறாது சமூகமளிக்கவும்.” செய்தி தந்தது தந்தி. இன்னும் இரண்டு நாள்களே உள்ள நிலையில் அவனுக்கு என்ன செய்தென்றே புரியவில்லை. அங்கு உறவுகளும் இல்லை, நண்பர்களும் இல்லை. இரண்டு தடவைகள் சுற்றுப் பயணம் செய்துள்ளான் அவ்வளவு தான். அந்த அனுபவத்தைக் கொண்டு கொழும்பு வீதியில் இறங்க அவன் தயாரில்லை. இந்நிலையில் அயலவர் ஒருவர் கொழும்பு வந்தால், தான் உதவி செய்வதாக ஒப்புக் கொண்டார்.

“பஸ்சில் ஏறிவிட்டேன்….., பஸ் புறப்பட்டு விட்டது….” என ஆரம்பித்த அவனது நேரடி வர்ணனை சரியான கால இடைவெளியில் தொடர்ந்தது. போனை நசிக்கிய படியே “சிவாப்பா……! நீங்க சொன்ன மாதிரி ஐந்து லாம்புச் சந்தியிலே இறங்கித்தன், நீங்க வாரீங்களா…….?” எனக் குரல் கொடுக்க “தம்பி! முன்னுக்கிருக்கிற ஹோட்டலில் இரு இந்தா வாரேன்….” என்றார்.

கொவ்வைப் பழம் போல் இருந்த அவரின் இரண்டு கண்கள், ரகு தொலைபேசியில் படுத்திய தொல்லைக்கு சான்று கூறின. ஸ்கூட்டியில் வந்தவர் ரகுவை மகளின் வீட்டில் தங்க வைத்தார். மதம், மொழி, இனம் கடந்து மனங்கள் வென்றதை ரகு அங்கே கண்டான். ஆர்ப்பாட்டம் இல்லாத அசத்தலான கவனிப்பு. நேரம் நெருங்கியதும், ரகு இன்டவிக்கு போவதற்குரிய ஆயத்தங்களில் ஈடுபட்டான்.

உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது, சிவாப்பாவிடம் ஆட்டோயிருந்த படியால் இராஜகிரியவிற்கு செல்வதற்கு வசதியாக இருந்தது. ஆட்டோபிடித்து செல்வதென்றால் கடைசி 500 ரூபாயாவது கேட்டிருப்பான்.
அங்கே சென்றதும் “ஆ……. மச்சான் வா…… உனக்கு எத்தனை மணிக்கு, நாங்கள் காலையில வந்ததடா! இன்னும் அவனுகள் உள்ள கூப்பிடல…..” என்றான் பிரதீப்;. அதைக் கேட்டதும் ரகுவிற்கு தூக்கிவாரிப் போட்டது. “காலையில வந்தவனுக்கே இன்னும் முடியல…. அப்ப நமக்கு….” நாளைக்கென்று சொன்னா வாரல்ல, அந்த மனுஷனை இதற்கு மேல் கஷ்டப்படுத்தக் கூடாது”. என நினைத்துக் கொண்டே “அப்ப…. இங்க என்ன நடக்குது….” என்றான் ரகு.

“அதென்னத்தப்…… பேசுற மச்சான், இங்கே வேலை செய்றவனுகள் அவனுகளுக்கு தெரிந்தவர்களைக் காட்டித்துப் போறானுகள் இங்க நமக்கு தொண்டத் தண்ணியும் காயுது, பசி வேற….” என்றான் பிரதீஸ், மிகவும் சலிப்பான குரலில். முஸ்தபாவோ சீனியர் இந்தக் கதையைக் கொஞ்சம் கேளுங்க என ஆரம்பித்தான், “அப்பிலிகேஷன் போடாமலே நாலு பேரு, இந்தக் கொடுமைகளையெல்லாம் யார்கிட்ட சொல்றதோ……?”

தலைமையகங்களில் மாட்ட வேண்டிய படங்கள் பைல்களுக்குள்ளே ஒட்டிக் கொண்டிருந்தன குடும்பத்தோடு சிரித்தபடி ரகு ஜாடையால் இந்தக் கூத்தை முஸ்தபாவிடம் காட்டஇ “சீ…….. போங்க…… இதென்ன! பலர் விண்ணப்பிக்காமலே சிபாரிசு கடிதங்களுடன் மட்டுமே வந்துள்ளனர். வேறு பண்டம் எதையும் கையில காணல. சிலருக்கு சிபாரிசு கோல்கள் வேறு, இந்த கொடுமைகளைத் தான் இவ்வளவு நேரமும் பார்த்துக் கொண்டிருக்கிறம்.” என்றான் விரக்தியாக.

பசி வயிற்றைக் கிள்ளவே, ரகு உட்பட சிலர் பொறுமையிழந்தவர்களாய் தலைமையகம் நோக்கிப் புறப்பட்டனர். அப்போது உத்தியோகஸ்தர்களில் ஒருவன் “சீ… எங்க போறீங்கஇ பேசாம வீட்டுக்குப் போங்க….. இங்க ஆட்களெல்லாம் எடுத்தாச்சி உங்களால என்ன செய்ய முடியும்?” என்றான். அதிகார மமதை அந்தத் தொனியிலே தெரிந்தது. முகத்தில் அறைந்த அவ் வார்த்தைகளைக் கேட்டவுடனே “இரையைக் காவும் சிங்கங்கள்” போல பாய்ந்தார்கள் அவன் மீது. “கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும்” என்று சும்மாவா சொன்னார்கள்.

ஒருவாறு உள்ளே போனதும் நோட்டுகள் போல் சான்றிதழ்கள பிரட்டப்படவே, ரகு ஏதோவொரு வங்கியில் நிற்கின்றோமோ என நினைத்து ஒரு தடைவை கிள்ளியும் பார்த்துக் கொண்டான். அதைத்தொடர்ந்து ஆங்கிலத்தில் இரண்டொரு கேள்விகள், சில பதிவுகள், “சரி நீங்க போகலாம்” என்ற விடை.

ஒரு பெரு மூச்சை ஆழமாக விட்டுக் கொண்டே வெளியே வந்த ரகு, நண்பர்களிடம் போய் “மச்சான், இனி கொழும்புல நடக்கிற இன்டவியென்றா வாரல் அப்படியொரு வேலையும் தேவல் சும்மா நாம யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு என பஸ் ஏறி வந்தா இங்க, அவன் அவன் ஸ்டத்திற்கு என்னென்னவோ செய்யுறானுகள்; இதற்கு செலவழிக்கிற காச பேசாம உண்டியலில போடலாம்”. என ஓரே மூச்சில் சொல்லி முடித்தான். பக்கத்தில் நின்ற யாழ் நண்பனும் பெரிதாக தலையாட்டி ஆமோதித்தான்.

இனி என்ன செய்வது, அவரவருக்குரிய இடங்களை நோக்கிப் புறப்படலானார்கள். ரகு மட்டக்களப்புக்கு புக் பண்ணுவதற்காக கோழிக்கடை நோக்கி புறப்பட்டான்.

பஸ்சிலிருந்த படியே காலை நிகழ்வுகளை அசை போட்ட போது,

“நெஞ்சு பொறுக்குதில்லையே- இந்த
நிலை கெட்ட மாந்தரை நிலைக்கையிலேயே…..”

என்ற பாரதியின் கவிவரிகளே ரகுவின் மனதைத் தொட்டன.

வெள்ளவத்தையை பஸ் அடைந்த போது அருகில் வந்த ஒருவர் ரகுவின் தோளிலே தட்டி “தம்பி சீட் புக் பண்ணினதா?” எனக் கேட்டார். டிக்கட்டை அவரிடம் நீட்டிய போது, அவரும் நீட்டினார். இருவருக்கும் ஒரே இலக்கமிடப்பட்டிருந்தது. முதலில் இருந்ததால் சீட் தப்பியது. வரும் போது பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்தது அப்போது தான் ஞாபகத்திற்கு வந்தது ரகுவிற்கு. மனிதர்களைப் பற்றி நினைக்கவே கண்ணைக் கட்டியது தூக்கம்; வசதியாக சாய்ந்து விட்டான் ஒரு கோணலாக.

க.காண்டீபன்.

படம் : இணையம்