விபுலாநந்தம் – தெய்வீகம்

காரேறுமூதூர்க் களக்கொழுந்தே, நாம் வாழும் கிழக்குதித்த ஞான சூரியனே உலகிற்கு தமிழ் ஒளி பரப்ப இங்குதித்த உத்தமனே வாழ்க.

குழந்தைப் புலவனாக, ஈழத்தின் முதல் தமிழ் பண்டிதனாக பயிற்றப்பட்ட ஆசிரியனாக, விஞ்ஞான பட்டதாரியாக, பன்மொழி புலவனாக மூவாசையும் துறந்தோனாக, ஆராய்வளனாக, தமிழர் மனதிலெல்லாம் பதிந்த அறிஞர்க்கு அறிஞனாக நமது முதுசமாக தமிழ் முனிவனாக, எவ்வாறு உயர்ந்தான் விபுலாநந்தன் எனும் பேராசான். அது திருவருளே அன்றி வேறில்லை.

நாம் திரும்பிய பக்கமெல்லாம் விபுலாநந்தர் வீதிகள், விபுலாநந்தர் சிலைகள், விபுலாநந்தர் மன்றங்கள், விபுலாநந்தர் விழாக்கள், விபுலாநந்தர் உரைகள்; ஐம்பந்தைந்தே ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மனிதர் மாமனிதர் இல்லாவிட்டால் இவை சாத்தியமாகுமா?

பாட்டுக்கொரு புலவனான பாரதியையே பண்பட்ட கலைஞனாக வீரத்தமிழனாக தமிழகத்துக்கு காட்டிக்கொடுத்தவரே விபுலானந்த அடிகளாரென்றால் அவரது சக்தி பாராசக்தி அல்லவா!

திருகொண்டகருவினுக்கு உருக்கொடுத்த கண்ணம்மையாரின் கருப்பை தெய்வீகமானது. அது ஏற்கனவே கண்ணகித் தாயின் தெய்வீகத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட தார்பரியம் தானாக நிகழ்ந்திருக்குமா?

ஆயிரத்து எண்ணூற்று தொன்னூற்று இரண்டில் இரு அதிசயங்கள் நிகழ்ந்தன. இங்கு விபுலானந்தர் அவதரிக்கிறார். தமிழ் நாட்டிலோ மகோபாத்தியாயர், உ.வே.சுவாமிநாத ஐயர் இலங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்திற்கு உயிர் கொடுக்கிறார். பின்னாளில் விபுலாநந்த அடிகளார் தனது இடையறாத முயற்சியினால் யாழ் நூல் தந்து சிலப்பதிகாரத்திற்கு வலிமை சேர்க்கிறார். இளங்கோ அடிகள் அரசினைத் துறந்தவர், விபுலாநந்த அடிகள் ஆசையைத் துறந்தவர். இருவருமே இருவகை துறவிகள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இளங்கோ அடிகளும், விபுலாநந்த அடிகளும் எவ்வாறு ஈர்க்கப்பட்டனர்? ஆயிரத்து எண்ணூற்று தொன்னூற்று இரண்டு தமிழிற்கு திருவருள் ஆண்டு, அல்லவா!

கீழ் நாடுகளில், குறிப்பாக இந்தியாவின் அனைத்து அரும்பெரும் செல்வங்களையும் அள்ளிச் சென்றார்கள் மேல் நாட்டோர். ஆனாலும் அவர்களெல்லாம் நிம்மதியெனும் பெருச்செல்வத்தை இழந்தே போயினர். அவர்களுக்கெல்லாம் சுவைப்பதற்கு தமிழ்த்தேன் கொடுத்தவர் நமது விபுலாநந்த அடிகளார் ஆகும்.

குற்றமறத் தமிழ் உரைக்கும் தவப் புதல்வன் உண்மையும், நேர்மையும், செம்மையும் ஒருங்கே சேர பன்மொழிப் புலமையும் கொண்டு உலகிற்கெல்லாம் அறிவு ஞானத்தை முத்தமிழாக கொடுப்பாராயும், கொள்வாராயும் திகழ்ந்தார். தமிழ் மறையை மேல் நாட்டாருக்கும், ஆங்கில மறையை தமிழருக்கும் பரிமாற்றம் செய்த பரி பாசையாளர். மறை எனும் பெயரில் உண்மைகளை அறிந்த பெரியோர்கள் தம்மோடு மட்டும் அதை மறைத்து வைத்திருந்த காலத்தில் இவ்வித்தியா ஞானம் அடிகளாருக்கு வாய்த்தது தெய்வீகம் அல்லவா?

அடிகளாரின் நடையினையும், செயலையும் படிக்கின்ற போது நம்மிடையே தெய்வம் ஒன்று வாழ்ந்திருந்து நமக்கெல்லாம் நலம் சேர்த்திருக்கிறது என்பது நன்கு புரிகின்றது. நமது இடத்திற்கும் தமிழ் கூறும் நல்லுலகிற்கும் அடிகளார் வாதாடியும், போராடியும் தமிழ் புலமை தந்திருக்கிறார். என்பதனை நினைக்கும் போது அவர் சுவைபடத் தந்த இலக்கியங்கள் போன்று நாமும் மிளிர முடியாத என ஏக்கமே எழுகிறது.

இன்று எண்பத்தைந்து வயதினைத் தாண்டி வாழும் அறிஞர்கள் சிலர் அடிகளாரை சந்தித்து இருப்பார்கள், அவர்தம் போதனைகளைக் கேட்டிருப்பார்கள். அனேகமானோர் இவ்வுலகை விட்டே போயிருப்பார்கள். இருப்பினும் அடிகளார்க்கு அடியவர்களாக இருந்த பெரியவர்கள் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாக்கங்கள் நம் இனத்தவரை போசிக்கப் போதிய வல்லமையுடன் இருப்பதையிட்டு நாம் பெருமைப்பட வேண்டும்.

தாய் மொழி பற்றிய தம் தமிழ் முனிவனின் கூற்றைப் பாருங்கள். “அயநாட்டோடு கொடுப்பனவும் கொள்வனவும் செய்யாதொழியின் செல்வம் நிலைபெறாது. உயிர்க்குறுதி பயக்கும் நூல்கள் அவரிடத்துள்ளன. நமது உண்மை நூல்களை நாம் கொடுப்பதற்கு முன்னமே அவற்றின் சிறப்பையுணர்ந்த மேநாட்டார் தாமாகவேயெடுத்துக்கொண்டனர். அவர் பன்நாள் வருந்திச் செய்த ஆராய்ச்சியின் பயனாகத் திரட்டி வைத்திருந்த எண்ணிறந்தனவாகிய கணிதநூல், வானநூல், ஒளிநூல், மின்னியக்கநூல், அனல்நூல், உடநூல், மனநூல். சிவநூல், பொருட்டன்மைநூல், இரசாயனநூல், உலகசரித்திரம், பூகோளவிவரணம், வர்த்தகநூல் ஒன்றையேனும் நாம் தமிழ்ப்படுத்தவில்லை. என்னே நம் பேதமையிருந்தவாறு! இங்ஙனஞ் செய்யாதொழிந்தது, ஆங்கிலம் கற்ற தமிழ் மக்களை மேலும் பொறுத்த குற்றமாகும். பட்டணவாசிகளாகிய தமிழ் மக்கள் பெரிதும் ஆங்கிலப் பத்திரிகைகளையே ஆதரிக்கின்றார்கள். தாம் ஆராய்ந்து கண்ட முடிபுகளை ஆங்கில மொழியில் எழுதி அம்மொழிக்கே மேலும் மேலும் மதிப்புண்டாக்குகின்றனர். ஆங்கிலத்தில் கவிதை எழுதவுந் தொடங்கிவிட்டனர். வேறு நாம் பேசுவதென்ன? கவிசிரேஷ்டராகிய ரவீந்திரநாத் தாகூர் தமது தாய் மொழியில் கவியெழுதினமையாற்றான் உலகத்தாரது நன்மதிப்பைப் பெற்றாரென்பதை ஆங்கிலங்கற்ற தமிழ் மக்கள் அறியார்கள் போலும்! எட்டுமுறை குட்டிக்கரணம் போட்டாலும் தாய்மொழியன்றி பிறிதொரு மொழியில் அம்மொழியாளரால் முதற்றரத்தென்று மதிக்கப்படத்தக்க நூலியற்றல் இயலவே இயலாது.”

நடைமுறை உலகியல் பற்றிய தெய்வீக அடிகளாரின் கூற்றினையும் படியுங்கள். “இந்நாளில் உள்ள சட்டசபையில் விசுவாமித்திரருக்கும், வசிட்டருக்கும் இடமில்லை; இவர்கள் தினையளவும் பொன்னில்லாத துறவிகளாதலின். காருண்ணிய அரசாங்கத்தின் சிறிது சிறிதாகவேனும் நமக்கு சுயவரசுச்சலாக்கியத்தை தந்துவிடுகிற இந்த நாளில் அவ்வகையான சலாக்கியத்தைப் பயன்படுத்தவேண்டிய அறிவினை விருத்தி பண்ணிக்கொள்ளுதல் அவசியம் அல்லவா? இந்த விசயத்தில் வர்த்தமானிப் பத்திரிகைகள் பெரிதும் முயன்றுவருகின்றன. ஆயினும் ஆராய்ந்தமைந்த நூல் இல்லாதவழித் தெளிவுற விசயங்கள் அறிந்துகொள்ளல் கூடாது.”

“மேற்றிசைச் செல்வம்” எனும் மேலே உள்ள கட்டுரையின் இறுதியில் சுவாமிகள் பின்வருமாறு கூறுகிறார். “கவிநயமினிமையும் பிறவினிமையும் தருகிற அகப்பொரு ணறவிணை யுண்டு மதுவுண்டு மயங்கிய வண்டைப்போலச் செயலின்றிக் கிடந்தோம். அடிமைத்தன்மையும் வந்தெய்திற்று. ஐயோ! இந்நிலமை இனி வேண்டாம். வீரத்தையும் ஆண்மையையும் தருகிற புறப்பொருளை நாடுவோம். தவராஜ சிங்கமாகிய விவேகாநந்த சுவாமிகள் சொல்லுகிறார்; ‘எழுந்திருங்கள், சோம்பலையும் மூடத்தனத்தையும் வீசியெறிந்துவிட்டு வெழியே உலாவி உலகத்தின் ஏனைய பாகங்களிலுள்ள மாந்தர்கள் முன்னேற்றமடைந்துகொண்டு போவதைப் பாருங்கள். எத்தனை நாளைக்கு மூலையில் ஒதுங்கி கிடக்கப் போகிறீர்கள். நீங்கள் சுத்தவீரர் வழிப்பிறந்தவர்கள் என்பதையும் மறந்து விட்டீர்களா? சூரனுக்கு உயிர் துரும்பு; தேச முன்னேற்றத்திற்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கும் வாலிபர்கள் ஆயிரக்கணக்கானோர் முன்வர வேண்டும். மேனிலையை அடைவதற்கு முயல்வோம். அம்முயற்சியில் உயிர் போனாலும் போகட்டும்.’ முந்நாளில் இருந்த நமது தமிழ்நாட்டுத் தாய்மார் எவ்வளவு வீரம் படைத்தவராக விருந்தார்கள்.

‘நரம்பெழுந் துலறிய நிரம்பா மென்றோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படையழிந்து மாறின னென்றுபலர் கூற
மண்டமர்க் குடைந்தன னாயி னுண்டவென்
முலையறுத் திடுவன் யானெனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களந் துழவுவோள் சிதைந்து வேறாகிய
படுமகன் கிடைக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே.’

இது முன்னாளியல்பு.

‘தந்தை மதியினுஞ் சாலுநன் மதியோன்
என்மகன் தீரன் எசமான் கோபித்
தெட்டி யுதைத்த காலினைப் பற்றி
முத்த மிட்டு முன்னின்று பணிந்து
ஐயன் காலுக் கடிமைதுயர் விளைத்தனன்
எனக் கூறி யீரைந்து வெண்பொன்
சம்பள வுயர்ச்சி சாலப் பெற்றனன்.’

என மகிழ்வது இந்நாளியல்பு.

நாம் அறிந்த வரையிற் றமிழ்நாட்டனைவரும் சாதிமத பேதமில்லாது கைக்கொள்ளத்தக்க நூல் ஒன்று உள்ளது. அது புற நானூறு.”

மேலே உள்ள பகுதியை படித்து சுவைப்பது நமது கடமையல்லவா?

நமது தெய்வம் விபுலாநந்தம். அது அருளிய வாய்மையான திருவாய் மொழியை நாம் தேடிச் சுவைக்கவேண்டிய கட்டாய காலம் இது. தமிழ் இனம் இங்கே கிள்ளியெறிப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது வரலாறு. இன்று அது எள்ளி நகையாடப்படுவது எல்லோருக்கும் புரிகிறது. நமது எதிர்கால நடையென்ன?

உரைத்துப் பார்த்து பெறுமதி கூறமுடியாத சுத்த தங்கத்தை வைத்துக்கொண்டு பித்தளைக்காக அலையவேண்டியது அவசியமில்லை. தெய்வீகத் தம்மையுள்ள விபுலாநந்தமே போதுமானது. அதனை நமது கோட்பாடாக்கினாலே தமிழும் தமிழ் இனமும் தளிர்த்துக்கொள்ள முடியும். அடிகளார் கூறியது போன்று உண்மையும், நேர்மையும், செம்மையும் உடைய திட்டங்களில் திட்டமிடுவோரும், செயற்படுவோரும் ஒன்றுபட்டுழைக்க வேண்டும். பெரிய காந்தமும், சிறிய காந்தமுமாய் அனுபவசாலிகளும் இளஞ்ஞர்களும் இணைந்து செயற்பட வேண்டும். சமூகத்தில் அவ்வாறான நல்ல எண்ணங்கள் தோற்றம் பெறுமாயின் அடிகளாரின் பின் வந்த அருள்செல்வநாயகம் போல் வலிமையுள்ள இளஞர்கள் தோன்றுவார்கள் என்பது வெறும் கற்பனையல்லவே!

இனி இங்கு யார் நமது சன்மார்க்க நெறித்தலைவர்! அடிகளாரே! சூக்குமமான உங்களை ஆராதிக்கிறோம். ஆறுதல் தருவீராக என வேண்டுவதைத்தவிர வேறு வழியில்லையிங்கெமக்கு.

விபுலாநந்தத்தை விபுலாநந்த இலக்கியமாக்கிய அருள்செல்வநாயகம் அவர்கள் அடிகளார் பற்றிய அறிவை; அமுதமாக, தேனாக, வெள்ளமாக, கவிதையாக, செல்வமாக, ஆராய்வாக, சொல்வளமாக, இன்பமாக நமக்குத் தொகுத்தருளியதால் அவரை நாம் ஈழத்து நம்பியான்டார் நம்பி என்றாலும் மிகையாகாது. அருள்செல்வநாயகம் அவர்கள் தமிழகத்திலும் ஈழத்திலும் மட்டுமல்ல முழு உலகின் தமிழர் ஞாபகத்திலும் எப்போதும் வீற்றிருக்க வழிவகுத்த தெய்வீகமே விபுலாநந்தம்.

அந்த வெள்ளத்திலே நாம் சிறிதாவது தோயவேண்டாமா? சுவாமி விபுலாநந்த அடிகளாரின் வெள்ளம் எனும் கட்டுரையைப் படியுங்கள். அதன் பின் உங்கள் மனம் பய்யப்பய்ய தெளிந்து வரும்.

குறிப்பு:- அடித்தளம்: அருள் செல்வநாயகம் அவர்களின் விபுலாநந்த இலக்கியம்

முருகேசு தவராஜா
முருகேசு தவராஜா