யதார்த்த வாழ்வில் மது – பாகம் 01

மனித வாழ்வே மயக்கமுடையது. அதிலே மதுவும் சேர்ந்துவிட்டால், அது மாபெரும் நரகமேயாகும். மனிதன், ஒரு புறத்தில் கடந்த காலங்களின் சலனங்களையும், எதிர்கால ஏக்கங்களையும் எந்நேரமும் மனதில் சுமந்துகொண்டு பகல்நேரச் சிறையிலே வாழ்கின்றான். மறுபுறத்தில் நிறைவேறா எண்ணங்களின் படிமங்களை நித்திரையில் கனவாகக் கண்டு கற்பனையில் மிதந்து கொண்டு குழம்பிய நிலையில் வாழ்கின்றான். உண்மையிலே இவ்வாறான வாழ்வு வாழ்வல்ல.

தேடல் இல்லாத வாழ்வு சுவையில்லாத உணவு போன்றது மட்டுமல்ல, அது, மனித குலத்திற்கு பயன்படாதும் போய்விடும். அன்பும் கருணையும் மட்டுமே இங்கு மனிதத்துவம் மலர்வதற்கான ஆயுதங்கள். மனிதனால் மேற்கொள்ளக்கூடிய அற்புதங்களிற்கும் அவனுடைய அவலங்களிற்கும் இடையே உள்ள முரண்பாடுகள், பிரச்சனைகள் என்பவற்றின் காரண காரியங்கள் முறையாக அறியப்படாமல், பெரு மூச்சிலேயே தனது பெரும்பான்மையான நேரத்தைக் கழிப்பவனே மனிதன். இப்பெருமூச்சுகளின் தொடர்ச்சியானது மனித மனத்திலே ஒரு பூசணவலைப்பின்னலைத் தோற்றுவிக்கும் போது, மனிதன் வெறுமைக்குள் தள்ளப்படுகின்றான். இத்தோற்றப்பாடு, மனிதனை இரவிலும் பகலிலும் தன்னைத் தானே சிறையில் அகப்படுத்திக்கொண்ட நிலைக்கு இட்டுச்செல்ல, மனிதன் பழைய நினைவுகளின் கைதியாகிவிடுகின்றான்.

இவ்வாறான ஒரு இலகுவான தோற்றப்பாடு, சாதாரண மக்களிடையே மிகச் சுலபமாக தோன்றிவிடுகிறது. இந்நிலைப்பாடு தனது செயலூக்கமற்ற தன்மைக்கு, மற்றவரே காரணம் எனும் மயக்க நிலையை ஏற்படுத்த சிறு கயிற்றிலே கட்டப்பட்டாலும், அதை மீற முடியாத பெரும் யானை போன்று, அடிமைத்தனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மனிதன் அடைந்து விடுகின்றான். இவ்வாறான இருகால விலங்குகளின் சிறையிலிருந்து வெளிவருவதற்கான காலம் நிகழ்காலமேயாகும். அதனால்தான் “நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்” என்று பெரியவர்கள் தொடர்ச்சியாக கூறிவருகிறார்கள்.

இச்சிறையை உடைப்பதற்கு அவசியமான வழி, ஆக்கம். அதுவும், புத்தாக்கமாகும். தொடர்ச்சியாக இயங்கும் நிலை, ஒருவனுக்கு வாய்த்துவிட்டால் அவர் ஏனையோருக்குரிய சொத்தாக, அவர்களின் நண்பனாக மாறிவிடுவார். காட்டில் உள்ள சந்தண மரம், நறுமணம் வீசுவதும், இலுப்பைப் பூ, இனிப்பதுவும் மட்டுமே இப் புவியிலே அதிசயங்கள் அல்ல. இவை போன்று எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள், இப்புவியில் நிறைந்து கிடக்கின்றன. பிரபஞ்சத்துள் ஒரு சிறு பகுதியிலே இவ்வளவு அதிசயங்கள் என்றால், இப்பிரபஞ்ச அதிசயங்களை எண்ணிப்பார்க்கவே, சாதாரண மனிதனுக்கு வாழ்நாள் போதாது. ஆனாலும் அவன் தனது மனச் சிறையிலே அசந்து தூங்குகின்றான்.

இயற்கையோடு வாழுபவை மரங்களும், மிருகங்களும், பறவைகளும், மற்ற மற்ற உயிரினங்களும் மட்டுமே. சாதாரண மக்களின் கற்பனைக்கெட்டா வகையில், பல்லாயிரம் கண்டுபிடிப்புக்களையும் கண்டுபிடித்து, செயற்கையான வாழுமிடங்களை, வான்பரப்பிலும் உண்டாக்கி, பல்லடுக்கு மாடிகளில், பளிங்குத்தரையில் செயற்கையாகவும் சொகுசாகவும் வாழும் மனிதன், இயற்கையாய் அமைந்த மலைகளையும், நதிகளையும், சமுத்திரங்களையும் உல்லாசப் பயணம், பொழுது போக்கு எனும் பெயர்களில் நாடிவருவதை நாம் காண்கின்றோம்.

இயற்கை பாதுகாப்பானது அல்ல என உணர்ந்த மனிதன், செயற்கையிலும் திருப்தி காணமுடியாத பிராணியானான். எல்லாவற்றிற்கும் அவனது பகுத்தறிவே காரணம். தன்னோடு இணைந்து வாழும் மிருகங்களையும், தன்னைப் போலவே செயற்கைப் பண்புகளுக்கு, மாற்றியமைத்துக் கொள்ளும் வல்லமை மனிதனுக்கு உண்டு. இவ்வாறான மனிதன் இயற்கைக்கு எதிரான தோற்றப்பாட்டை ஏற்படுத்தி, ஆட்சி அதிகாரத்தை நிறுவினான். தொடர்ந்து, தான் சார்ந்த தனியாள், குடும்பம், சமூகம், தேசியம் என எல்லைகளை வகுத்தான். இங்கே தன்னையும், தனக்குரிய குழுமத்தையும் பாதுகாப்பு என்னும் போர்வையில் அடிமையாக்கிக் கொண்டான்.

இவ்வுலகில் தினம் தினம் பல்வேறுபட்ட அடிமைகள் உள்வாங்கப்பட்டுக் கொண்டே உள்ளனர். அண்மையில் ஜோர்டான் நாட்டில் இலங்கைப் பெண்கள் தொடர் ஒழுங்கில் (Routine) பாலியல் வல்லுறவிற்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர் எனும் பத்திரிகைச் செய்தி புத்தடிமைகளின் மற்றுமொரு தோற்றப்பாடேயாகும். ஒருவன் தன்னிலே வரித்துக் கட்டிக்கொண்ட கோட்பாடே அவனது அடிமைத்தனத்தை நிர்ணயிக்கின்றது. ஒரு தனியாளின் தொடர்புகளும் அவன் சந்திக்கும் சந்தர்ப்பங்களும், அவனது சிந்தனைக்குரிய பரம்பரையலகுத் தாக்கமும், அவனுடைய பயத்தின், நம்பிக்கையின், சந்தேகத்தின், துணிவின் அலகுகளின் எண்ணிக்கையினை நிர்ணயிக்கின்றன. இச்சந்தர்ப்பங்களே தனக்குரியதாகவோ, தன்னோடு சார்ந்த அங்கத்துவருக்குரியதாகவோ, அரசியலிற்குரியதாகவோ, ஆத்மிகம் சார்ந்த துறைகளிற்கு ஏற்பானதாகவோ ஏனைய செயற்பாடுகளிற்குரியதாகவோ அடிமைத்தன எல்லைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

மனிதனது கனவுகள், உளவியல் பண்புகள், நம்பிக்கைகள் மனிதனில் பல உணர்வுகளை குறுங்காலத்திற்குரியதாயும், நீண்டகாலத்திற்குரியதாயும், நிலையானதாகவும் தோற்றம் பெறச் செய்கின்றன. இவ்வடிப்படையிலேயே மனிதன் மந்தமாகவும் துரிதமாகவும் செயற்படுகின்றான். ஒரு மனிதன் தன்னால் முடிந்ததைச் செய்கின்றான். ஆனால் ஒரு மனிதனால் செய்யக்கூடிய முழுவதையும் அவன் செய்வதில்லை என்று பெரியோர் கூறுவர். இருப்பினும், இப்புவியும் உயிர்களின் சுவாசமும் தொடராக இயங்கிக் கொண்டு தானே உள்ளன. உட்கிடையாயும் வெளிப்படையாயும் மனிதனுடைய செயற்பாடுகளிற்கு பல தடைகளும் இடைவெளிகளும் ஏற்படுவது வழமையானது. இத்தடைகளை மீறி மதுவிலே மயங்கி அதன் அடிமையாய் உள்ள அடிநிலை மக்களின் வாழ்விலே நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவது பாரிய சவால் மிக்க ஒரு செயற்பாடாகும்.

காலிற்கு செருப்பிருக்காது, தனது குடும்ப உறுப்பினர்களிற்கு கால் வயிற்றுக்கு சோறிருக்காது, ஆனால் கடவயிற்று சாறன் கட்டிற்குள் கால் போத்தல் சாராயத்தை கவனமாக வைத்திருப்பான் கிராமவாசி. இவ்வாறான பழக்கமுடைய பாமரமக்களின் பண்புகளை மாற்றியமைப்பது மிகவும் கடினமானது. அறிவிற்கும் அறியாமைக்கும் நேர்த் தொடர்புண்டு. ஆனால் ஒரு ஏழு நட்சத்திரக் ஹோட்டலில் முதல் தர விஸ்கி எவ்வாறு நாகரிகமாக பரிமாறப்படும் என்பதை சாதாரண மக்களுக்கு கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

முருகேசு தவராஜா
முருகேசு தவராஜா