செயற்கை நுண்ணறிவு 2 – செயற்கை இலகு அல்ல

நுண்ணறிவு என்பது பல்வேறு உயிரினங்களில் பல்வேறு வகைகளில் இருக்கின்றது. ஆகவே நம்மால் இது தான் நுண்ணறிவு என்று ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை. இன்று நாம் செயற்கை அறிவு அல்லது நுண்ணறிவு என்று கருத்தில் கொள்ளும் அனைத்து முறைகளும் அல்லது பெரும்பாலான முறைகள் மனிதனது நுண்ணறிவு சார்ந்தவையாகவே இருக்கின்றன.

ஒரு இயந்திரம் அல்லது பொறிமுறை நுண்ணறிவு கொண்டதா என இலகுவில் பதில் சொல்லக்கூடியதாக இருப்பதற்கும் இது தான் காரணம். நுண்ணறிவு என்பதே ஒரு பொறிமுறை, மிகச் சிக்கலான பொறிமுறை. இதனை நாம் ஒரு போருளுடனோ அல்லது கணித சமன்பாடுகளோடோ ஒப்பிடமுடியாது.

இன்று நமக்கு தெரிந்த வரை நாம் நுண்ணறிவின் சில பகுதிகள் எப்படி வேலைசெய்கிறது என்று கண்டுள்ளோம், ஆனால் பல பகுதிகள் இன்னும் ஆராயப் படவேண்டியுள்ளது. இன்று உள்ள சில செயற்கை நுண்ணறிவைக் காட்டக்கூடிய அல்லது மிமிக் செய்யக்கூடிய சில ப்ரோக்ராம்கள், நாம் அறிந்துள்ள நுண்ணறிவுப் பகுதியில் தொழிற்படுகிறது, அதனால் சில பிரச்சனைகளை சுயமாக தீர்க்க முடிகிறது. ஆனால் வேறு சில பிரச்சனைகளை, அதாவது இன்னும் இப்படியான பிரச்சினைகளை எப்படி நுண்ணறிவு தீர்க்கிறது என்று தெரியாத பிரச்சினைகளை அவைகளால் கையாள முடிவதில்லை, காரணம் அதை எப்படி கையாள்வது என்று நாம் அந்த ப்ரோக்ராமிடம் சொல்லவில்லையே! பெரும்பாலும் அப்படியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலும் போது, மொத்த ப்ரோக்ராமும் ஸ்தம்பித்து விடுகிறது. இதனாலேயே நம்மால் இவற்றை முழுதான செயற்கை நுண்ணறிவு கொண்ட பொறிகள் என்று கூற முடிவதில்லை.

மிக அடிப்படையாக சொல்லவேண்டும் என்றால், நுண்ணறிவு என்றால் என்ன என்று இன்னமும் எம்மால் ஒரு வரையறைக்கு வரமுடியவில்லை, ஆக பூரணமான செயற்கை நுண்ணறிவை எம்மால் மாதிரிப்படுத்த (model) முடியாதுள்ளது.

மனித அறிவைப் போல தொழிற்படுவதுதான் செயற்கை நுண்ணறிவு என்று எடுகோள் எடுக்க முடியாது, அது தவறும் கூட. பலவேளைகளில், ஆய்வாளர்கள், மனிதன் குறிப்பிட்ட பிரச்சினையை எப்படி தீர்க்கிறான் என்று ஆய்வுசெய்து அதை அடிபடையாக வைத்து சமன்பாடுகளை உருவாகி அதன் அடிபடையில் AI ப்ரோக்ராம் வேலை செய்யுமா என ஆய்வு செய்கின்றனர். ஆனால் இப்படித்தான் ஆய்வு செய்யவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

சிலவேளைகளில் மனித மூளை எப்படி சில பிரச்சனைகளை தீர்க்கிறது என்று பார்க்கும் போது, மிகச் சிக்கலான அமைப்பு ஒன்று அங்கு உருவாகுவது தெரிவதால், மனிதனைவிட மூளை வளர்ச்சியால் பின்தங்கிய மிருகங்கள், பறவைகள் எப்படி குறித்த பிரச்சினையை கையாள்கின்றன என்றும் ஆய்வாளர்கள் பார்கின்றனர்.

உண்மையைச் சொல்லப்போனால், வேறு வேறு உயிரினங்கள், குறித்த அதே பிரச்சினையை தீர்க்க மிகவும் வேறுபட்ட வழிமுறைகளை தங்களிடம் இருக்கும் நுண்ணறிவைப் பயன்படுத்தி கையாளுகின்றன. இவை எல்லாமே நுண்ணறிவு தானே. இதில் எது மிகச் சிறந்தது என்று எடுத்துக்கொள்வது?

ஒரு ஊருக்கு செல்ல ஐம்பது வழிகள் இருக்கின்றன என்று வைத்துக்கொண்டால், இதில் எதை தெரிவு செய்வது என்று ஒரு குழப்பம் வரலாம். அதற்கு ஒரு தீர்வாக குறைந்த நேரத்தில், குறைந்த எரிபொருளை பயன்படுத்தி செல்லக் கூடிய வழி எதுவோ அதனை தெரிவுசெய்வது செல்லலாம்.

நுண்ணறிவை செயற்கையாக உருவாகும் போது வரும் பிரச்சினையே, இந்த வழிகள்என்னவென்று தெரியாமல் இருப்பதே, அப்படியிருக்க எப்படி எது சிறந்த வழி என்று கண்டுகொள்ள முடியும்? ஆக இது ஒரு சிக்கல். இங்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், எப்போதுமே மனிதனது நுண்ணறிவைப் பயன்படுத்தி காணப்படும் தீர்வுகள் தான் சரியானவை என்று இருக்கவேண்டிய அவசியமில்லை, இதை இன்று இந்த AI ஆய்வாளர்கள் விளங்கிக்கொண்டுள்ளனர்.

அனால் எப்படியிருப்பினும், மனிதனது நுண்ணறிவு ஆற்றல் கொண்ட செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதே இறுதி இலக்காக AI ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த செயற்கை நுண்ணறிவுப் ப்ரோக்ராம்கள், மனிதன் வாழ்வில் எப்படியான சவால்களுக்கு முகம்கொடுத்து அதனை சமாளிக்கிறானோ, அதேபோல இந்த ப்ரோக்ராம்களும் சுயாதீனமாக தீர்வு காணும்.

சில ஆய்வாளர்கள், இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி AI ஐ உருவாகிவிட முடியும் என்று கருதுகின்றனர். அதாவது நுண்ணறிவில் இருக்கும் பல்வேறு துணைப் பண்புகளை தனித் தனி ப்ரோக்ராம்களாக உருவாகி, அதனோடு ஒரு பெரிய அறிவுக் களஞ்சியத்தை இணைத்து ஒரு வகையான AI ஐ உருவாகிவிடலாம் என்கின்றனர். இது எப்படி வேலை செய்யும் என்று விரிவாக பிறகு பார்க்கலாம், இப்போது அறிமுகப் படலத்தை முடித்துவிடலாம்.

சில ஆய்வாளர்கள், இப்போது இருக்கும் தொழில்நுட்பம், ஒரு பூரணமான AI ஐ உருவாக்க போதாது என்று கருதுகின்றனர். இப்போது இருக்கும் CPU க்கள் தொடங்கி, அதில் நாம் ப்ரோக்ராம்களை உருவாக்கும் விதம் வரை, பல புதிய மாற்றங்கள், வரவேண்டும் என்று சொல்கிறார்கள்.

இப்பது நாம் பயன்படுத்தும் கணனிகள் ஒரு சிக்கலான பொறி, அதனால் பல்வேறு பட்ட பொறிகளைப் போல தன்னை செயற்படுத்திக் காட்டமுடியும், ஆக AI ஒன்றை உருவாக புதிதாக எதாவது ஒரு பொறியை கண்டுபிடிக்கவேண்டிய அவசியமில்லை, ஆனால், இப்போதுள்ள கணணியின் வேகம், ஒரு AI தனது செயல்களை செய்ய போதுமானதா என்ற கேள்வியும் எழுப்புகிறது. இதுவும் இன்னொரு சிக்கலான குழப்பம்.

அதாவது இப்போதிருக்கும் கணனிகள் நல்ல வேகமாக செயல்படக்கூடியது, ஆனால் அதில் எம்மால் தான் எப்படி AI ஐ ப்ரோக்ராம் செய்வது என்று தெரியவில்லை, அல்லது AI ப்ரோக்ராம்கள் வேலை செய்யும் அளவிற்கு இந்த கணனிகள் இன்னும் வேகம் பெறவில்லை. இந்த இரண்டில் ஏதோவொன்று உண்மையாக இருக்கவேண்டும்.

அடுத்ததாக AI ஆய்வின் ஆரம்பப் படிகளையும், அதில் வந்த சவால்களையும் பார்க்கலாம்.

தொடரும்…