செயற்கை நுண்ணறிவு (AI) 01 – அறிமுகம்

எழுதியது : சிறி சரவணா

இயற்க்கை மிகவும் விந்தையானது. ஒரு கல அங்கியாக இந்த பூமியில் தோன்றிய உயிர் இன்று சூரியத் தொகுதியையும் தாண்டி விண்கலங்களை அனுப்பக் கூடிய அறிவாற்றல் கொண்ட மனித இனமாக வளர்ந்துள்ளது. பிரபஞ்சத்தின் 13.8 பில்லியன் வருட வயதோடு ஒப்பிட்டால், ஒரு கல அங்கியில் இருந்து மனிதன் உருவகியவரை பல மில்லியன் வருடங்கள் எடுத்திருப்பினும், மனிதன் என்று உருவாகிய உயிரினம், இன்று நவீன மனிதனாக உருவாகியதற்கு சில பல ஆயிரம் வருடங்களே எடுத்தது. ஆயினும் கடந்த சில நூற்றாண்டுகளில் மனிதன் தொழில்நுட்பத்தில் புரிந்த சாதனைகள் சிறிதல்ல. இந்த கடந்த சில நூற்றாண்டுகளே, நாம், மனிதர்கள், இயற்கையின் விந்தை அறிய தொடங்கிய காலமாகும். பிரபஞ்ச காலக்கடிகாரத்தில் இது வெறும் ஒரு புள்ளியே.

சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே மனிதனுக்கு தன் சிந்தனைவளம் பற்றி கருத்துக்கள் தோன்றியுள்ளன. பூமியில் உயிராக தோன்றிய மனிதனுக்கு ஏன் இவ்வளவு அறிவாற்றல் இருக்கவேண்டும்? ஒரு உயிரினத்தைப் பொறுத்தவரை, இனப்பெருக்கமும், உயிர்வாழ்வும் இன்றியமையாதது. தூரத்தில் ஒழிந்திருந்து மானையோ, புலியையோ உணவுக்காக வேட்டையாடுமளவுக்கு அறிவிருந்தால் போதாதா? ஏன் இந்தப் பிரபஞ்சத்தின் அமைப்பை அறியுமளவுக்கு ஆற்றலை இந்த மூளை கொண்டுள்ளது? ஏன் விண்வெளிக்கு மனிதன் செல்லுமளவுக்கு திறம்பட சிந்திக்கும் அளவுக்கு இந்த மூளை வேலை செய்கிறது? பூமியில் இருக்கும் ஆயிரக்கணக்கான உயிரினகளுக்கு இருக்காத விடயம், மனிதனுக்கு மட்டும் ஏன்? தொடர்ந்து சிந்திக்கலாம் வாருங்கள்!

அறிவு என்பது கொஞ்சம் வித்தியாசமான வஸ்துதான்! மனிதன் இந்த இயற்கைப் பார்த்து அடனில் இருக்கும் எல்லாத்தையும் செயற்கையில் படைக்கப் பார்த்து, பலதில் வெற்றியும் பெற்றுள்ளான். பறவைகள் போல விமானம் என்பதில் தொடங்கி இன்று செயற்கை இதயம் உருவாகுவது வரை வந்துவிட்டோம். அனால் எல்லாமே ஒரேவித சிக்கலோடு இருப்பதில்லை. சிலவற்றின் சிக்கல்கள் அதிகம், சிலவற்றில் சிக்கல்கள் குறைவு. உதாரணமாக இப்படி சொல்லுகிறேன் பாருங்கள். விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது கடலுக்கடியில் வீடு கட்டுவதை விட இலகு. இயற்க்கை முரண்பாடானது தான்.

இங்கு நாம் பார்க்கபோவது இப்படி இயற்கையில் இருக்கும் ஒன்றை மனிதன் செயற்கையில் செய்ய எத்தனித்துக் கொண்டிருக்கும் விடயம்தான் – அறிவு (intelligence).

ஆதிகாலத்தில் இருந்தே மனிதனுக்கு தன்னைப்போல சிந்திக்ககூடிய, செயலாற்றக் கூடிய வேறு பல உயிரினங்கள் அல்லது கருவிகள் பற்றி ஒரு கவர்ச்சி இருந்துள்ளது. ஆதிகால புராணக் கதைகளில் இப்படியான செயற்கை அறிவு கொண்ட கருவிகள் பற்றி கதை சொல்லி இருக்கிறார்கள். நாம் அறிவியல் ரீதியான ஆராய்ச்சிக்கு வருவோம்! அதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமும்.

அறிவு என்றால் என்ன?

செயற்கை அறிவு என்றால் என்ன என்று தெரிவதற்கு முதலில் நமக்கு அறிவு என்றால் என்ன என்று தெரியவேண்டாமா? நாம் எல்லோருக்கும் அறிவு உண்டு என்பது வெளிப்படை உண்மை ஆனால் எத்தனை பேருக்கு அது என்ன என்று தெரியும்? அதாவது அறிவு என்றால் என்ன என்று ஒரு வரைவிலக்கணம் சொல்லலாமா?

அறிவு என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான வழியை கையாள்வதில் இருக்கும் திறன் எனக்கொள்ளலாம். இதில் நுண்ணறிவு (intelligence) என்பது, இந்த அறிவுத்திறனில் இருக்கும், திட்டமிட்டு செயல்ப்படும் பகுதியாகும். மனிதனுக்கு மட்டும் இந்த அறிவு/நுண்ணறிவு இருக்கிறது என்று எண்ணவேண்டாம். எல்லா உயிரினங்களுக்கும் இந்த அமைப்பு இயற்கையில் இருக்கிறது. அனால் ஒவ்வொரு உயிரினமும், தனது சூழலில் உருவாகும் சவால்களுக்கு ஏற்ப இலக்குகளை அமைத்து தன்னிடம் இருக்கும் அறிவுத் திறனைப் பயன்படுத்தி அந்த இலக்கை அடைகிறது. உதாரணமாக ஒரு கல பாக்டீரியாக்கள் அல்லது நுண்ணுயிர்கள் தான் உயிர்வாழ தேவையான உணவை பெற்றுக்கொள்ளவும், தொடர்ந்து சந்ததியைப் பெருக்கவும் தனது குட்டியூண்டு அறிவை பயன்படுத்துகிறது. அதேபோல பல்வேறு உயிரினங்கள், வெவேறு தளங்களில் தனது அறிவுத் திறனை பயன்படுத்துகின்றன.

அப்படியென்றால் செயற்கை அறிவு?

நாம் செயற்கை அறிவு என்று போதுபடயாக கூறினாலும், உண்மையிலேயே செயற்கை நுண்ணறிவைத்தான் இங்கு கருதுகிறோம். செயற்கை நுண்ணறிவு என்பது, இயற்கையாக இல்லாமல், நாம் உருவாகிய இயந்திரங்களும், பொறிமுறைகளும், நுண்ணறிவுடன் செயற்படுவது ஆகும். அனால் இது மனைதனிப் போலவோ, அல்லது ஏதோவொரு உயிரினம் போலவோ செயற்படவேண்டும் என்ற எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை.

இன்று அறிவியலில் செயற்கை நுண்ணறிவு விருத்தி என்பது தனித் துறையாகும். பல பல்கலைக்கழகங்கள் தொடங்கி கூகிள் வரை இதைப்பற்றி ஆராய்ந்து வருகிறது.

மனிதனைப் போல சிந்திக்கும் ஆற்றல் கொண்ட ஒரு பொறிமுறை தான் செயற்கை நுண்ணறிவு என்றால் அது தவறு! ஏற்கனவே கூறியது போல சிக்கல்களின் அளவு வேறுபடலாம், ஆனால் அந்த குறிப்பிட்ட பிரச்சினைகளை தன்பாட்டிலேயே குறித்த பொறிமுறையால் தீர்க்க முடியுமெனில் அது ஒரு செயற்கை நுண்ணறிவு கொண்ட பொறிமுறை என்றே கருதப்படும்.

உதாரணமாக, நீங்கள் டைப் செய்யும் கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடிய ஒரு சாப்ட்வேர், அது தானாக வாக்கிய அமைப்புக்களை விளங்கிக்கொண்டு பதிலளிக்குமெனில் அதுவும் ஒரு செ.நு (AI) கொண்ட சாப்ட்வேர் தான். இன்று இப்படியான ப்ரோக்ராம்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாகியுள்ளனர். அவை பெரும்பாலும் உங்கள் கேள்விகளுக்கு சரியாகவே விடையளிக்கும். ஆனாலும் அவை AI அல்ல. காரணம், அவற்றுக்கு நீங்கள் டைப் செய்த வாக்கியத்தின் பொருள் தெரியாது. பெரும்பாலும் உங்களது கேள்வியில் இருக்கும் சொற்களைக் தான் வைத்திருக்கும் அகராதியில் தேடும், பின்னர் கிடைத்த விடையை மீண்டும் ஒரு வாக்கியம் போல அமைத்து உங்களுக்கு தரும்.

ஆனால் நாம் உரையாடும் போது ஒவ்வொரு சொற்களையும் ஆராய்ந்து உரையாடுவதில்லை, மாறாக மொத்த வாசகத்தின் பொருளைக் கொண்டே நமது உரையாடல் அமைகிறது. இந்த பதிலளிக்கும் ப்ரோக்ராம்கள் ஒரு வசனத்திற்கும் இன்னுமொரு வசனத்திற்கும் இருக்கும் தொடர்பை முழுதாக அறிவதில்லை, ஆகவே இப்படியான ப்ரோக்ராம்களை நாம் AI வளர்ச்சியில் முதல் படி என்று அழைக்கலாம், ஆனால் இவை முழுதான AI அல்ல.

இதே போல தானாகவே இயங்கும் கார், விமானங்கள், மற்றும் செஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடக் கூடிய ப்ரோக்ராம்கள் எல்லாம் இன்று நம்மிடம் உண்டு, ஆனால் இவை எதுவும் பூரணமான AI இல்லை. இவை அனைத்தும் எதோ ஒரு விதத்தில் அளவுக்கதிகமாக கணக்குகளை போட்டு பல சமன்பாடுகை தீர்த்தே தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணுகின்றன.

இங்கு தான் செயற்கை நுண்ணறிவுக்கான பிரச்சினை தொடங்குகிறது. செயற்கை நுண்ணறிவு என்பது ஏன் மிகச் சிக்கலான ஒரு அமைப்பு என்பதை தொடர்ந்து ஆராயலாம்.

தொடரும்…