முடிவில்லா இயற்க்கை

சத்தங்கள் சந்தங்கள் அழகாக பாடுகிறாய்
கனவிலும் நினையா வண்ணம்
இடை வளைத்து ஆடுகிறாய்
கன்னங்கள் குழிவிழ சிரிக்கும்
குழந்தைபோல ஆயிரம் ஆயிரம்
உணர்ச்சிகள், மடை திறந்த வெள்ளம் போல
பாய்ந்து வரும் அருவிகள் – அதன்
கரைகளில் இருக்கும் கற்களில்
மோதுண்ட நீர் வில்லைகள்
முத்துமணி ரத்தினங்களாய் வானத்தில் தெறிக்க
அதனுள்ளே பாய்ந்த ஒளி – தன்
ஆடைகளைக் களைந்துவிட்டு
தண்ணீரில் பாய விளையும் சிறுவனைப் போல
உற்சாகமாக பல வர்ணங்களில்
சிதறித் தெறிக்க -அந்தக் காட்சியின்
இயக்கத்தை முடித்துவிட்ட கையோடு
அந்த முத்துமணி ரத்தினங்கள்
கண்ணாடிக் குமிழிகளாக நிலத்தில்
மோதுண்டு மடிகிறதே – ஆனால்
அடுத்த நீர்க்குமிழியும் வருமே
ஒளியின் தோலுரிக்க… இயற்கையின் இயக்கம்
காதலுண்ட மங்கையின் நாணத்தைப் போல
முடிவற்றுச் செல்லும்!
– சிறி சரவணா