பெப்ரவரி 14, 1997
கணேஷ் டோர்ச்சை அடித்துக் கொண்டு முன்னே செல்ல, அவன் பின்னாலே குமாரும் சென்றான். அந்த அறை மிக விசித்திரமாக இருந்தது. அது கற்களால் ஆன பழங்காலத்து அறை போலவே இல்லை. மஞ்சள் நிறத்தில், ஏதோவொரு உலோகத்தால் செய்யப்பட்டிருக்கவேண்டும். ஒளிமுதல் என்று சொல்ல எதுவும் இல்லாததால் மிகுந்த இருட்டாக இருந்தது.
கணேஷ் தனது டோர்ச்சை நிதானாமாக எல்லாப் பக்க சுவரிலும் அடித்துப் பார்த்துக் கொண்டிருக்க, குமாரும் தனது டோர்ச்சை ஒன் செய்தான்.
இந்த அறை முழுவதும் சுவர்களில், மார்பிள் பதித்தது போன்ற சிறிய, சிறிய சதுர அமைப்புகள், அந்த அறைக்கான கதவைத் தவிர, எல்லாப் பக்கங்களிலும், மேல் கீழ் என எந்த பக்கமும் பாகுபாடு இன்றி இந்த சிறிய பாத்ரூம் மார்பிள் போன்ற அமைப்புக்கள் இருந்தன.
“இந்த அறை, கிமு காலத்து அறை போலவே இல்லை, சொல்லப்போனால், எதிர்காலத்தில் இருக்கும் அறைபோல இருக்கிறதே!” என கணேஷ் சொல்ல,
“இது நிச்சயமாக ஆரம்பத்தின் வாசல் கதவு அல்ல, ஆனால் நாம் சரியாகத்தான் வந்து இருக்கிறோம் என என் மனம் சொல்கிறது, இந்த அறையில் ‘ஆரம்பத்தின் வாசல் கதவை’ அடைவதற்கான வழியோ அல்லது வரைபடமோ கிடைக்கக் கூடும்” என குமார் சொல்லியவாறே மிகக்கவனமாக அந்த சுவர்களையும் அதில் இருக்கும் சதுர வடிவ அமைப்புக்களையும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.
“இங்கயும் எதாவது ஏட்டுச்சுவடி கிடைத்து, அதுல நம்மளை எங்கேயாவது அண்டார்டிக்கா பக்கம் போய் பார்க்கவும் என்று போட்டிருக்கப் போவுது பாஸ்” என்று சொல்லி சிரித்தான் கணேஷ். அவன் சொன்னதை காதில் வாங்காத குமார், டோர்ச்சை அடித்தவாறே அந்த அறையின் ஒரு மூலைக்கு சென்றான். அவன் போவதைப் பார்த்த கணேஷும் அவனை பின்தொடர்ந்தான்.
“என்ன பாஸ்? எதாவது பார்த்துடீங்களா?” என கணேஷ் கேட்க.
“இங்க பார் கணேஷ். இந்த நான்கு சதுர அமைப்புக்களிலும் ஏதோ குறியீடுகள் இருக்கின்றன”, இரண்டு பேரின் டோர்ச்சும் இப்போது அந்த நான்கு குறியீடுகளிலும் விழ,
“பாஸ் இத பார்த்தீங்களா? இந்த மாதிரி குறியீடு அந்த அன்கோவார்ட் ஓலைச்சுவடில இருந்துச்சே!”
“ஓம் ஓம், கொஞ்சம் பொறு” என்று சொல்லிவிட்டு குமார் அவனது தோளிலிருந்து பையைக் கழட்டி அதிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தான், கணேஷ் அதற்கு உதவியாக டோர்ச்சை அவன் பக்கம் திருப்பி அடித்துக் கொண்டிருந்தான்.
குறிப்பு புத்தகத்தில் பக்கங்களை திருப்பிக் கொண்டு வந்தவன், திடீரென நிறுத்தி, எழும்பி அந்த பக்கத்தை அந்த சுவரில் இருந்த குறியீடுகளுக்கு அருகில் பிடித்தான்.
சுவற்றின் நான்கு சதுர அமைப்புக்களில் இருந்த குறியீட்டைப் போலவே, அந்த ஓலைச்சுவடியில் இருந்த வரைபடத்தின் ஒரு புகைப்படம் அவர்களைப் பார்த்து சிரித்தது.
கணேஷ், “வாவ், மார்வலஸ், இந்த குறியீட்டை பார்த்தீங்களா…? பாஸ்…! இந்த ஓலைச்சுவடியில் இருக்கும் குறியீடுகள் தான் ஆனால், ஒழுங்கு மாறி இருக்கிறது”
குமார், “எனக்கும் தெரிகிறது! அந்த ஒழுங்கில் எதாவது விடயம் இருக்குமோ? எதுக்கும், முழு அறையையும் தேடிவிடலாம் வேறு எதாவது குறியீடுகள் சுவற்றின் அமைப்புக்களில் இருக்கிறதா என பார்க்கலாம்”
சொல்லியவாறே குமார் தனது டோர்ச்சை இயக்கி, இருளாக இருந்த அந்த அறையின் நாலாபக்கமும் தேடினான். அதேவேளை, கணேஷ், அவனிடமிருந்த முதுகுப்பையில் இருந்து ஒரு ரீச்சார்ஜபிள் மின்விளக்கு ஒன்றை எடுத்து அந்த இருண்ட அறையின் மையப்பகுதியில் வைத்து அதை ஒன் செய்தான். அது பார்க்க பெட்ரோமக்ஸ் விளக்கு போலவே இருந்தது. அதிலிருந்து வந்த வெளிச்சம், அந்த சுவரில் இருக்கும் அமைப்புக்களை தெளிவாக காட்டக்கூடியதாக இருக்கவில்லை, ஆனால் இருவருக்கும் அங்கு இருப்பவற்றை ஆராய்ச்சி செய்ய போதுமானதாகவே இருந்தது.
கணேஷ் அந்த மின்விளக்கை எடுத்து வைத்து ஒளிரவைக்கவும், குமார் அவனை நோக்கி வரவும் சரியாக இருந்தது.
“சுற்றிப் பார்த்துவிட்டேன், அந்த மூலையில் இருப்பது போன்று மற்றைய மூன்று மூலைகளிலும் இந்தக் குறியீடுகள் இருக்கின்றன. ஆனால் எல்லாம் ஒழுங்கு மாறி இருக்கின்றன.”
“இந்தக் குறியீடுகளில் எதாவது இருக்குமோ? அதாவது இந்த குறியீடுகள் அடுத்தகட்ட தடயத்தை நமக்கு வழிகாட்ட உதவக்கூடும்.. பாஸ்!”
“அது சரிதான், ஆனால்…” என்று சொல்லவந்த குமார், சற்று நேரம் சிந்தித்தான்.
“என்ன பாஸ் யோசனை?”
“டேய், இந்த மாறி இருக்கும் குறியீடுகளை நாம் இந்த சுவடியில் இருக்கும் ஒழுங்குக்கு மாற்றினால் என்ன? ஆனால் அதற்கு அவற்றை நகர்த்தக்கூடியதாக இருக்கவேண்டுமே! ஆனால் அவற்றைப் பார்க்க சுவற்றில் செதுக்கியது போல அல்லவா இருக்கிறது!”
“எனக்கும் அப்படித்தான் தெரிகிறது பாஸ்! இப்ப என்ன செய்ய?” என்று கணேஷ் யோசனையில் சொல்ல, குமாரும் சற்று சிந்திக்கத் தொடங்கினான்.
பயணம் தொடரும்…
முன்னைய பகுதியை வாசிக்க