முடிவில்லாப் பயணம் – அத்தியாயம் 10

டிசம்பர் 24, 1996

விதியென்ற ஒன்றை மனிதன் நம்ப
மதியென்ற ஒன்றை மாதுவும் படைத்தாள்
தறிகெட்டுத் திரியும் மதியைக் கேட்டால்
விதியென்ற ஒன்றை அது விலக்கிக்காட்டும்

“கணேஷ், நான் மது கதைக்கிறன், எங்கடா இருக்கே? என் ரூமுக்கு வாரீயா? குமார்ரண்ணா கொடுத்த ஓலைச்சுவடியில் இருக்கும் அந்தக் குறியீடுகளையும், பாடல்களையும் ஒப்பிட்டுப் பார்த்துட்டேன்! இண்டரஸ்டிங் இன்போ இருக்கு, கொஞ்சம் சீக்கிரம் வாரீயா?”

கணேஷ், “……”

போனை வைத்துவிட்டு, கணேஷ் வருவதற்குள் குளித்துவிட்டு பிரெஷ் ஆகிவரலாம் என்று முடிவெடுத்தவள், கடகடவென தனது மேசையில் இருந்த கடதாசிகளை அடுக்கி விட்டு, அந்த அங்கோர்வாட் ஓலைச்சுவடியை பத்திரப்படுத்திவிட்டு, குளியலறைக்கு சென்றாள்.

மது பிறந்து வளர்ந்ததெல்லாம் கனடாவில் தான், பெற்றோரும் அங்கேதான் இருக்கிறார்கள், இருந்தும் கார்வர்டில் தான் படிப்பேன் என்று அடம்பிடித்து இப்போது இங்கே நான்கு நண்பர்கள் (நாலுபேரும் ஒரே வீட்டில் இருப்பதால் நண்பர்கள் என்று வைத்துக்கொள்வோம்) சேர்ந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கிறார்கள். அந்த வீடும் இதுபோல காலேஜில் படிப்பவர்கள் தங்குவதற்கு என்றே கட்டப்பட்டது போல நான்கு அறைகள், இரண்டு குளியலறைகள், கிச்சன், சிறிய ஹால் என்று அளவோடு தான் இருந்தது. நான்கு பேர் இருந்தாலும், தனித்தனி அறைகள் என்பதாலும், பெரும்பாலும் ஒருவரை ஒருவர் பார்ப்பதே அதிசயம்தான். எப்போதாவது சமையல் செய்யும் போது, பல்விளக்கும் போது பார்த்துக் கொள்வதோடு சரி.

நால்வரில் ஒருத்தி மட்டும் மற்றவர்களை விட மதுவிற்கு கொஞ்சம் அதிகம் தெரியும். பிரஞ்சுக்காரி, எதோ ஆங்கில இலக்கியம் படிக்கிறாள் என்று மதுவுக்கு தெரியும்! அப்பப்போது வெண்மையான பல்வரிசை அழகாக தெரியும் வண்ணம் சிரித்துக்கொண்டே பேசுவாள். அவள் பெயர் கூட எதோ… மன்னிக்கவும் மறந்துவிட்டேன்! அவளது பெயர் என்னவாக இருந்தால் நமக்கு என்ன, கதைக்கும், முக்கியமாக எனது நோக்கத்திற்கும் அவள் அவசியமில்லையே! மற்றவர்களைப் பற்றி சொல்லவேண்டியதில்லை.

மது முதன்முதலில் கணேஷை பார்த்தது, காலேஜில் நடந்த ஒரு இன்றோ நிகழ்ச்சியில் தான்! புதிதாக துறைகளுக்கு வந்தவர்களை அறிமுகப்படுத்தும் விதமாக மாணவர்கள் சேர்ந்து பார்டி, பாடல் என்று நிகழ்வுகள் நடத்தினர். மது குறியியல் துறையில் இருப்பதாலும், அடிக்கடி இந்த துறையில் இருப்பவர்கள், தொல்பொருள் ஆராய்ச்சித் துறையில் இருபவர்களுடன் இணைந்து வேலை செய்வதாலும் (அதான், பழைய காலத்து கல்வெட்டுகள் போன்றவற்றில் இருக்கும் குறியீடுகளை அலசி ஆராய!), இவள் தொல்பொருள் ஆராய்ச்சி நூலகத்தில் இருக்கும்போது, அன்று புதிதாய் வந்தவர்களுக்கு பார்ட்டி நடக்குதாம் என்று கேள்விப்பட்டு எல்லோரும் செல்ல, தான் மட்டும் தனியாக இருந்து என்ன செய்வது என்று இவளும் வந்துவிட்டாள்.

அங்குதான், அவள் கணேஷை பார்த்தாள், அவனது துடிப்பான பேச்சும், குறிப்பாக, இவளுக்கு தமிழ் தெரியும் என்றவுடன் அவன் தமிழில் பேசத்தொடங்கியதும், இருவரும் நெருங்கிவிட்டனர். கண்டதும் காதலெல்லாம் இல்லை. வழமையாக கதைகளில் சொல்வது போல, இருவரும் பேசத்தொடங்கி, நாட்கள் வாரங்களாகி, வாரங்கள், மாதங்களாகி, மாதங்கள் ஒன்றரை வருடமும் ஆகி, இப்படி ஆகி.. ஆகி.. கடைசியாக கணேஷ் அவளது கண்களை பார்த்து கேட்டேவிட்டான். அவளுக்கும் ஆசைதானே! கணேஷ் அவன் விருப்பத்தை சொன்னபோது அவளது கண்களும் பிரகாசமாகியதே.. நான் அதை கவனித்தேன். அப்படியென்றால் அவளுக்கும் ஆசை உள்ளுக்குள் இருந்தது என்றுதானே பொருள்.

டாக் டாக்.. டாக்… டாக்…. “மது, சம் ஒன் இஸ் ஹியர் போ யூ” என்று மதுவின் ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்க, எதோ நினைவுக்கு வந்தவள் போல திடுக்கிட்டவளுக்கு, குளியலறையில் தான் இவ்வளவு நேரம் கணேஷை முதன் முதலில் பார்த்ததை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்திருக்கிறோம் என நினைவுக்கு வரவும், கணேஷ் தான் வந்திருப்பான் என யூகித்துக் கொண்டவள், “ஐ அம் கமிங் அடேலா” என்றாள்.

ஆ! அந்த பிரஞ்சுப் பெண்ணின் பெயர் அடேலா! மீண்டும் கதைக்கு வருவோம்! வேக வேகமாக உடையை மாற்றிவிட்டு ரூம் கதவைத் திறந்தாள். கதவிற்கு மிக அருகில் முகத்தை வைத்துக்கொண்டு ஒரு ரோபோ போல நின்றான் கணேஷ்! கதவை திறந்தவளுக்கு மிக அருகில் ஒரு உருவம் நிற்பதைக்கண்டு “ஹா” என்றவள், அவன் கையில் ஒரு பூங்கொத்தை வைத்திருப்பதை பார்த்துவிட்டாள்.

“டேய், உன்னை உடனே வாடா என்றால், நீ என்ன எங்கேயோ போய், யாரையோ பார்த்துட்டு வாறே போல? உனக்கு போக்கே தர அளவுக்கு யாருடா அது? ம்ம்” என மது சீண்டலாக மிரட்ட,

“எனக்கு இது தேவ! நாளைக்கு கிறிஸ்மஸ் ஆச்சே, உனக்கு எதாவது வாங்கிட்டு வருவம் என்று பார்த்தா ரொம்பதான் கலாய்க்கிரே!” என்று சொன்னவன், கையில் வைத்திருந்த பொக்கேயை அவள் பிடிக்கும் வண்ணம் அவளை நோக்கி வீசினான். அவளும் பிடித்துக்கொண்டாள்.

கணேஷ் தான் வந்திருப்பான் என்று ஊகித்தவாறே டவலோடு வந்து கதவைத் திறந்ததால், “கொஞ்சம் வெயிட் பண்ணுப்பா, நான் ட்ரெஸ் மாற்றிவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு கட்டிலில் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த உடையோடு குளியலறையை நோக்கி சென்றாள்.

“நீ இங்கயே உடை மாற்றவேண்டும் என்றாலும் எனக்கு ஒரு அப்ஜக்சனும் இல்லை” என்று கணேஷ் சொல்ல,

“உதை வாங்குவ ராஸ்கல்” என்று குளியலறையில் இருந்தே சத்தமாக சொன்னாள் மது.

ஹிஹி என்று சிரித்துக்கொண்டே அந்த அறையில் இருந்த சோபாவில் அமர்ந்த கணேஷ், அந்த சோபாவுக்கு முன்னிருந்த மேசையில் இருந்த ஒரு மேகஸினை எடுத்து பார்க்கத்தொடங்கினான்.

உடை மாற்றிவிட்டு வந்த மதுவை பார்த்த கணேஷ், தனது வலக்கையை எடுத்து நெஞ்சின் இடது பகுதிக்கு மேல் அழுத்தி தன் தலையை சுற்றி சுற்றி ஆட்டினான்.

அதைப் பார்த்த மதுவுக்கு உள்ளுக்குள் சிரிப்பு எழுந்தாலும் அதை அடக்கிக் கொண்டு, “என்னடா நெஞ்சு வலியா? மருந்து எதாவது வேணுமா?” என்று சீரியசாக கேட்டாள்.

தன செய்கையை உடன் நிறுத்திவிட்டு கண்களை விரித்து மதுவை பார்த்தவன், “ஓம் ஓம், தா தா, மருந்து தா…” என்றான் வம்பாக.

“அச்சச்சோ, என்கிட்டே இருந்த மருந்தெல்லாம் தீர்ந்து போச்சே…” என்று உச்சுக் கொட்டியவள், “இப்ப என்ன செய்யலாம், ம்ம்… பேசாம செத்துப் போயிடு.. நான் வேறு எதாவது அழகான பையனா பார்த்து லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிறேன்… பிறக்கிற குழந்தைக்கு உன் பெயரை கூட வைக்கிறேன் ஓகே.. கோட் ப்ராமிஸ்” என்றாள் மது.

“அடிப்பாவி, உனக்கு இவ்வளவு ஆசை எல்லாம் இருக்கா?.. நான் செத்தாக்கூட பேயா வந்து.. வந்து… உன்னை விடவே மாட்டேன்” என்றவன் சட்டேன எழுந்து மதுவின் கையைப் பிடித்து இழுத்து அவனோடு அனைத்துக் கொண்டான்.

கன்னங்கள் சிவக்க கணேஷின் பிடியில் நின்ற மது, அப்படியே அவனது நெஞ்சில் தலை சாய்த்து நின்றுவிட்டாள்.

“ஏன் உனக்கு இதயம் வேகமாக துடிக்குது..” இது மது சொன்னது.

“அதுதான் பத்தாயிரம் வாட்ஸ் கரண்ட் கம்பியை கட்டி அணைச்சுட்டு நிக்கிறேனே..” என்றான் கணேஷ்.

“ஓகோ..”என்றவாறே அவன் நெஞ்சில் இருந்து தலையை எடுத்து அவனது முகத்தை பர்த்தவளது கன்னங்கள் மேலும் மேலும் சிவந்து போக, “ஐ லவ் யூ டா…” என்றாள் சின்னக்குரலில்.

“யப்பா.. இவ்வளவு அருகில் உன் முகத்தை பார்க்க பேய் மாதிரி இருக்கே..” என்று சொன்னவாறே அவளை சற்று வேண்டுமென்றே தள்ளிவிட்டவன், “பேயை எல்லாம் என்னால லவ் பண்ண முடியாதுப்பா…” என்றான் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு.

“கணேஷ்ஷ்ஷ்…..” அவள் சத்தம் போட்டு கத்த,

“ஓகே ஓகே… கத்தாத கத்தாத… ஐ லவ் யூ பிசாசே..” என்று இளித்துக் கொண்டே சொன்ன கணேஷ் மீண்டும் அவளை இழுத்து அனைத்துக்கொண்டான்.

“விடுடா… என்னை”

“உகூம்… மாட்டேன்”

“நான் தான் பிசாசாச்சே பிறகு என்ன? போய் உனக்கேத்த ஒரு பொன்னை பார்த்து கட்டிக்கோ”

“உகூம்… மாட்டேன்… எனக்கு இந்த பிசாசுதான் வேணும்”

“இப்ப என்னை விடப்போறீயா இல்லையா?” சற்றுக் கோபமாக மது சொல்ல,

“ஓகே ஓகே.. கூல்… கொஞ்சம் திரும்பி நில்லு மது, ப்ளீஸ்” என்று தன பிடியை தளத்தி கெஞ்சலாக கேட்டான் கணேஷ்.

“ஏன்?”

“கொஞ்சம் திரும்பேன்.. ப்ளீஸ்…”

“ம்ம் ஓகே”

மது திரும்பி நிற்க, கணேஷ் அவனது ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தான், அதனுள் இருந்த மெல்லிய வெள்ளி சங்கிலியை அப்படியே, மதுவின் தலைமுடியை சற்றே நகர்த்தி அவளுக்கு அணிவித்து விட்டான்.

“ஏய் என்னப்பா இது?” என்று கேட்டவாறே சற்றே நகர்ந்து கண்ணாடி முன் சென்று நின்று கொண்டு அந்த சங்கிலியின் அழகை வருடிப் பார்த்துக்கொண்டே “நல்ல அழகா இருக்குப்பா” என்றாள்.

“வெள்ளினா.. பிசாசுக்கு ஒத்துக்காதாம், அதான் நீ உண்மையிலேயே பிசாசா இல்லையா என்று செக் செய்தான் இதை வாங்கி வந்தனான்” என்று வயிற்றைப்பிடித்துக்கொண்டு சிரித்தான் கணேஷ்.

“டேய்..” என்றே அந்த கண்ணாடிக்கு முன் இருந்த சென்ட் போத்தலை தூக்கி வீசினாள் மது. எவ்வளவு வேகமாக வந்ததோ, அதை அப்படியே லாவகமாக பிடித்து அவனருகில் இருந்த மேசைமீது வைத்தான் கணேஷ்.

பயணம் தொடரும்…

முன்னைய பகுதிகளை வாசிக்க