எழுதியது: சிறி சரவணா
பல நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, சமுத்திரங்களில் வாழும் மிதவைவாழி (plankton) உயிரினங்களை கடந்த மூன்று வருடங்களாக ஆய்வுசெய்துள்ளனர். அதன் அடிப்படியில் பல முடிவுகளையும், அந்த அங்கிகளின் படங்களையும் Journal Science சஞ்சிகையில் வெளியிட்டுள்ளனர்.
கிட்டத்தட்ட 35000 வகையான பாக்டீரியாக்களையும், 5000 புதிய வைரஸ்களையும், 15000 இற்கும் மேற்பட்ட ஒரு கல அங்கிகளையும் இனம்கண்டுள்ளனர். இதில் பெரும்பாலானவை புதிய, இதற்கு முன்பு இனங்காணப்படாத உயிரினங்களாகும்.
அறிவியல் ஆய்விற்கான தேசிய நிலையத்தின் ஆய்வாளர், டாக்டர் கிரீஸ் பௌலர் கருத்துத் தெரிவிக்கையில், இதுவரை செய்த ஆய்வுகளின் அடிபடையில், அவர்களிடம் தற்போது மிதவைவாழி உயிரினங்களைப் பற்றிய பூரணமான தகவல்கள் இருப்பதாக கருதுகின்றார்.
மிதவைவாழி உயிரினங்கள் பருமனில் மிகச் சிறியதாக இருப்பினும், சமுத்திரத்தில் உள்ள அனைத்து மிதவைவாழி உயிரினங்களையும் ஒன்றாக சேர்த்தால், கடலில் உள்ள உயிரினங்களில் 90% திணிவை இவை கொண்டுள்ளன.
இந்த மிதவைவாழி வகை உயிரினங்களில், வைரஸ், பக்டீரியா மற்றும் ஒரு கல அங்கிகள் என்பன உள்ளடங்கும். இவை உணவுச் சங்கிலியில் அடிப்படைக்கட்டமைப்பாக விளங்குவதுடன், நாம் சுவாசிக்கும் ஒக்சீசன் வாயுவில் பாதியை ஒளித்தொகுப்பு மூலமாக உருவாக்குகின்றன.
இந்த உயிரினங்களைப் பற்றி இவ்வளவு காலமும் அவ்வளவாக தெளிவான ஆய்வுகள் நடத்தப்படவில்லை. அதை மாற்றும் விதமாக 2009 தொடக்கம் 2013 வரையான காலப்பகுதியில் சர்வதேச ஆய்வாளர்கள் குழு ஒன்று, தாரா என்ற பாய்மரக்கப்பலில் அண்ணளவாக 30,000 km சமுத்திரங்களில் பயணித்து அண்ணளவாக 35000 உயிரின மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
இவை கடலின் மேற்பரப்பிற்கும், மேற்பரப்பில் இருந்து 1000 m ஆழம் வரையுள்ள பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகளில் இருந்தும் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அண்ணளவாக 10 மில்லியன் யுரோ செலவழிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சேகரிக்கப்பட்ட 35,000 மாதிரிகளில், 579 மாதிரிகளை ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர், அதன் அடிபடையில் இந்தக் குழு ஐந்து ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
டாக்டர் பௌலர், இந்த ஆய்வு, கடல்வாழ் மிதவைவாழி உயிரினங்களைப் பற்றிய எமது அறிவை மேம்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவர்களது இந்த மாதிரியில் இருந்து அண்ணளவாக 5000 வைரஸ் வகைகளை ஆய்வாளர்கள் இனங்கண்டுள்ளனர். ஆனால் இதில் வெறும் 39 வகையான வைரஸ்கள் மட்டுமே ஏற்கனவே எமக்கு தெரிந்தவயாகும்.
அதேபோல, ஒருகல அங்கிகளில் அண்ணளவாக 150,000 வேறுபட்ட இனங்கள் இருக்கலாம் என இந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கு முன்னர் எமக்கு வெறும் 11,000 மிதவைவாழி உயிரினங்களையே தெரிந்திருந்தது. ஆனால் இந்த புதிய ஆய்வு முடிவுகள் நமக்கு தெரிந்திருந்த அளவை விட 10 மடங்கு அதிகமாக இருக்கலாம்!
இன்னுமொரு முக்கிய விடயம் என்னவென்றால், இந்த சேகரிக்கப்பட்ட அங்கிகளில் அண்ணளவாக 40 மில்லியன் ஜீன்களை ஆய்வு செய்ததில், 80% ஜீன்கள் இதுவரை நாம் அறியாத புதியனவாகும்.
இந்த ஆய்வாளர்கள், எப்படி இந்த மிதவைவாழ் உயிரினங்கள் எப்படி சமூகங்களாக வாழ்கின்றன எனவும் ஆய்வு செய்துள்ளனர்.
ஆய்வாளர்கள், இந்த ஆய்வு வெறும் தொடக்கமே என்று தெரிவித்துள்ளனர். இவர்கள் மொத்த மாதிரிகளில் வெறும் 2% மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் அனைத்தையும் ஆய்வு செய்து மேலும் பல முடிவுகளை பெறமுடியும் என்றும் கருதுகின்றனர்.
மூலம்: bbc science