புதிய HPV தடுப்புமருந்து 80% கருப்பப்பை வாய்ப்புற்றுநோயை தடுக்கிறது

புதிய ஆய்வுகளின்படி, மனித பப்பிலோமாவைரஸ் (Human Papillomavirus – HPV) தடுப்பு மருந்து, 80% மான கருப்பப்பை வாய்ப்புற்றுநோயைத் தடுக்கக்கூடியதாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது பன்னிரண்டு வயதாவதற்கு முன்பு குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பு மருந்தை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் க.வா.பு வருவதை 80% வரை தவிர்க்கலாம்.

இந்த புதிய தடுப்புமருந்து – 9-வாலன்ட் (9-Valent), ஒன்பது விதமான HPV விகாரங்களில் இருந்து பாதுகாப்புவழங்குவதுடன், மேலும் 19,000 வகை புற்றுநோய்களையும், குறிப்பாக பிறப்புறுப்புப்பகுதிகளில் வரும் புற்றுநோய்களைத் தடுக்கக்கூடியதாக விளங்குகிறது என புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய HPV தடுப்புமருந்து, முன்னைய தடுப்புமருந்தைக் காட்டிலும் 11% வினைத்திறனாக செயற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க நோய்த்தடுப்புப் பிரிவு நிலைய ஆய்வாளர்களும் Cedars-Sinai Samuel Oschin Comprehensive Cancer Institute ஆய்வாளர்களும் ஒன்று சேர்ந்து, 1993 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் 2670 நோயாளர்களிடம் இருந்து பெறப்பட்ட HPV DNA இழையமாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தி, எத்தனை நோயாளர்களில் HPVயினால் புற்றுநோய்த்தாக்கம் உருவாகியுள்ளது என கணக்கிட்டுள்ளனர்.

இதுவரை இவ்வளவு பெரிதாக HPV பற்றி ஆய்வுகள் நடத்தப்படவில்லை, இதுவே முதன்முறையாகும் என Cedars-Sinai Samuel Oschin Comprehensive Cancer Institute இன் இயக்குனர் மார்க் டி. குட்மன் கூறியுள்ளார். இது, உலகில் உள்ள மொத்த புற்றுநோய் தாக்கத்தின் அளவை குறைக்க உதவுவதுடன், புற்றுநோய்களுக்கு எப்படியான சிகிச்சை முறையை குழந்தைப்பருவத்திலேயே நோய்த்தடுப்பு மருந்துகள் மூலம் வழங்கவேண்டும் எனவும்  வழிகாட்டும் என குட்மன் கருதுகிறார்.

இந்த புதிய ஆய்வுப்படி, புதிய HPV தடுப்புமருந்து 5.7% தொண்டைப் புற்றுநோயை தடுக்கும் – தொண்டைப்புற்றுநோய் HPV யால் உருவாகும் ஒரு பொதுவான புற்றுநோயாகும்.

எப்படியிருப்பினும் இந்த HPV ஐ தடுக்கும் முந்தய தடுப்பு மருந்துகளான கர்டசில் மற்றும் செர்வரிக்ஸ் போன்றவையும் சிறப்பாக தொழிற்பட்டுள்ளது. இந்த புதிய தடுப்புமருந்து 9-வாலன்ட், முந்தய மருந்துகளைவிட 11% சிறப்பாக தொழிற்படும்.

மூலம்: sciencealert