ப்ளுட்டோவிற்கு அடுத்து?

எழுதியது: சிறி சரவணா

நாம் சூரியத்தொகுதியில் இருக்கும் அனைத்துக் கோள்களையும் சென்று பார்த்தாயிற்று. 1980 களில் புறப்பட்ட வொயேஜர் விண்கலங்கள் வியாழன், சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களின் அருகில் சென்று அவற்றைப் படம் பிடித்தது மட்டுமன்றி, அவற்றின் கட்டமைப்பு, காந்தப்புலம் போன்ற தகவல்களையும் எமக்குத் தெரியப்படுத்தியது.


சூரியத் தொகுதியைப் பற்றி அறிந்துகொள்ள எனது “சூரியத்தொகுதி ஒரு அறிமுகம்” என்ற இலவசமின்னூலை பார்க்கலாம்!


இதுவரை அருகில் சென்று விசிட் அடிக்காமல் இருந்த ஒருவர், மிஸ்டர் ப்ளுட்டோ! அவரையும் நாசாவின் நியூ ஹோரிசொன்ஸ் விண்கலம் சென்று படம்பிடித்து அனுப்பிவிட்டது. இப்போது நியூ ஹோரிசொன்ஸ் விண்கலம் கைப்பர் பட்டியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. அங்கிருக்கும் சில பல ப்ளுட்டோ போன்ற சிறு கோள்கள் போன்ற வான்பொருட்களை அது அருகில் சந்திக்கும், ஆனால் அது நடைபெற 2019 வரை காத்திருக்கவேண்டும்!

சரி அதுவரை யாருக்குப் பொறுமை இருக்கிறது என்று சிந்திக்கலாம், ஆனாலும் அதற்கு முதல், வேறு என்ன விண்கலங்கள் தற்போது நம் சூரியத் தொகுதியில் உள்ள பொருட்களை ஆராய சென்றுகொண்டிருகிறது என்று பார்க்கலாம்.

நாசாவின் ஜூனோ விண்கலம் – வியாழன்

பழைய ரோமப் பெண்கடவுள் – ஜூனோ, கடவுள்களுக்கெல்லாம் அரசி! இந்தப் பெயரைக் கொண்ட விண்கலம், ஆகஸ்ட் 5, 2011இல் பூமியில் இருந்து புறப்பட்டு தற்போது வியாழனை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. ஜூலை 2016 இல் வியாழனைச் சென்றடையும்.

ஜூனோ விண்கலம்
ஜூனோ விண்கலம்

ஜூனோ விண்கலம் ஒரு சுற்றுக்கலன், அதாவது இது வியாழனை வடக்குத் தெற்காக அதாவது துருவங்களைச் சுற்றிவரும் (மத்திய தரைக்கோட்டிற்கு 90 பாகையில்) ஒரு விண்கலம்.

ஜூனோவின் முக்கிய நோக்கம் வியாழனின் ஈர்ப்புவிசை, காந்தப் புலம் மற்றும் துருவ காந்தக்கோளம் என்பவற்றை ஆய்வுசெய்வதாகும். அதுமட்டுமல்லாது வியாழக்கோளின் தோற்றம், அதன் உள்ளக கட்டமைப்பு, வியாழனில் இருக்கும் நீரின் அளவு என்பனவற்றையும் இது ஆய்வுசெய்யும்.

அண்ணளவாக 2.8 பில்லியன் கிலோமீட்டர்கள் பயணித்து வியாழனை ஜூனோ விண்கலம் அடையும். பூமியின் ஒரு வருடத்தில் வியாழனை 33 முறை சுற்றிவரும்.

தனது ஆய்வுகள் அனைத்தையும் அக்டோபர் 2017 இல் நிறைவுசெய்துவிட்டு, வியாழனின் ஈர்ப்பு விசைக்குள் சென்று அதனது வளிமண்டலத்தில் எரிந்துவிடும். இந்த நடவடிக்கைக்குக் காரணம், ஜூனோ தவறுதலாக வியாழனின் எதாவது ஒரு துணைக்கோளில் மோதிவிடக்கூடாது என்பதாகும்.

மேலதிக வாசிப்பு: வியாழனைப் பற்றி 10 விடயங்கள்!

பெப்பிகொலோம்போ – புதன்

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினதும் ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினதும் கூட்டு முயற்சியாக பெப்பிகொலோம்போ என்ற திட்டம் புதனை நோக்கி 2017 இல் தனது பயணத்தைத் தொடங்கும். இது 2024இல் புதனைத் சென்றடையும்.

பெப்பிகொலோம்போ
பெப்பிகொலோம்போ

பெப்பிகொலோம்போ திட்டம் இரண்டு விண்கலங்களை உள்ளடக்கியது, ஒன்று – புதன் கோள் சுற்றுக்கலன், இரண்டு – புதன் காந்தக்கொளச் சுற்றுக்கலன்.

இவை இரண்டும் புதனின் கட்டமைப்பு மற்றும் காந்தபுலம், ஈர்ப்புவிசை போன்றவற்றை மிகத்துல்லியமாக ஒரு வருடத்திற்கு ஆய்வு செய்யும். இந்த விண்கலங்களின் முக்கிய பண்பு, இவற்றால் 350 பாகை செல்சியசிற்கும் அதிகமான வெப்பநிலையைத் தாங்கிக்கொள்ள முடியும்!

மேலதிக வாசிப்பு: புதனைப் பற்றி 10 விடயங்கள்!

அக்காட்சுகி விண்கலம் – வெள்ளி

ஜப்பானிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வெள்ளியை ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட விண்கலம், இது 2010, மே 20 இல் விண்ணுக்கு ஏவப்பட்டது. டிசம்பர் 7, 2010 இல் வெள்ளிக்கு அருகில் சென்றது. ஆனால் வெள்ளியைச் சுற்றவைப்பதற்குத் தேவையான என்ஜின்கள் ஒழுங்காக வேலை செய்ததால், தற்போது சூரியனைச் சுற்றிக்கொண்டிருகிறது!

அக்காட்சுகி
அக்காட்சுகி

ஆனாலும் ஜப்பானிய ஆய்வாளர்கள் இதைக்கைவிட்டுவிடவில்லை, 2015 இல் மீண்டும் இது வெள்ளிக்கு மிக அருகில் வரும், அப்போது மீண்டும் என்ஜினை இயக்கி அக்காட்சுகியை வெள்ளியைச் சுற்றவைக்க இவர்கள் முயற்சிக்கின்றனர்.

எப்படியியோ இது வெள்ளியை சரியாக சுற்றினால், தனது அகச்சிவப்புக் கதிர் காமரா மூலம் வெள்ளியின் மேற்பரப்பு மற்றும் அதன் மேகங்களையும் இதனால் ஆய்வுசெய்யமுடியும். அதுமட்டுமல்லாது, மற்றைய சில கருவிகள், வெள்ளியில் மின்னல் இடம்பெறுவதை உறுதிப்படுத்தவும், அங்கு இன்றும் எரிமலைச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றனவா என்றும் ஆய்வுசெய்யும்.

அக்காட்சுகி என்ற ஜப்பானிய சொல்லிற்கு விடியல் என்று பொருள்!

மேலதிக வாசிப்பு: வெள்ளியைப் பற்றி 10 விடயங்கள்!

நாசாவின் இன்சைட் – செவ்வாய்

இது செவ்வாயில் தரையிறங்கப் போகும் நாசாவின் ஒரு ரோபோ விண்கலம். மார்ச் 2016 இல் இது பூமியில் இருந்து புறப்படும். செப்டெம்பர் 2016 இல் இது செவ்வாயை சென்றடையும்.

நாசாவின் இன்சைட்
நாசாவின் இன்சைட்

இது செவ்வாயில் தரையிறங்கினாலும், தளவுளவி போல அசைந்து திரியாமல் ஒரே இடத்தில் இருந்து தனது ஆய்வுகளை மேற்கொள்ளும். இதன் பிரதான நோக்கம், செவ்வாயின் அகக்கட்டமைப்பை ஆய்வுசெயவதே. செவ்வாய் உருவாகிய காலத்தில் இருந்து அதனது கட்டமைப்பு எவ்வாறான மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது என்பதனை இது தெளிவாக ஆய்வுசெய்யும். இதன்மூலம் பாறைகளால் ஆன கோள்களான புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகியவற்றின் ஆரம்ப வரலாற்றைப் பற்றி அறியமுடியும்.

CubeSat இன்சைட் தரையிறங்கும் போது தகவல் பரிமாறும் விதம்
CubeSat இன்சைட் தரையிறங்கும் போது தகவல் பரிமாறும் விதம்

இந்த இன்சைட் விண்கலம் மேலும் இரண்டு குழந்தைகளையும் காவிச் செல்கிறது! அதாவது கியூப்சாட் (CubeSat) செய்மதிகள், இவை மிகச் சிறிய செய்மதிகள் – மார்ஸ் கியூப் வன் (Mars Cube One – MarsCO) என அழைக்கப்படும் இந்த சிறிய செய்மதிகள், இன்சைட் தரையிறங்கும் போது அதற்கு உதவிசெய்யவும், தகவல்களை பூமிக்கு பரிமாறவும் உதவும்.

எக்ஸ்ஒமார்ஸ் – செவ்வாய்

இது செவ்வாயை ஆய்வு செய்யச் செல்லும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் திட்டமாகும். இதன் முக்கிய நோக்கம் செவ்வாயில் உயிர் இருப்பதற்கான தடயங்கள் எதாவது இருக்கிறதா என்று ஆய்வுசெயவதே.

இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட திட்டங்களை விட இது சற்றே பெரிய திட்டமாகும். 2016 இல் முதலாவது திட்டம் நடைமுறைப் படுத்தப்படும். இதில் ஒரு சுற்றுக்கலனும், தரையிறங்கியும் (Entry Demonstrator Module – EDM) இருக்கும்.

இந்த Trace Gas Orbiter என்ற சுற்றுக்கலன் செவ்வாயின் மேற்பரப்பில் இருக்கும் வளிமண்டல வாயுக்களை ஆய்வுசெய்யும். தரையிறங்கி வெறும் தகவல் சேகரிப்புக் கலமாகும். இது வளிமண்டல உள்நுழைவு, தரையிறங்கச்செயற்பாடு மற்றும் தரையிறக்கம் போன்ற செயன்முறைகளைப் பற்றிய குறிப்பை பூமிக்கு அனுப்பிவைக்கும்.

எக்ஸ்ஒமார்ஸ் தளவுளவியும், சுற்றுக்கலனும்!
எக்ஸ்ஒமார்ஸ் தளவுளவியும், சுற்றுக்கலனும்!

அதன் பின்னர் 2018 இல் இன்னுமொரு விண்கலம், தளவுளவியை காவிச் செல்லும். இந்தத தளவுளவி, செவ்வாயின் மேற்பரப்பில் துளைகள் இட்டு உயிரின் கட்டமைப்புக்கு எதாவது சாதியக்கூறுகள் இருக்கிறதா என்று ஆய்வுசெய்யும். இந்த தளவுளவி வெற்றிகரமாக தரையிறங்க, ஏற்கனவே 2016 இல் தரையிறங்கிய EDM இன் தரவுகள் பயன்படுத்தப்படும்.

அடுத்த பத்துவருடத்திற்கு மேல் நமது சூரியத் தொகுதியை ஆய்வுசெய்ய பல விண்கலங்கள் தற்போதே உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் தற்போது அறிந்திருப்பீர்கள். அடுத்தகட்டம் நிச்சயம் செவ்வாய்க்கு மனிதனை அனுப்புவதாகத் தான் இருக்கும்.

மேலதிக வாசிப்பு: செவ்வாயைப்பற்றி 10 விடயங்கள்!

தொழில்நுட்பம் வளர வளர எப்படியான சாத்தியக்கூறுகளை அது உருவாக்குகின்றது என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்!

படங்கள்: Wikipedia, ESO, NASA, JAXA