மீரா – அறிவியல் புனைக்கதை

எழுதியது: சிறி சரவணா


 

“நீ ஏன் இங்க இருக்கிறே?”

“இது அமைதியா இருக்கே!”

“தனியாவா வந்தே?”

“இல்லை, சுப்புணியும், ஜம்முவும் இருக்காங்க…”

தலையை சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்த கோவிந்தன், ஒருவரும் இல்லாததை உணர்ந்துகொண்டார். பார்க்க ஒரு 10 வயது மதிக்கத்தக்க பெண்குழந்தை, அதுவும் இப்படி அதிகாலை வேலையில் தனியா இந்த நதிக்குப் பக்கத்தில் இருகிறதே…

யாரும் இல்லாத இடம் வேறு… சற்றுக் காடான பகுதிதான், அதனால் குழந்தையை தனியாக விட்டுச் செல்ல அவருக்கு மனம் வரவில்லை… யாரும் வரும் வரை அவ்விடத்தில் நின்றே தனது உடற்ப்பயிர்சியை செய்துகொண்டிருந்தார்.

அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி, யாரும் அதிகம் வராத இந்த பார்க்கின் ஒதுக்குப் புறமான, கூலாங்கற்கள் நிரம்பிய நதியின் அருகில் காலைவேளையில் ஓடுவது டாக்டர் கோவிந்தனுக்கு பிடித்தமான விடயம். ஆனால் இன்று யாருமற்ற இடத்தில் ஒரு சிறு பெண்குழந்தை!

“பாப்பா உன் பேரென்ன?”

“மீரா…. மீ….ரா….” என ராகமாகச் சொன்னது அந்தக் குழந்தை. அத்தோடு நிற்காமல், உடற்பயிற்சி செய்கிறேன் என்ற கையையும் காலையும் சும்மா அசைத்துக் கொண்டு நின்ற கோவிந்தனைப் பார்த்து, தன் அருகில் வந்து அமருமாறு சைகை செய்தது, ஆனால் அதன் பார்வை அந்த நதியில் ஓடும் நீரை விட்டு அகலவில்லை.

யார் இந்தப் பெண் குழந்தை? இதன் செய்கைகளைப் பார்த்தால் மனநலம் பாதிக்கப்பட்ட மாதரியும் இருக்கிறதே, பேசாமல் போலிசுக்கு போன் பண்ணிரலாமா? என்ற என்னத்தை சற்றே ஒதுக்கி வைத்து, கையில் இருந்த துவாயால் தன் கழுத்தை துடைத்துக் கொண்டே அந்தக் குழந்தைக்கு அருகில் நிலத்திலேயே கூலாங்கற்கள் நிரம்பியிருந்த அந்த நதிக்கரை ஓரமாக அமர்ந்தார்.

“சுப்புணி யாரு உன் அண்ணனா? இன்னொரு பேர் சொன்னியே பாப்பா? அது யாரு?”

“பாப்பா இல்லை… மீரா… மீரா என்றே கூப்பிடு”

ஓ.. என மனதில் நினைத்துக்கொண்ட கோவிந்தன், மீண்டும் “சுப்பிணி யாரு? எங்க உன்கூட வந்தவங்க எல்லாம்?”

கோவிந்தனை அந்தக் குழந்தை சற்றும் திரும்பிப் பார்க்காமல், மீராவிடம் இருந்து ஒரு கேள்வி.

“இந்த நதியைப் பார்த்தா உனக்கு என்ன தோணுது?”

“ரொம்ப அழகான நதி.. இந்த நீரின் சலசலப்பும் காலைவேளையின் குளிரும் என்னை இங்கே அதிகாலை வேலையில் ஜாக்கிங் செய்யத் தூண்டும்” என்று சொல்லிவிட்டே அந்தக் குழந்தையை நோட்டம் விட்டார் கோவிந்தன்.

சிவப்பு நிற பட்டுத் தாவணி போல ஒரு உடை, தலையில் மல்லிகைப் பூ, இரட்டைப் பின்னல் கூந்தல் மற்றும் பொட்டு. காலை வேளையில் இப்படி அழகாக உடுத்திக்கொண்டு இங்கே இருக்கிறதே!

“இந்த ஓடும் நீரைப் பார்த்தால் உனக்கு என்ன தோனுகிறது என்று கேட்டேன்” மறுபடியும் மீரா.

“ஓ.. நீ அதைக் கேட்டாயா?

இப்போதுதான் மீரா முதன்முதலாக கோவிந்தனை திரும்பிப்பார்கிறாள், அதுவும் மெதுவாக, திரும்பிப் பார்த்து ஒரு சிறு புன்னகை.

அதுவொரு உன்னதமான புன்னகை, சிறுவர்களுக்கே உரிய அப்பாவித்தனம் நிறைந்த புன்னகை.

“நதியென்றால் எப்போதும் நீர் ஓடிகொண்டே இருக்குமே…” என்று புன்னகை மாறாத மீராவின் முகத்தைப் பார்த்துச் சொன்னார் கோவிந்தன்.

“எவ்வளவு நாளா இந்த நதியில நீர் ஓடிட்டு இருக்கு? இந்த தண்ணீர் ஓடி முடியாதா?” தற்போது மீண்டும் அந்த நதியே பார்த்துக்கொண்டே கேட்டாள் மீரா.

“நதின்னா நீர் எப்பவுமே ஓடிட்டே இருக்கும்.. அதுவும் இந்த நதி இதுவரை வற்றியதே இல்லையாம்.. பல ஆயிரம் வருசமா ஓடிட்டே இருக்கு”

“இந்த நீர் எல்லாம் ஓடி எங்க போய்ச் சேரும்?”

“கடலுக்குத்தான் போய்ச்சேரும்… பாப்பா… உன் அப்பா அம்மா எங்கே? என்கூட வா வீட்ட கொண்டு போய் விட்டுறன்.. உனக்கு உன் வீடு எங்க இருக்குன்னு தெரியுமில்லே?”

இப்போது மீண்டும் அந்தப் பெண்குழந்தை கோவிந்தனைத் திரும்பிப் பார்த்து..

“பாப்பா இல்லை… மீரா…. மீரா…”, சலனமற்ற சிரிப்பு மட்டும் மீராவின் முகத்தில் இருந்து மாறவேயில்லை.

“சாரி… மீரா…. வாரீயா உன்னை வீட்டுக்குக்கொண்டு போய் விட்டுர்றேன்… உன் வீட்ல உன்னைத் தேடமாட்டாங்களா?”

மீண்டும் நதியை நோக்கி திரும்பிக்கொண்டே, “ஆக இந்த நதியில் ஓடும் நீருக்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லையா?”

நல்லா சிந்திக்குதே இந்தக் குழந்தை, பாவம் எதாவது மனநல பிரச்சினையா இருக்குமோ என்று சிந்தித்துக்கொண்டே சென்றவரின் சிந்தனை கலைய,

“அப்படி இல்லை மீரா… இந்த நதிக்கு ஒரு தொடக்கம் எதாவது ஒரு மலையில் இருக்கும்.. அது இந்த வழியாக வந்து அப்படியே கடலிலே சென்றுவிடும்.. நதி என்றாலே நிலையாக இருக்காத ஒன்றுதானே…”

“ஆக நம் வாழ்கையைப் போல…”

வாவ்! இந்தச் சின்னப் பெண்ணுக்குள் இத்தனை விபரமா?

“உனக்கு நிறைய விஷயங்கள் தெரிஞ்சிருக்கே மீரா…”

“அதுதான் பிரச்சினையே… டாக்டர் கோவிந்தன்”

“என் பேர் உனக்கு எப்படித் தெரியும்?” கோவிந்தனுக்கு தற்போது ஆச்சரியம்! ஆனாலும் அவர் அந்தச் சூழ்நிலையை புரிந்துகொள்ளவில்லை. அவர் பெயர் தெரியாமல் இருந்தால் தான் அது ஆச்சரியம், ஏனென்றால் தற்போது எல்லாப் பத்திரிக்கையிலும் அவர் படம்தானே!

— குவாண்டம் இயற்பியலில் ஒரு புதிய திருப்பம் – ஈர்ப்பு விசையை ஒருங்கிணைக்கும் சமன்பாடான ‘குவாண்டம் ஈர்ப்பியல்’ என்ற பிரச்சினைக்கான தீர்வை டாக்டர் கோவிந்தன் அமைத்துவிட்டார். இன்னும் சில தினங்களில் அவர் அதனை பூர்த்தி செய்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது, இது இயற்பியலின் அடுத்த பரிமாணத்திற்கு மனிதகுலத்தை அழைத்துச்செல்லும் என்பதில் ஐயமில்லை — இப்படித்தான் தற்போது அனைத்துப் பத்திரிக்கைகளும் செய்தி வெளியிடுகின்றனர். அதுவும் கோவிந்தனது புகைப்படத்துடன்.

இந்தச் சிறுமி அந்த செய்திகளையும் வாசித்திருப்பாளா? ஆச்சர்யம்! கோவிந்தனுக்கு, அடுத்து அவள் கேட்ட கேள்வி, அவரது சந்தேகத்தை உறுதிசெய்தது.

“எனக்கு நிறையத் தெரியும்! இந்தக் கூழாங்கல்லை தூக்கி அப்படியே விட்டெறிந்தால் அதுபோய் அப்படியே அந்த நதி நீரில் விழுமா?” என்று கேட்டவாறே சிறு கூழாங்கல்லை எடுத்து கோவிந்தனைப் பார்த்தவாறே நதியை நோக்கி வீசினாள் மீரா.

சிரித்துக்கொண்டே கோவிந்தன், “ஆம்! ஈர்ப்பு விசை இருக்கிறதல்லவா அது அந்தக் கல்லை மீண்டும் நீரினில் விழ வைத்துவிடும்… அது சரி உனக்கு ஈர்ப்பு விசை என்றால் என்னவென்று தெரியும் தானே?” தற்போது கோவிந்தனுக்கு இந்தச்சுட்டிப் பெண்ணோடு பேசவேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது.

நிச்சயம் இவள் ஒரு குழந்தை அதிமேதாவியாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்து விட்டார்!

“நியுட்டனின் ஈர்ப்புக் கோட்பாட்டைப் பற்றி உனக்குத் தெரியுமா மீரா?”

“நியுட்டன்?” என்று கண்கள் விரிய கோவிந்தனைப் பார்த்துக் கேட்ட மீரா தொடர்ந்து,

“உனக்கு கந்தசாமியை தெரியுமா?”

“கந்தசாமி யாரு?”

“ஈர்ப்பு விசைக்கு காரணம் என்னவென்று முதலில் கண்டறிந்தவன்”

“ஓகோ.. எனக்குத் தெரியாதே! அப்படி நான் கேள்விப்பட்டதே இல்லை..” பதில் சொன்னவாறே கோவிந்தன், ஏன் இந்தப் பெண் இப்படி பேசுகிறாள் என்று எண்ணிப்பார்த்தார்.. நிச்சயம் யாரோ இவளுக்கு விளையாட்டாக சொல்லியிருக்கவேண்டும்! இவள் அதனை நம்ம்பியிருக்க வேண்டும்!

“அவனும் உன்னைப்போலத்தான்! நல்ல அறிவாளி!! பதினோராம் நூற்றாண்டிலேயே ஈர்ப்புவிசைக்கான காரணத்தை கண்டரிந்துவிட்டனே”, மீண்டும் நதியினுள் ஒரு கல்லை வெகு இலகுவாக, அமைதியாக விட்டெறிந்தாள் மீரா.

“என்னைப் போலவா? உனக்கு நான் யாரென்று தெரியுமா? அதுசரி, எனது பெயர் என்ன என்று உனக்கு எப்படித்தெரியும்?” ஆர்வமாகவே கேட்டார் கோவிந்தன்.

“உனக்கு நான் கந்தசாமியைப் பற்றிச் சொல்லவா? அவனைப் பற்றிச் சொன்னால் உனக்கு நீ யார், நான் யார் என்றும் புரியலாம்.. நீ புத்திசாலி என்று எனக்குத் தெரியும்…” தெளிவாகவே மீரா கூறியவரே மீண்டும் ஒரு கூழாங்கல் நதி நோக்கித் சென்றது.

கோவிந்தனுக்கு மிக மிக அதிசயம், ஆனாலும் அவளுடன் தொடர்ந்து உரையாட விரும்பி, “சரி அவனைப் பற்றிச் சொல்லேன்.. அந்த கந்தசாமியைப் பற்றி…” என்றார்.

“அவன் மனித ஆண்டுக் கணக்குப் படி, 11ம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். இங்கே தான் இந்த இந்தியத் துணைக்கண்டத்தில்… பத்தொன்பது வயசுதான்! ஒரு சிறிய ஸ்பார்க்… ஏன் மாங்காய் விழுகிறது என்று யோசிக்கத் தொடங்கி, ஈர்ப்பு விசையின் ஆதாரத்தையே கண்டறிந்து.. பூமிக்கும் சந்திரனுக்கும் இருக்கும் ஈர்ப்புத் தத்துவத்தை கண்டறிந்துவிட்டான்.”

“இப்படியொரு கதையை நான் கேள்விப்பட்டதே இல்லையே?”

மீண்டும் கோவிந்தனை அழகாகத் திரும்பிப் பார்த்து ஒரு சிறிய புன்னகை மீராவிடமிருந்து.

“அவன் கண்டுபிடிச்சது வேறு யாருக்கும் தெரியாதே.. அதனால் உனக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… இந்தக் கதை வரலாற்றில் இல்லை.”

“அப்படின்னா உனக்கு எப்படித் தெரியும்?”, என்று கேட்ட கோவிந்தனுக்கு ஆச்சர்யம் மேல் ஆச்சர்யம்.. இந்தப் பெண் இவ்வளவு அழகாக ஒரு கதையை சொல்ல முடியுமா? அதுவும் எந்தவொரு சலனமும் இன்றி… பியூர் ஜீனியஸ்!

“கந்தசாமியின் ஒரே தப்பு அவன் 11ம் நூற்றாண்டில் பிறந்ததுதான்! இந்த நதியைப் போலவேதான் ஒவ்வொரு நாகரிக சமுதாயமும்… இந்தப் பிரபஞ்சத்தில் உயிர் என்று ஒன்று தோன்றுவது மிக மிக அரிது! அப்படித் தோன்றும் உயிரினத்திலும் அறிவுள்ள உயிரினம் தோன்றுவது மிக மிகக் கடினம்! அப்படித் தோன்றும் அறிவுள்ள உயிரினங்களும் தங்கள் அறிவைப் பிழையான முறையில் எக்குத்தாப்பகப் பயன்படுத்தி அவர்களையே அழித்துக்கொண்டுள்ளனர்.”

“ஒ உனக்கு டிராக் சமன்பாடுகள் பற்றியெல்லாம் தெரியுமா?” என்று விழி விரியப் பார்த்த கோவிந்தனைப் பார்த்து சிறிய புன்னகையை உதிர்த்த மீரா, தனது கையை கோவிந்தனை நோக்கி நீட்டினாள்.

சிரித்துக் கொண்டே கோவிந்தன் அந்த மென்மையானகுழந்தைக் கரத்தைப் பற்றிக்கொண்டார்.

மீரா தொடர்ந்தாள், “இந்தப் பால்வீதியில் அவ்வளவு அதிகமாக ஒன்றும் அறிவுள்ள உயிரனங்கள் இல்லை, ஆகவே மூத்த குடிகளான நாங்கள், வேறு பல கோள்களிலும் வாழும் உயிரினங்கள் தொடர்ச்சியான வளர்ச்சியில் செல்லும் விதமாக அவர்களைப் பராமரித்துக்கொண்டே வருகிறோம். எங்கள் தலைமை விஞ்ஞானி டேபி உருவாகிய சமன்பாட்டின் அடிப்படையில், எந்தெந்த வளர்சிக்காலத்தில் குறித்த நாகரீகத்திற்கு குறித்த இயற்பியலின் அடிப்படை விதிகள் தெரியவேண்டும் என்றும் அந்தச் சமன்பாடு கூறுகின்றது”

மீராவைச் சற்று மிரட்சியுடனே தபோது பார்த்துக்கொண்டிருந்தார் கோவிந்தன். ஆனாலும் அவளது கதை ரசிக்கும் வண்ணமே இருந்தது.

கோவிந்தனின் கையைத் தடவியவாறே மீரா தொடர்ந்தாள், “மனிதனுக்கு 11ம் நூற்றாண்டில் ஈர்ப்புவிசை பற்றித் தெரிவது, அவர்கள் 18ம் நூற்றாண்டில் அணுப்பிணைவுச் செயற்பாட்டை தவறாகச் செய்து மொத்த பூமியையும் அழித்துவிடுவதற்கான சாத்தியக்கூறை 87 வீதம் வரை கொண்டுசெல்லும் என்று டேபியின் சமன்பாட்டின் மூலம் அறியமுடிந்தது. அதனால் தான் உலக்குக்கு அவனது கண்டுபிடிப்பு செல்லமுதல் அதனைத் தடுக்கவேண்டிய கட்டாயம் உருவாகியது!”

கோவிந்தனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, இவ்வளவு அழகான புனைவை வியப்பதா? அல்லது இதெல்லாம் உண்மை என்று ஏற்றுக்கொள்வதா? அவர் மீராவின் முகத்தைப் பார்த்தவாறே அப்படியே சலனமற்று இருந்தார்.

மீரா மீண்டும் இடைவெளிவிட்டுத் தொடர்ந்தாள், “அறிவு என்பது இந்தப் பிரபஞ்சத்தின் சொத்து! அதனை நாம் அழிக்கக்கூடாது! ஆவகே கந்தசாமியைத் தடுத்துவிட்டோம், பின்னர் 17ம் நூற்றாண்டளவில் கந்தசாமியைப் போலவே துடிப்பான இளைஞன் நியுட்டன்.  அவனும் இந்த ஈர்ப்புவிசை பற்றிய சிந்தனையில் இருந்ததால், அவனுக்கு அந்த அறிவை கொடுப்பதற்கான மறைமுகமான சில வேலைகளை செய்து, அவன் மூலம் ஈர்ப்பு விசைத் தத்துவம் உலகுக்கு, இந்த மனித இனத்திற்கு வழங்கப்பட்டது.”

“கந்தசாமிக்கு என்னாச்சு?” இந்தக் கதை கோவிந்தனை நெகிழ்வித்ததா அல்லது மீரா அவரது கையைத் தடவிக்கொடுப்பது அவரை இலகுவாகியதா? தெரியவில்லை. அவர் குரல் சிறிதாகவே ஒலித்தது.

“நான் தான் சொன்னேனே. அறிவு என்பது இந்தப் பிரபஞ்சத்தின் சொத்து! அவனது அறிவு பத்திரப்படுத்தப்பட்டது! அவன் மட்டுமல்ல அவனைப் போலவே பலர், பூமி மனிதர்கள் மட்டுமல்ல… அவர்கள் எல்லோரும் டேபியின் சமன்பாட்டை மேற்கொண்டு திருத்தி அமைத்துக்கொண்டிருகின்றனர். அது அந்தச் சமன்பாட்டின் துல்லியத்தன்மையை அதிகரிக்கும்… இந்த பால்வீதியில் இருக்கும் அறிவுள்ள நாகரீகங்களை அழிவில்லாமல் பாதுகாக்கும்.”

மீரா மீண்டும் தொடர்ந்தாள், “ஒரு நாகரீகம் குறிப்பிட்டளவு வளர்ச்சியடையும் வரை நாங்கள் இருப்பது அவர்களுக்குத் தெரியக்கூடாது, அது அவர்களுது நாகரீகத்தை உருக்குலைத்துவிடும்… நாங்கள் எப்போதும் குறித்த நாகரீகங்கள் வளரும் விதத்தில் செல்வாக்குச்செலுத்துவதில்லை… தொழில்நுட்ப அறிவியல் வளர்ச்சியை மட்டுமே திருத்துகிறோம்.”

கோவிந்தனுக்கு இப்போது சிரிப்பே வந்துவிட்டது! வாய்விட்டு சிரித்தும் விட்டார்!

“இதெல்லாம் எங்கிருந்து கத்துக்கிறே மீரா?”

மீராவின் புன்னகை மாறவில்லை, அவள் அவர் கையைத் தடவுவதையும் நிறுத்தவில்லை.

“நான் கந்தசாமியைப் பற்றி ஏன் சொன்னேன் தெரியுமா? அவனும் இங்கே உன்னைப் பார்க்க வந்திருக்கிறான், அவனைத்தான் நான் செல்லமாக சுப்புணி என்று கூப்பிடுவேன்.”

“அப்படியா? எங்கே அவன்?”

“இப்போது உன்னால் பார்க்க முடியாது, ஆனால் விரைவில் பார்க்கலாம்”

“ஏன் பார்க்க முடியாது?”

மீரா மீண்டும் நதியை நோக்கி தனது பார்வையைத் திருப்பினாள். ஆனால் கோவிந்தனது கையை மட்டும் விடவில்லை.

“இந்த நதியைப் பார் கோவிந்தன்! இதில் நீ இப்போது பார்க்கும் நீர், நீ ஐந்து நிமிடத்திற்கு முன் பார்த்த நீர் அல்ல, ஆனாலும் நதி என்ற ஒரு கட்டமைப்பு அப்படியே அவ்விடத்திலேயே இருக்கிறது.”

“ஆம் இயற்கையின் அற்புதம் இல்லையா?” என்றார் கோவிந்தன்.

“ஆம் இது நதிக்கு மட்டும் சொந்தமானதல்ல, முழு இயற்கையுமே இந்த மரபையே கையாள்கிறது!”

“எனக்கு புரியலே மீரா… நீ என்ன சொல்ல வாறே?”

“கோவிந்தன்! நீ ஒரு அறிவாளி, உன் அறிவு இந்தப் பிரபஞ்சத்திற்குத் தேவை…”

“என்னால் முடிந்தவரை இந்த உலகத்திற்கு முடிந்ததை செய்கிறேன்!”

“அதுதான் தவறு…”

“புரியலை…”

“இந்த உலகிற்கு நீ கொடுக்கப்போகும் அந்தப் பரிசு, அதுதான் அந்த குவாண்டம் ஈர்ப்பியல் சமன்பாடுகள், அது ஆபத்தானது! அதாவது தற்போது அது ஆபத்தானது. 23ம் நூற்றாண்டின் மையத்தில் தான் மனித இனத்திற்கு அது தெரியவேண்டும். இப்போது வேண்டாம், பிரச்சினை என்னவென்றால் நீ ஏற்கனவே அந்தக் குவாண்டம் ஈர்ப்பியல் சமன்பாடுகளுக்கான சரியான தீர்வை கண்டுவிட்டாய். இப்போது மனிதர்களுக்கு இந்த சமன்பாடு கிடைப்பது இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள் சூரியனில் தவறாக ஆய்வுகளைச் செய்து சூரியத்தொகுதியின் அழிவிற்கு வழிவகுக்கும், டேபியின் சமன்பாடு 91வீத நிகழ்தகவைக் காட்டுகிறது. இது ஆபத்து”

மீராவின் கையில் இருந்த தனது கையை எடுத்துக்கொண்ட கோவிந்தன், “இப்போ நீ என்ன செய்யனும்னு சொல்லுறே?”

“உன் சமன்பாடுகள் நான்காம் பரிமாணத்தைப் பற்றி கூறுகின்றதல்லவா? உனக்கு அந்த நான்காம் பரிமாணம் எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டாமா? உன் அறிவு இந்தப் பிரபஞ்சத்தின் சொத்து, அதை எனக்கு அழிக்க விருப்பமில்லை. ஆனால் உன்னை உன் குவாண்டம் ஈர்ப்பியல் சமன்பாடுகளை வெளியிடவும்விட முடியாது. சுப்புணியைப் போல நீயும் என்கூட வந்துவிடேன்.”

“எங்கே?” தற்போது குழப்பத்தில் கோவிந்தன்.

“நீ பார்க்கும் மீரா உண்மையில் மீரா இல்லை, இது வெறும் பின்பமே.. நேரங்கள், வெளிகள் எல்லாவற்றையும் கடந்த ஒரு இடம், நம் பணி, இந்தப் பிரபஞ்சம் உருவாக்கும் உயிரினங்களை காப்பதே! முன்னொரு காலத்தில் என்னை ஜம்மு வந்து கூட்டிச்சென்றது போலவே, இப்போது நானே வந்துள்ளேன்! கோவிந்தன் மனித சமுதாயம் இன்னமும் வளரவேண்டி இருக்கிறது. உன் சமன்பாடுகள் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்.”

கோவிந்தன் குழப்பத்தில் அப்படியே இருக்க, சற்று நேரம் பொறுத்து மீரா மீண்டும்,

“நீ மீண்டும் வரலாம், 23ம் நூற்றாண்டில் இங்கு நாம் வருவோம், மீண்டும் மனிதற்கு இந்தச் சமன்பாடுகளை கொடுப்போம், அதற்கு முதல் இந்தச் சமன்பாடுகளை யாராவது கண்டறிந்துவிட்டால், உன்னை இப்போது நான் வந்து சந்தித்தது போலவே அவர்களையும் நாம் சென்று சந்திப்போம்… இப்போது நேரமாகிவிட்டது நீ வருகிறாயா?”

மீரா எழுந்து நின்றுகொண்டாள், தனது கையை கோவிந்தனை நோக்கி நீட்டுகின்றாள். கோவிந்தனுக்கு என்ன சொல்வது என்ன செய்வது என்றே புரியவில்லை, இது கனவா அல்லது நனவா, எதோ ஒரு உத்வேகம் வர, தனது கையை மீராவின் கையை நோக்கி கொடுக்கின்றார். அக்கணமே அவர் உடலில் மின்னல் தாக்கியதுபோல உணர்வுவர, மீராவின் உருவம் மெல்ல மெல்ல மறைகிறது.

அவ்விடத்தில் புதியதொரு உருவம் தோன்ற, அதனோடு இன்னும் இரண்டு உருவங்கள் தோன்றுகின்றன. நிச்சயம் சுப்புணியும் ஜம்முவுமாகத்தான் இருக்கவேண்டும். அவர்களது உடல் மனித உடல்களைப் போலவே இல்லை, இப்போது கோவிந்தனது உருவமும் மனிதனைப் போலவே இல்லை, இது பூமியே அல்ல.. காலங்களைக் கடந்து ஒரு… எதோ ஒரு வெளி…, அவரது கையை மட்டும் ஏதோவொன்று பற்றியிருக்கிறது – மீரா. இதுவா அந்தக் குழந்தை?

அதே சிறுமியின் குரல் மீண்டும் “நான்காம் பரிமாணத்திற்கு உன்னை வரவேற்கிறேன் கோவிந்தன்”.

முற்றும்.