சூரியத் தொகுதியின் நாயகன்

எழுதியது: சிறி சரவணா

வியாழனே நமது சூரியத் தொகுதியின் நாயகன்! இந்தப் பாரிய கோள், மற்றைய அனைத்துக்கோள்களையும் ஒன்றாகச் சேர்த்தாலும், அவற்றின் திணிவைவிட அண்ணளவாக இரண்டரை மடங்கு அதிகமாகவே திணிவைக் கொண்டுள்ளது. இப்படியாக அதிக திணிவைக் கொண்டிருப்பதனால், இந்த வியாழக்கோள் அதிகளவான ஈர்ப்புவிசையையும் கொண்டுள்ளது, இந்த அதிகப்படியான ஈர்ப்புவிசையால், சூரியத்தொகுதியில் மிக முக்கிய ஒரு அங்கத்தவராக இருப்பதுடன், பூமியில் உள்ள உயிர்களையும் பாதுகாக்கிறது.

65 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு விண்கல் பூமியைத் தாக்கி டைனோசர்கள் எல்லாம் அழிந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? வியாழன் என்ற ஒரு கோள் இல்லாவிடில், இன்னும் பல விண்கற்கள் பூமியை மனிதனின் வாழ்வுக்காலத்தில் தாக்கியிருக்கும். இன்னமும் தெளிவாகச் சொல்லப்போனால், பூமியில் மனித உயிரினம் தோன்றுவதையே இந்த விண்கற்களின் மோதல் தடுத்திருக்கும்.

அதிர்ஷவசமாக வியாழனது பாரிய ஈர்ப்புவிசை, பெரும்பாலான விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகள் போன்றவற்றை பூமியை நோக்கி வராமல் திசை திருப்பிவிடும்! இந்தக் காரணத்தோடு வேறு சில காரணங்களையும் உதாரணமாகக் கொண்டு, வானியலாளர்கள், எமது சூரியத்தொகுதியைப் போலவே இருக்கும் வேறு தொகுதிகளிலும் உயிரினம் இருப்பதற்கான சாத்தியக்கூறு அதிகம் எனக் கருதுகின்றனர்.

துரதிஷ்டவசமாக, நாம் இதுவரை கண்டறிந்துள்ள வேற்று விண்மீன்களை சுற்றிவரும் கோள்த் தொகுதிகளில் பலவற்றில் வியாழனைப் போன்ற பாரிய கோள்கள் அந்தந்த விண்மீன்களுக்கு மிக அருகில் காணப்படுகின்றன; வியாழனைப் போல தொலைவில் அல்ல. சில கோள்த் தொகுதிகளில் மட்டுமே, வியாழனைப் போல விண்மீனுக்குத் தொலைவில் இந்தப் பாரிய கோள்கள் காணப்படுகின்றன. இதற்குக் காரணம், ஒரு வின்மீனுக்குத் தொலைவில், இருள்சூழ்ந்த விண்வெளியில் சுற்றிவரும் கோள்களை கண்டறிவது  மிக மிகக் கடினம்.

நன்றி: ESO/L. Benassi
நன்றி: ESO/L. Benassi

எப்படியிருப்பினும், ஆய்வாளர்கள் தற்போது வியாழனின் சகோதரனை கண்டறிந்துள்ளனர் – இது அண்ணளவாக வியாழனின் அளவே! அதுமட்டுமல்லாது சூரியனைப் போன்ற ஒரு விண்மீனையே, அண்ணளவாக சூரியனில் இருந்து வியாழன் சுற்றும் தொலைவிலேயே இந்தக் கோள் சுற்றிவருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் கண்டுபிடிப்பு, எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நமது சூரியத்தொகுதி போலவே வேறு விண்மீன் தொகுதிகளும் இருக்கக்கூடும்.அங்கே உயிரினமும் தோன்றியிருக்கலாம். இதற்கெல்லாம் காரணம் நமது சூரியத் தொகுதியின் நாயகன் – வியாழனைப் போலவே, அங்கேயும் உள்ள சூப்பர்ஹீரோ!

மேலதிகக் குறிப்பு!

வியாழன் எமக்கு சூப்பர்ஹீரோவாக இருக்கலாம், அனால் அதுவொன்றும் சாந்தமான கோள் அல்ல! அங்கே பூமியை விட பலமடங்கு வேகத்தில் சூறாவளி பல நூறாண்டுகளாக வீசிக்கொண்டே இருக்கிறது!


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://unawe.org/kids/unawe1532/