எழுதியது: சிறி சரவணா
இந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பது சற்று வித்தியாசமான உயிரினம் போலத் தெரிகிறதா? வயதுபோன தாத்தாவின் சவரம் செய்யப்பட்ட முடி? இல்லை இல்லை! இது வெறும் பனி என்றல் உங்களால் நம்ப முடிகிறதா? விரிவாகப் பார்ப்போம்.
சில காடுகளில் ஈரப்பதம் கூடிய குளிர்கால இரவுகளில் இப்படியான பனி அமைப்பு இறந்துபோன மரத்துண்டுகளில் உருவாகின்றது. இப்படி இரவில் உருவாகும் இந்த முடி போன்ற பனியால் ஆன அமைப்பு, காலை சூரியனைக் கண்டதும் உருகிவிடும். மீண்டும் அடுத்த இரவில் உருவாகும்!
இதற்கான காரணத்தை பல காலமாக தேடித்திரிந்த நம் விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துவிட்டனர். Exidiopsis effusa என்ற ஒருவகை பங்கஸ் நுண்ணுயிரினமே இதற்குக் காரணமாம்.
இந்த “முடிப் பனி”, வெப்பநிலை 0 பாகை செல்சியசிற்கு சற்றுக் குறைவாக இருக்கும் குளிர்கால இரவில் மட்டுமே உருவாகிறது.
ஆனால் இந்த குறிப்பிட்ட வகை பங்கஸ் இருந்தால் மட்டுமே, “முடி” போன்ற அமைப்பில் இந்தப் பனி உருவாகிறது, அல்லது சாதாரணமாக எப்படி திட்டுத்திட்டாக பனி இருக்குமோ அப்படித்தான் காணப்படும்.
குறித்த பங்கஸ், பனியை 0.01mm விட்டம் கொண்ட நூலாக மாற்றுகின்றது, இந்த அமைப்பு பல மணிநேரங்கள் தொடர்ந்து நீடிக்க, சூழலின் 0 பாகை செல்சியசிற்கு அருகில் இருக்கும் வெப்பநிலை உதவுகிறது.
நன்றி: BBC Science