எமது பிரபஞ்சம் போலவே ஒரு பிரபஞ்சம் செய்ய என்ன சேர்மானங்கள் தேவை? இதோ பின்வருவன:
- 3 கப் ஹைட்ரோஜன்
- 1 கப் ஹீலியம்
- தேவையானளவு லிதியம்
- கொஞ்சமே கொஞ்சம் பெரிலியம்
இப்போது இவை அனைத்தையும் ஒன்றாக நசுக்கி மிக மிகச் சிறியவொரு பந்தாக ஒன்று திரட்டி பாதுகாப்பான தூரத்தில் வைத்துவிட்டு, இப்போது சற்று தொலைவில் நின்றுகொள்வோம், பெருவெடிப்பிற்காக!
மேற்குறிப்பிடப்பட்ட குறிப்பைக் கொண்டே எமது பிரபஞ்சமும் உருவாகியது எனலாம். பிரபஞ்சத்தின் தொடக்கத்தில், இந்த நான்கு வகையாக இரசாயனப் பதார்த்தங்களால்த் தான் இந்தப் பிரபஞ்சம் உருவாக்கப்பட்டு இருந்தது. இவை மூலகங்கள் என அழைக்கப்படுகின்றன.
இப்போது இந்தப் பிரபஞ்சம் உருவாகி 14 பில்லியன் வருடங்கள் ஆகிறது, அத்தோடு இந்த வெளியில் 92 மூலகங்கள் காணப்படுகின்றன. இந்த 92 மூலகங்களால் தான் பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனையும் உருவாக்கப்பட்டுள்ளது, பாரிய விண்மீன்கள் தொடக்கம், சிறிய பூச்சிகள் வரை! உங்களுக்குப் பிடித்தமான சாக்லேட் பிஸ்கட் கூட இந்த இந்த மூலகங்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளது.
எமக்கு மற்றைய 88 மூலகங்கள் எங்கிருந்து வந்தன என்று தெரியும். (அவை விண்மீன்களுக்குள் உருவாக்கப்பட்டு நோவா மூலம் வெளிக்கு விடப்பட்டவை) ஆனாலும் சில மூலகங்களைப் பற்றிய புதிர்கள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அந்தப் புதிர்களில் இன்னமும் ஆய்வாளர்களை அதிகமாக குழப்புவது இந்த லிதியம் என்ற மூலகம்தான்.
பிரபஞ்சத்தில் உருவாகிய முதலாவது மூலகங்களில் ஒன்று லிதியம். அனால் எமது பால்வீதியில் இருக்கும் லிதியத்தின் அளவை கணக்கெடுக்கும் விண்ணியலாளர்களுக்கு தலையிடி மட்டுமே இறுதியில் நிலைக்கிறது. காரணம், பழைய விண்மீன்கள், ஏற்கனவே கணக்கிட்ட அளவைவிட குறைந்தளவு லிதியத்தை கொண்டிருக்க, புதிய விண்மீன்கள், கணக்கிட்டதை விட பத்து மடங்கு அதிகமாக லிதியத்தை கொண்டிருகின்றன!
அண்மையில், நோவா என்ற வெடிக்கும் விண்மீன், வெளியை நோக்கி லிதியத்தை விசிறி எறிந்ததை விண்ணியலாளர்கள் முதன்முதலாக அவதானித்துள்ளனர். நோவா என்ற விண்மீன்கள் திடீரென மிகப்பெரிதாக வெடிக்கும் விண்மீன்கள், இவை விண்மீனுக்குள் இருக்கும் வாயுக்களை வெளியில் விசிறி எறியும்.
குறித்த ஒரு நோவா விண்மீன் வெளிவிடும் லிதியத்தின் அளவு குறைவு எனினும், நமது பால்வீதியின் வரலாற்றில் பில்லியன் கணக்கான விண்மீன்கள் நோவாவாக வெடித்துள்ளன. இப்படி ஒவ்வொரு நோவாவும் குறிப்பிட்ட சிறிய அளவு லிதியத்தை வெளிவிட்டிருக்குமாயின், தற்போதுள்ள விண்மீன்களில் இருக்கும் அதிகளவான லிதியத்திற்கு காரணம் என்னவென்று இலகுவாக புரிந்துவிடும்.
விண்ணியலாளர்கள் இப்படியான புதிய விடயங்களை அவதானிப்பது, பிரபஞ்சப் புதிரில் விடுபட்டிருக்கும் எஞ்சிய துப்புக்களை ஒன்றொன்றாக தேடித்பெறுவது போலாகும்.
ஆர்வக்குறிப்பு
லிதியம் விண்ணியலாளர்களுக்கு மட்டுமல்ல, பூமியில் வாழும் அதிகளவான மக்களுக்கும் முக்கியமாது! நாம் பயன்படுத்தும் மின்கலங்களில் அதிகமானவை லிதியத்தை கொண்டிருகின்றன.
இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.
http://unawe.org/kids/unawe1534