புதியதொரு கோள்: 21 ஒளியாண்டுகளுக்கு அப்பால்

எழுதியது: சிறி சரவணா

சென்ற வாரத்தில் நாசா பூமியைப் போலவே ஒரு கோளை (பூமி 2.0) கண்டறிந்ததை வெளியிட்டது. நாசாவின் கெப்லர் தொலைக்காட்டி அதனைக்கண்டறிந்தது. அதனைப் பற்றிய தகவலைப் படிக்க கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

நாசாவின் கெப்லர் – பூமியைப் போலவே ஒரு கோள் கண்டுபிடிப்பு

இப்போது மீண்டும் இன்னொரு கண்டுபிடிப்பு! ஆனால் தற்போதும் நாசாவினால் தான் இந்த புதிய கோள் கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் கண்டறிந்தவர் வேறு ஒரு தொலைக்காட்டி – ஸ்பிட்சர் விண்தொலைக்காட்டி.

2015-07-31_204854_cr
ஓவியரின் கற்பனையில் HD 219134b.

நமது சூரியத்தொகுதிக்கு மிக அருகில் இருக்கும் ஒரு பாறைக்கோள் இந்த HD 219134b. ஆம், அதுதான் அதன் தற்போதைய பெயர். இது சூரியத்தொகுதியில் இருந்து 21 ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்ற கிழமை நாச வெளியிட்ட தகவலில் உள்ள பூமி 2.0, 1400 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதைக் கவனிக்கவும்!

இந்த HD 219134b, பூமியைவிட அண்ணளவாக 1.6 மடங்கு பெரியது, அதேவேளை பூமியைப் போல 4 மடங்கு திணிவைக்கொண்டது. இதில் குறிப்பிடவேண்டிய மற்றுமொரு முக்கியவிடயம், இது தனது விண்மீனை வெறும் மூன்றே நாட்களில் சுற்றி வருகிறது! அவ்வளவு அருகில் தனது தாய் விண்மீனை சுற்றிவருகிறது!

இந்தக் கோளை உங்களால் தொலைக்காட்டியைப் பயன்படுத்திக்கூட பார்க்கமுடியாது, ஆனால் அதனது தாய் விண்மீனை, தெளிவான இரவு வானில் வெறும் கண்களால் பார்க்கமுடியும். இது கசியோப்பியா என்ற விண்மீன் குழாமில் இருக்கும் ஒரு விண்மீன்.

இதனது தாய் விண்மீன் சூரியனை விட மிகச்சிறியதும் வெப்பம் குறைந்ததும் ஆகும்.

இது பாறைகளால் ஆன கோளாக இருந்தாலும், உயிரினம் வாழ அல்லது உருவாக சாத்தியமற்ற ஒரு கோளாகும், காரணம் இது தனது தாய் விண்மீனுக்கு மிக அருகில் சுற்றுவதால், அங்கு நீர் இருக்க சாத்தியக்கூறுகள் இல்லை.

15-160.0
HD 219134b தனது தாய் விண்மீனைக் கடக்கும் போது

ஆனாலும் ஆய்வாளர்களுக்கு இந்தக் கோள் ஒரு பொன்முடி, காரணம் இதுதான் நாம் இதுவரை கண்டறிந்த புறவிண்மீன் பாறைக்கோள்களில் மிக அருகில் இருக்கும் கோள். இதனை பற்றிப் பல தகவல்களை சேகரிப்பது, எமக்கு கோள்களின் உருவாக்கம் மற்றும் விண்மீன்-கோள்கள் தொகுதிகளைப் பற்றி அறிய பல்வேறு வகைகளில் உதவும் என்று நாசா ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம், இந்தக் கோள் 3 நாட்களில் தன் தாய் விண்மீனை சுற்றிவருவதால், அதனைப் பற்றி பல்வேறு தகவல்களை சேகரிக்கமுடியும். இனி வரும் பல ஆண்டுகளுக்கு இந்தக் கோளைப்பற்றி ஆய்வாளர்கள் ஆய்வுசெய்வது நிச்சயம்.

நன்றி: நாசா