எழுதியது: சிறி சரவணா
பல்வேறுபட்ட நாடுகளும் அமைப்புக்களும் சூழலை மாசுபடுத்தக்கூடிய கனிம எண்ணெய்களைப் (petroleum) பயன்படுத்தி தங்கள் சக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு, புதுப்பிக்கத்தக்க சக்தி (renewable energy) வளங்களைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டன. இது ஒரு நல்ல மாற்றமாகும். பெரும்பாலான சூழலியல் விஞ்ஞானிகள் மனிதனது செயற்பாடு காரணமாகவே “புவி வெப்பமடைதல்” அதிகரிக்கிறது என்று கூறுவது ஒருபுறம் இருப்பினும், புதுப்பிக்கக்கூடிய சக்தி முதல்கள் குறைந்தவிலையில் பெரிய நன்மையைச் செய்கிறது என்பதும் ஒரு காரணம்.
இதில் ஒருபடி மேலே போய், இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையம் தற்போது முழுமையாக சூரியசக்தியைக் கொண்டே இயங்குகிறது! கொச்சின் விமான நிலையம், அங்கு வரும் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவில் உள்ள நாலாவது பெரிய விமான நிலையமாகும். தற்போது இந்த விமான நிலையத்திற்கான சகல சக்தித் தேவையும் அருகில் உள்ள சூரியசக்தி உற்பத்தி நிலையத்தில் (சூரியப்பண்ணை) இருந்து கிடைக்கிறது. இதனால் பாரிய அளவு சூழலை மாசுபடுத்தும் செயற்பாடு குறைகிறது.
கொச்சின் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சூரியசக்தி உற்பத்திப் பண்ணையில் இருக்கும் 46,150 சூரியப்பட்டைகள் (solar panels) தேவையான சக்தியை வழங்குகின்றது. இந்தப் பண்ணை 180,000 சதுர மீட்டார் அல்லது 45 ஏக்கர் அளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஆறு மாதகாலத்தில் உருவாக்கப்பட்ட இந்த சூரியப்பண்ணைக்கு 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகியுள்ள போதும் இந்தச் செலவை அடுத்துவரும் 5 வருட காலத்தில் கொச்சின் சர்வதேச விமான நிலையக் கம்பனி மீளப்பெற்றுவிடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மற்றும் இந்த சூரியப்பண்ணை அடுத்த 25 வருடங்களுக்கு தொழிற்படும், மற்றும் தனது வாழ்வுக் காலத்தில் அண்ணளவாக 300,000 தொன் CO2 வாயு உருவாகுவதையும் தடுக்கும். (C02 வாயு ஏன் உருவாகவேண்டும் என்று நீங்கள் சிந்திக்கலாம் – சூரியசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கப்படாமல், வழமையான எரிபொருளைப் பயன்படுத்தி 25 வருடங்களுக்கு சக்தியை உருவாக்கினால் வளிமண்டலத்திற்கு 300,000 தொன் CO2 வெளியேற்றப்படும்.) ஆகவே இதுவொரு சிறந்த முதலீடு என்பதிலும் சந்தேகமில்லை.
இந்த சூரியப்பண்ணை மூலம் தினமும் 50,000 – 60,000 யூனிட் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் என்பதனால் அவர்களுது மொத்தத் தேவையும் இந்த புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமே நிறைவேறிவிடும்.
இந்தியா அண்ணளவாக ஒரு வருடத்திற்கு 1293 டன் பச்சைவீட்டு வாயுக்களை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால், சூழலை மாசுபடுத்தும் பச்சைவீட்டு வாயுக்களை வெளியிடும் நாடுகளில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், இந்த கொச்சின் விமான நிலையத் திட்டம் கணிசமான அளவு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதலாம்.
இந்தியா என்று மட்டுமல்லாது, உலக அரங்கில் இந்த முயற்சி பாராட்டப்படவேண்டியதுடன், மேலும் பல நாடுகள், குறிப்பாக சூரியசக்தியைப் பெறக்கூடிய நாடுகள் (அதாவது அந்த நாடுகளுக்கு சூரியபகவான் தரிசனம் கொடுக்கவேண்டுமே! வருடத்திற்கு ஒரு மாதம் மட்டுமே சூரியன் விசிட் அடிக்கும் நாடுகளுக்கு சூரிய சக்தி பொருந்தப்போவதில்லை) இப்படியான முயற்சியை மேற்கொள்வதன் மூலம் சூழல் பாதிப்பில் இருந்து நாட்டையும் பூமியையும் காப்பாற்றலாம்.
இதைப் பற்றிய வீடியோ கீழே பார்க்கலாம்.