அழிந்துவரும் பிரபஞ்சம்

எழுதியது: சிறி சரவணா

என்ன தலைப்பே ஏடாகூடமா இருக்கே அப்படின்னு நீங்க நினைப்பது கேட்கிறது. ஆனால் புதிய ஆய்வு முடிவுகள் அப்படித்தான் சொல்கின்றன. ஆனாலும் பயப்படத்தேவையில்லை! அவ்வளவு சீக்கிரம் ஒன்றும் அழிந்துவிடாது. என்ன செய்தி என்று பார்க்கலாம்.

விண்ணியல் ஆய்வாளர்கள் அண்ணளவாக 200,000 விண்மீன்பேரடைகளை அகச்சிவப்புக் கதிர்வீச்சு, ஒளி மற்றும் புறவூதாக்கதிர்வீச்சு ஆகிய நிறமாலைகளில் ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல் சற்று ஆச்சரியமானது – அதாவது பிரபஞ்சம் இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட சக்தியின் அளவில் பாதியைத்தான் தற்போது வெளியிடுகிறதாம். இன்னொரு வகையில் சொல்லப்போனால், இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாக்கிய சக்தியின் அளவை விட பாதியளவே தற்போது இந்த விண்மீன்பேரடைகள் உருவாக்குகிறது!

புதிய விண்மீன்பேரடைகள், பழைய அதாவது பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் இருந்த விண்மீன்பேரடைகளை விட குறைந்தளவு சக்தியை உருவாக்குகின்றன. அப்படியென்றால் புதிய விண்மீன்கள் உருவாகும் விகிதத்தை விட பழைய விண்மீன்கள் அழிவடையும் விகிதம் அதிகமாக உள்ளது!

ஹபிள் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படம் - ஒவ்வொரு புள்ளியும் ஒரு விண்மீன்பேரடை!
ஹபிள் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படம் – ஒவ்வொரு புள்ளியும் ஒரு விண்மீன்பேரடை!

இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில், எதிர்காலத்தில், அதாவது ஆயிரக்கணக்கான பில்லியன் வருடங்களின் பின்னர் இந்தப் பிரபஞ்சத்தில் சக்தியை உருவாக்க எதுவும் (விண்மீன்கள்) இருக்கப்போவதில்லை. பெரும்குளிரில் இந்தப் பிரபஞ்சம் முடிவடையலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.

எப்படியோ தற்போது நாம் கவலைப்பட வேண்டியதில்லை, அப்படிக் கவலைப்படவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், அடுத்த ஐந்து பில்லியன் வருடங்களில் ‘சுவாகா’ என்று பூமியை தன்னுள்ளே விழுங்க காத்திருக்கும் நம் சூரியனைப் பற்றிக் கவலைப்படலாம்!

ஹவாயில் நடைபெறும் சர்வதேச விண்ணியல் கழகத்தில் கூட்டத்திலேயே இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது. ஏழு விண்வெளி ஆய்வு நிலையங்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ளன. இதற்கு GAMA என பெயரிட்டுள்ளனர்.

அதிகளவான விண்மீன்பேரடைகளை ஆய்வு செய்து அவற்றின் சக்தி வெளியீட்டைப் பற்றிப் படிப்பதே இந்த ஆய்வின் முக்கிய நோக்கம். இந்த GAMA ஆய்வு, 21 வேறுபட்ட அலைநீளங்களில் விண்மீன்பேரடைகளை ஆய்வுசெய்கிறது.

1990 களில் இருந்து இந்தப் பிரபஞ்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சக்தி வெளியீட்டின் அளவு குறைந்துகொண்டு வருகிறது என்று ஆய்வாளர்கள் அறிவர், ஆனாலும் GAMA ஆய்வுதான் முதன் முதலில் விண்மீன்பேரடைகளின் சக்திவெளியீட்டின் அளவை அளக்கிறது.

விண்மீன்பேரடைகளின் சக்தி வெளியீட்டின் அளவு குறைந்து கொண்டு வருவது, இந்தப் பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து வருவது ஆகிய இரண்டுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கரும்சக்தி எனப்படும் இன்னும் தெளிவாக அறியப்படாத “சக்தி” இந்தப் பிரபஞ்சத்தை விரிவடையச் செய்கிறது என்பது மட்டுமே தற்போது எமக்குத் தெரியும்.

கரும்சக்தி, மற்றும் கரும்பொருள் பற்றி அறிய இந்தக் கட்டுரையைப் பாருங்கள் – கரும்பொருள் – பிரபஞ்சத்தின் இன்னுமொரு ரகசியம்

தகவல்: Discovery News


மேலும் சிறய அறிவியல் தகவல்களை அறிய முகப்புத்தகத்தில் பரிமாணத்தை தொடருங்கள்! 

https://www.facebook.com/parimaanam