இந்தப் படத்தில் தெரியும் அழகான குமிழி போன்ற அமைப்பு ஒரு ஒளிரும் விண்மீனின் ஆவியாகும்! விண்மீன்கள் இறந்தபின் ஆவிகளாகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா?

இந்தப் படத்தில் இருக்கும் குமிழி போன்ற அமைப்பு முன்பு ஒரு காலத்தில் நமது சூரியனைப் போன்ற ஒரு விண்மீனாக இருந்தது. தற்போது இது வெறும் ஆவி! இந்த விண்மீன்களின் ஆவிகள், கோள்விண்மீன் படலங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை இறந்த விண்மீன்களின் எச்சங்களில் இருந்து உருவாகின்றன.

தெற்கு ஆந்தை கோள்விண்மீன் படலம்
தெற்கு ஆந்தை கோள்விண்மீன் படலம்: ஒரு விண்மீனின் இறப்பின் பின்னர் உருவாகும் அமைப்பை கோள்விண்மீன் படலம் என அழைப்பர். நன்றி: ESO

படத்தில் இருக்கும் கோள்விண்மீன் படலம், தெற்கு ஆந்தை கோள்விண்மீன் படலம் என அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் சிறிய தொலைநோக்கிகளைக் கொண்டு பார்க்கும் போது இந்த கோள்விண்மீன் படலம் ஒரு ஆந்தை போல தெரிவதனால் ஆகும் (நம்பினால் நம்புங்கள், உங்கள் விருப்பம்!).

இறக்கும் விண்மீனின் வெளிப்புற வாயுப் படலம், குறித்த விண்மீனின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு விண்வெளியை நோக்கி விரிவடைவதால் இந்த கோள்விண்மீன் படலங்கள் உருவாகின்றன. பிரபஞ்சத்தின் அழகிய கலை வடிவங்களில் ஒன்றான கோள்விண்மீன் படலங்கள் நீண்ட காலம் இருப்பதில்லை. பெரும்பாலும் இவை ஆயிரக்கணக்கான வருடங்களே நிலைத்திருக்கும். விண்மீனின் பில்லியன் கணக்கான வருட வாழ்வோடு ஒப்பிடும்போது இது சொற்பமே.

இந்த விண்வெளி ஆவிகள், பிரபஞ்ச வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை பிரபஞ்சத் தூசியை உருவாக்குகின்றன. இந்தப் பிரபஞ்ச தூசிகள் கார்பன், ஆக்ஸிஜன் போன்ற இரசாயன மூலக்கூறுகளை கொண்டுள்ளன. இப்படியான இரசாயன மூலக்கூறுகள் இல்லாமல் பூமியில் உயிரினம் உருவாகியிருக்கமுடியாது. இந்த இரசாயன மூலக்கூறுகள் விண்மீனின் உள்ளகப்பகுதியில் அல்லது வயிற்றினுள் உருவாக்கப்படுகின்றன.

விண்மீன் இறக்கும் பொது இந்த இரசாயன மூலக்கூறுகள் விண்வெளியில் வெளிவிடப்படுகிறது. அதன் பின்னர் அவை மீண்டும் புதியதொரு விண்மீனாகவோ அல்லது கொள்களாகவோ உருவாகும். சிலவேளை எம்மைப் போன்ற உயிருள்ள உயிரினங்களாகவும் உருவாகலாம்! புகழ்பெற்ற விண்ணியலாளர் கார்ல் சேகன் கூறியதுபோல “நாமெல்லாம் விண்மீன் தூசிகளால் உருவாக்கப்பட்டவர்களே”.

ஆர்வக்குறிப்பு

தெற்கு ஆந்தை கோள்விண்மீன் படலம் எமது சூரியனைப் போன்ற ஒரு விண்மீனின் இறப்பினால் உருவானது, ஆனால் இந்தக் கோள்விண்மீன் படலத்தின் அளவு சூரியத்தொகுதியின் அளவைவிட நான்கு மடங்கு பெரிதாகிவிட்டது.


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

http://unawe.org/kids/unawe1535


மேலும் சிறய அறிவியல் தகவல்களை அறிய முகப்புத்தகத்தில் பரிமாணத்தை தொடருங்கள்! 

https://www.facebook.com/parimaanam


Previous articleஅழிந்துவரும் பிரபஞ்சம்
Next articleபச்சைக் கடல் ஆமைகள்