பச்சைக் கடல் ஆமைகள்

எழுதியது: சிறி சரவணா

கடலில் வாழும் பெரியவொரு ஆமை இனம் இந்த பச்சைக் கடல் ஆமை. பொதுவாக அயனமண்டல (tropical) மற்றும் மித-அயனமண்டல (subtropical) கடற்கரை சார்ந்த பகுதிகளில் காணப்படும் இந்த வகையான ஆமைகள் அகலமான, வழுவழுப்பான ஆமை ஓட்டைக் கொண்டிருக்கும்.

இதனது “பச்சை” என்கிற பெயருக்குக் காரணம், அதன் ஆமை ஓட்டின் கீழ்ப்பகுதியில் இருக்கும் பச்சை நிறக் கொழுப்புப் பகுதியாகும். இதனது ஓடு பழுப்பு நிறமானது. இந்த பச்சைக் கடல் ஆமையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று அட்லாண்டிக் கடலில் வாழும் பச்சை ஆமைகள், மற்றவை கிழக்கு பசுபிக் கடற்பகுதியில் வாழும் பச்சை ஆமைகள். விஞ்ஞானிகள் இவை இரண்டும் ஒரே இனமா அல்லது வேறு வேறு இனமா என்று இன்றும் தலையைப் பிய்த்துக்கொண்டு திரிகின்றனர்.

feeling-the-heat-with-jeff-corwin-sea-turtles-video-image_cr

அண்ணளவாக 318 கிலோகிராம் வரை நிறையுள்ள வளர்ந்த பச்சை ஆமை, கடலில் வாழும் ஆமை இனங்களில் மிகப்பெரியதாகும். உடலின் அளவோடு ஒப்பிடும் போது தலையின் அளவு மிகச்சிறியதாகும், மற்றும் சாதாரண ஆமைகளைப் போல தனது ஆமை ஓட்டினுள் தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொள்ளும் திறன் இந்த பச்சை ஆமைகளுக்கு இல்லை. இதனது இதய வடிவான ஆமை ஓடு அண்ணளவாக 5 அடி அல்லது 1.5 மீட்டார் வரை இருக்கும். 80 ஆண்டுகளுக்கு மேல் வரை உயிர்வாழும்.

ஆண் பச்சை ஆமைகள் பெண் ஆமைகளை விட சற்றுப் பெரிதாக இருக்கும். மற்றும் ஆணின் வாலும் சற்று நீளமாக இருக்கும். பெரிய துடுப்புகள் போன்ற இருபுறமும் அமைந்த அமைப்பு இந்த ஆமைகள் வினைத்திறனுடன் நீந்த உதவுகிறது.

வளர்ந்த பச்சை ஆமைகள் தாவர உண்ணிகளாகும். இவை கடற்புல் மற்றும் பாசி போன்றவற்றை உண்கின்றன. ஆனால் சிறிய பச்சை ஆமைகள், சிறிய நண்டுகள், ஜெல்லிமீன் மற்றும் கடல் பஞ்சு போன்றவற்றையும் உண்கின்றன.

பொதுவாக கடல் ஆமைகள் தங்கள் உடலை சூடாக வைத்திருப்பதற்கு ஆழமற்ற நீரின் மேற்பகுதியில் நீந்தும். ஆனால் இந்த பச்சை ஆமைகள், அதுவும் பொதுவாக கிழக்கு பசுபிக் கடல் ஆமைகள், நிலத்திற்கு அதாவது கடற்கரைக்கு வந்து சூரியக்குளியல் செய்யும்! பொதுவாக நீர்நாய் மற்றும் கடற்பறவைகள் இருக்கும் கடற்கரை ஓரங்களில் இந்த பச்சைக் கடல் ஆமைகளையும் பார்க்கலாம்.

மற்றைய கடல் ஆமை இனங்களைப் போலவே, இந்த பச்சை ஆமைகளும் நீண்ட தூரப் பயணம் செய்யக்கூடியன. உணவு உண்ணும் இடத்தில் இருந்து தனது கூடு வரை, (பொதுவாக கடற்கரை ஓரங்களில்) நீண்டதூரப் பயணம்மேற்கொள்கின்றன.

1052174457275242398_787132
படம்: instagram.com/thomaspeschak

இனப்பெருக்கத்திற்கான கூடல் இரண்டில் இருந்து நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இடம்பெறும் – அதுவும் கடற்கரைக்கு அண்மிய ஆழமில்லா நீரில். பொதுவாக முட்டையிடுவதற்கு தங்களின் தாய் பயன்படுத்திய கடற்கரையே பெண் ஆமைகள் தெரிவுசெய்யும். தனது துடுப்புகளைப் பயன்படுத்தி மணலில் குழி தோண்டி நூறில் இருந்து இருநூறு வரை அதனுள் முட்டையிடும். பின்னர் அதனை மூடிவிட்டு கடலுக்குத் திரும்பிவிடும். குழியில் புதைக்கப்பட்ட முட்டைகளில் இருந்து இரண்டு மாதங்களின் பின்னர் ஆமைக்குஞ்சுகள் வெளிப்படும்.

பச்சை ஆமையின் வாழ்வில் மிகவும் ஆபத்தான நேரம் இந்த ஆமைக்குஞ்சுகள் பிறந்த குழியில் இருந்து கடலுக்குள் செல்லும் காலமாகும். கடற்பறவைகள், பெரிய நண்டுகள் இவற்றை இரையாக்க காத்துக்கொண்டிருக்கும்.

உலகில் அழிந்துவரும் இனத்தில் இன்று இந்த பச்சைக் கடல் ஆமைகளுக்கு முதமையான இடமுண்டு. மிகவும் ஆபத்தான அழிவுக்கட்டத்தில் இவை இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மனிதர்கள் இந்த ஆமையை இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் வேட்டையாடுகின்றனர். மற்றும் மீன்பிடிப் படகுகளின் விசிறிகள் என்பவற்றில் மோதுவதும், மீன் வலைகளில் சிக்குவதாலும் இந்த ஆமைகள் இறக்கின்றன. மற்றும் இதனது முட்டையிடும் இடங்கள் அழிக்கப்படுவதும் இந்த ஆமை இனம் அழிவடைந்து வருவதற்கு முக்கிய காரணமாகும்.

தகவல்: National Geographic


மேலும் அறிவியல் தகவல்களை அறிய முகப்புத்தகத்தில் பரிமாணத்தை தொடருங்கள்! 

www.facebook.com/parimaanam