நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப்பெரிய விலங்கு இந்த ஆபிரிக்க யானைகள். ஆசியாவில் வாழும் யானைகளை விட சற்றுப் பெரிய இந்த யானைகள், பாரிய ஆபிரிக்க கண்டம் போன்ற வடிவில் அமைந்த காதுகளைக் கொண்டு காணப்படும். ஆனால் ஆசிய யானைகள் வட்ட வடிவமான காதுகளைக் கொண்டிருக்கும்.
பொதுவாக யானைகளின் பெரிய காதுகள் விசிறிகள் போலே செயற்பட்டு அதன் உடல் வெப்பநிலையை குறைக்க உதவும். ஆனாலும் ஆபிரிக்காவில் இருக்கும் வெப்பநிலைக்கு இந்த காதுகள் மட்டும் போதாது. ஆகவே ஆபிரிக்க யானைகளை நீர் நிலைகளுக்கு அருகில் பார்க்கலாம். இந்த யானைகள் நீரைக் காதலிக்கின்றன என்று கூடச் சொல்லலாம். இவற்றின் தும்பிக்கை மூலம் நீரை உறுஞ்சி, தன் உடல் முழுவதும் படும் வண்ணம் நீரை விசிறிக்கொள்ளும். அதுமட்டுமல்லாது, சேற்றையும் தனது உடல்களில் பூசிக்கொள்ளும் – வெப்பத்தில் இருந்து தோலைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை.
விலங்குகளில் யானைக்கு இருக்கும் ஒரு சிறப்பியல்பு அதன் தும்பிக்கை. தும்பிக்கை என்பது யானையின் மூக்கு ஆகும் – கொஞ்சமே கொஞ்சம் ‘நீண்ட’ மூக்கு! தும்பிக்கையை நுகர்வதற்கும், மூச்சு விடுவதற்கும், நீர் அருந்துவதற்கும் சத்தம் எழுப்புவதற்கும் மற்றும் பொருட்களை தூக்குவதற்கும் யானை பயன்படுத்துகிறது. மரங்களில் இருந்து தனது உணவை பறித்து உண்பதற்கு இந்த தும்பிக்கை உதவுகிறது.
யானையின் தும்பிக்கை மட்டும் 100,000 இற்கும் மேற்பட்ட தசைநார்களால் ஆக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்க யானைகளின் தும்பிக்கையின் முடிவிடத்தில் சிறிய விரல் போன்ற அமைப்பும் காணப்படுகிறது. சிறிய பொருட்களை பற்றிப் பிடிப்பதற்கு இவை பயன்படுகின்றன. ஆபிரிக்க யானைகளுக்கு விரல் போன்ற அமைப்பு இரண்டும், ஆசிய யானைகளுக்கு ஒன்றும் காணப்படும்.
ஆண் மற்றும் பெண் ஆபிரிக்க யானைகளுக்கு தந்தங்கள் காணப்படுகின்றன. இந்தத் தந்தங்கள், யானைகள் உணவு மற்றும் நீர் ஆகிய அத்தியாவசியப் பண்டங்களை பெறுவதற்காக நிலத்தை தோண்டவும், மரங்களில் இருந்து மரப்பட்டையை உரிக்கவும் பயன்படுகிறது. ஆண் யானைகள் மற்றைய யானைகளுடன் சண்டையிடுவதற்கு தந்தங்களை பயன்படுத்துகின்றன.
யானை இனத்திற்கே ஆபத்து அதனது தந்தத்தால் ஏற்பட்டுள்ளது. சிலர் யானைத் தந்தத்தை விலைமதிப்பற்றதாக கருதுவதால், யானைகள் அவற்றின் தந்தத்திற்காக வேட்டையாடப்படுகின்றன. இன்று தந்ததிற்காக யானைகளை கொல்வது மற்றும் தந்தங்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்றாலும் கறுப்புச்சந்தையில் இன்றும் இதன் விற்பனை நடைபெறுகிறது. இதனால் பல ஆபிரிக்க யானைகளின் இனத்திற்கு ஆபத்து தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
யானைகள் தாவர உண்ணிகளாகும். பொதுவாக இவை, மரங்களின் வேர்கள், புற்கள், பழங்கள், மரப்பட்டைகள் என்பவற்றை உண்கின்றன. வளர்ந்த ஆபிரிக்க யானை ஒன்று ஒரு நாளில் அண்ணளவாக 136 கிலோகிராம் எடையுள்ள உணவை உண்கிறது!
யானைகள் அவ்வளவாக உறங்குவதில்லை. இவை எந்தநேரமும் உணவைச் சேகரித்து உண்பதிலேயே காலத்தை கழிக்கின்றன என்று சொன்னாலும் மிகையல்ல. உணவைத் தேடி மிக நீண்ட தொலைவுக்கும் இவை பயணப்படும்.
அண்ணளவாக 8.2 அடியில் இருந்து 13 அடிவரை வளர்ந்த ஆபிரிக்க யானை இருக்கும். இதன் நிறை 2200 கிலோகிராம் தொடக்கம் 6300 கிலோகிராம் வரை இருக்கும். கூடமாக சேர்ந்து வாழும் குணம் கொண்ட விலங்கினம் இது. அண்ணளவாக 70 வருடங்கள் வரை உயிர்வாழும்.
பொதுவாக பெண் யானைகள் தங்கள் குட்டிகளுடன் சேர்ந்து வாழும், ஆனால் வளர்ந்த ஆண் யானைகள் தனியாக அலைந்துதிரியும் பண்பு கொண்டது.
பாலூட்டிகளில் அதிககாலம் கற்பமாக இருக்கும் உயிரினம் யானைகள் – அண்ணளவாக 22 மாதங்கள்! பெண் யானை இரண்டு தொடக்கம் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு யானைக்குட்டியை பிரசவிக்கும்.
யானைக்குட்டி பிறக்கும் போதே அண்ணளவாக 91 கிலோகிராம் வரை அதன் நிறை இருக்கும், மற்றும் ஒரு மீட்டார் வரை அதன் உயரம் இருக்கும்.
ஆசிய யானைகளைப் போல இலகுவாக ஆபிரிக்க யானைகளை பழக்கப்படுத்திவிட முடியாது. இவை சகாராப் பாலைவனப் பகுதி தொடங்கி மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்கா வரையான பகுதிகளில் காணப்படுகின்றன.
ஆபிரிக்காவில் வடக்கில் வசிக்கும் யானைகள் மாலி தேசத்தில் இருக்கும் சாகல் பாலைவனத்தில் காணப்படுகின்றன. நாடோடிகளான இந்த யானைகள், குழுவாக நீர் நிலைகளைத் தேடி அந்தப் பாலைவனத்தில் அலையும்.
காட்டின் ராஜா சிங்கம் என்று நாம் கதைகளில் படித்திருந்தாலும், ஒரு வளர்ந்த ஆபிரிக்க யானையின் கம்பீரத்திற்கு எதுவும் இணையாகாது என்றே தோன்றுகிறது.
தகவல்: National Geographic
⚡ தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஒரு லைக் போடவும்! அதற்கும் மேலே என்றால் ஷேர் செய்யலாமே!
⚡ https://parimaanam.net
⚡ https://twitter.com/parimaanam
⚡ https://www.facebook.com/parimaanam