ஆய்வுகூடத்தில் வளர்த்த மனித மூளை

எழுதியது: சிறி சரவணா

முதன்முறையாக ஆய்வுகூடத்தில் மனித மூளையை செயற்கையாக விஞ்ஞானிகள் வளர்த்துள்ளனர். தாயின் வயிற்றினுள் இருக்கும் ஐந்து வார சிசுவிற்கு இருக்கும் அளவு உள்ள இந்த மூளை வெறும் பென்சில் அழிறப்பர் அளவுள்ளது.

ஆனாலும் செயற்கையான முறையில் உருவாக்கப்பட்டதே தவிர, எந்தவித உணர்வுகளையும் உணரும் ஆற்றலை இந்த “வளர்த்த” மூளை கொண்டில்லை. அதுமட்டுமல்லாது, இதைவிட பெரிதாக மூளையை வளர்ப்பதற்கு, சிக்கலான இரத்தநாளங்கள் தேவைப்படும், அப்படியான இரத்தநாளங்களை உருவாக்கத் துடிக்கும் இதயமொன்றும் வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இது  வளர்த்த மூளை இல்லை: வெறும் மனித மூளையின் மாதிரி!
இது வளர்த்த மூளை இல்லை: வெறும் மனித மூளையின் மாதிரி!

இப்படி தொழிற்படாத மூளையை ஏன் உருவாக்கவேண்டும் என்று நீங்கள் சிந்திக்கலாம். உண்மையிலேயே இந்த மூளையை உருவாக்கியதன் நோக்கம் செயற்கையாக சிந்திக்கக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்குவது இல்லை, மாறாக மூளை வளரும் காலத்தில் ஏற்படும் நோய்கள் எப்படி மூளையைத் தாக்குகின்றன என்பதனைப் பற்றி ஆய்வு செய்யவாகும்.

மற்றும் மூளையில் ஏற்படும் தாக்கங்களானஅல்ஸைமர்,பார்கின்சன்ஸ் போன்ற குறைபாடுகளுக்கு தேவையான மருந்துகளைப் பரிசோதித்துப் பார்க்கவும் இந்த “ஆய்வுகூட மூளை” பயன்படும். இதனால் மனிதர்கள் மற்றும் குரங்குகளில் புதிய மருந்துகளைப் பரிசோதிப்பதையும் குறைக்கலாம்.

இந்த மூளையை உருவாக்க, வளர்ந்த மனிதனின் தோல்க் கலங்களை ஆய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இந்தத் தோல்க் கலங்கள், குருத்தணுவாக (stem cell) மாற்றப்பட்டு, பின்னர் வேறு எந்தவொரு திசுக்களாகவும் மாற்றப்படக்கூடியவை. இந்த முறையைப் பயன்படுத்தி, டாக்டர் ஆனந்த் தலைமையிலான ஆய்வுக்குழு மனித மூளை மற்றும் நரம்புகளை உருவாக்கியுள்ளனர்.

இதுவரை செயற்கையாக வளர்க்கப்பட்ட மனித மூளைகளில் இதுவே மிகச் சிறந்தது என்று இதனை உருவாக்கியவர்கள் கூறுகின்றனர். இந்த செயற்கை மூளை, 99% மனித மூளையின் கலங்களையும் ஜீன்களையும் கொண்டுள்ளதுடன், சிறிய முதுகுத்தண்டு (spinal cord) மற்றும் விழித்திரை ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

உயிரியலில் ஒரு புதிய சாதனை என்றபோதிலும், ஆனந்த் தலைமயிலான குழு, இந்த ஆய்வின் முழு விபரத்தையும் வெளியிடவில்லை. பொதுவாக புதிய அறிவியல் முறைமைகள் கண்டறியப்படும் போது அவை வேறு தனிப்பட்ட ஆய்வாளர்களால் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு உறுதிப்படுத்தக்கூடிய வகையில் ஆய்வறிக்கைகளாக வெளியிடப்படும். ஆனால் இந்த செயற்கை மூளை விடயத்தில் அப்படி ஆய்வறிக்கைகளை ஆனந்த் தலைமையிலான ஆராய்ச்சிக்குழு வெளியிடவில்லை.

இதனால், உண்மையிலேயே இந்த செயற்கை மூளை எந்தளவு சாத்தியமானது, மற்றும் அவற்றின் முழுமையான பயன்களைப் பற்றி மற்றைய ஆய்வாளர்களால் கருத்துத் தெரிவிக்கமுடியவில்லை.

இதனைப் பற்றி ஆனந்த் குறிப்பிடும்போது, இந்த மூளையை உருவாக்க அவர்கள் புதிதாக ஒரு முறையைக் கையாண்டதினால் அதனைக் காப்புரிமைப் படுத்தும் வரையில், எல்லோருக்குமான ஆய்வறிக்கையை வெளியிடப்போவதில்லை என்றார்.


மேலும் அறிவியல் தகவல்களை அறிய முகப்புத்தகத்தில் பரிமாணத்தை தொடருங்கள்! 

https://www.facebook.com/parimaanam