வானில் ஒரு புதிய ஆச்சரியம்!

எழுதியது: சிறி சரவணா

ஆண்டு – 1670, அக்கால வானியலாளர்கள் இரவு வானில் உன்னிப்பாக, பெரும் வியப்புடன் விண்மீன்களைப் பார்த்துக்கொண்டிருந்தனர். திடீரென வானில் ஒரு புள்ளியில் பிரகாசமான ஒளிப்புள்ளி ஒன்று தோன்றிற்று. உலகின் வேறுபட்ட பகுதிகளில் இருந்து வானின் அப்பகுதியைப் பார்த்துக்கொண்டிருந்த அனைத்து வானவியலாளர்களும் இந்தச் சம்பவத்தை எதேர்ச்சையாக கண்டனர். அப்படி வானில் தோன்றிய புதிய விண்மீனை “நோவா” (nova) என்று கருதினர். நோவா என்றால் வானில் புதிதாக தோன்றிய பொருள் என்று அர்த்தம். ஆகவே அதற்கு “Nova Vul” எனப் பெயரிட்டனர்.

நோவா எனப்படுவது ஒரு பாரிய விண்மீன் வெடிப்பாகும். இது குறித்த விண்மீனைப் பலமடங்கு பிரகாசமாக்கும். இந்தத் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தெரிவது Nova Vul என்கிற விண்மீன் வெடிப்பின் பின்னர் எஞ்சிய மிச்சமாகும்.

Nova Vul எனப்படும் விண்மீன்களின் மோதலின் பின்னர் எஞ்சியது. நன்றி: ESO/T. Kamiński
Nova Vul எனப்படும் விண்மீன்களின் மோதலின் பின்னர் எஞ்சியது.
நன்றி: ESO/T. Kamiński

உங்களுக்கு ஏற்கனவே ஒரு சொல் தெரிந்திருக்கலாம் – சுப்பர்நோவா! நோவாவிற்கும் சுப்பர்நோவாவிற்கும் என்ன வேறுபாடு என்று நீங்கள் சிந்திக்கலாம். சொல்கிறேன், நோவா என்பது ஒரு வெள்ளைக்குள்ளன் வகை விண்மீன் அதனருகில் இன்னுமொரு விண்மீனை சுற்றிவரும்போது ஏற்படும். அதாவது இந்த இரண்டு விண்மீன்களும் ஒன்றையொன்று சுற்றிக்கொண்டிருக்கும் – இரட்டை விண்மீன் தொகுதிபோல்.

பேராசைகொண்ட வெள்ளைக்குள்ளன் அதன் அருகில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்மீனில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வாயுவை உருஞ்சிக்கொள்ளும். ஒரு கட்டத்தில் வெள்ளைக் குள்ளனால் தனது ஈர்ப்பு விசையைத் தாங்கிக்கொள்ள முடியாதளவு வாயுவைப் பெற்றவுடன்… அது நோவாவாக பெரிதாக வெடித்துவிடும்! சூப்பர்நோவாவின் பொது முழு விண்மீனும் வெடித்துவிடும், ஆனால் நோவா வெடிப்பின் பின்னரும் விண்மீன் எஞ்சியிருக்கும்.

சரி மீண்டும் Nova Vul இற்கு வருவோம். அண்ணளவாக 300 வருடங்களுக்கு முன்னர் வெடித்த இந்த நோவாபற்றி தற்போதைய விண்ணியலாளர்கள் புதிய தகவலைத் திரட்டியுள்ளனர் – அதாகப்பட்டது இந்த Nova Vul ஒரு நோவா வெடிப்பே அல்ல!!!

அப்படியென்றால்? இது மிக மிக அரிதாக நடைபெறும் ஒரு பிரபஞ்ச சம்பவத்திற்கு எடுத்துக்காட்டு. இரண்டு விண்மீன்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பிரமிக்கத்தக்களவில் நடைபெற்ற ஒரு பாரிய வெடிப்பு. இந்த மோதல் எந்தளவுக்கு உக்கிரமாக இருந்ததென்றால், மோதலில் ஒரு விண்மீன் முழுதாக வெடித்துச்சிதறி அதனது வாயுக்கள் அப்படியே விண்வெளியில் வீசி எறியப்பட்டுள்ளது.

மேலும் ஒரு குறிப்பு

பொதுவாக சுப்பர்நோவாவாக வெடித்துச் சிதறும் விண்மீன், ஒரு முழுச் சூரியனை உருவாகும் அளவிற்கு தேவையான வாயுவை வெளிவிடும்! இந்த சூப்பர்நோவா வெடிப்புக்கள், சாதாரண நோவா வெடிப்புக்கள் வெளியிடும் வாயுவின் அளவைவிட 10,000 மடங்கு அதிகமாக வெளியிடும்.

இன்னுமொரு குறிப்பு

சுப்பர்நோவா வெடிப்பின் போது வெளியிடப்படும் சக்தி, நமது சூரியன் தனது வாழ்க்கைக்காலத்தில் வெளியிடும் மொத்த சக்தியைக் காட்டிலும் அதிகமாக இருக்கும்! சூரியனது வாழ்வுக்காலம் 10 பில்லியன் வருடங்கள், சுப்பர்நோவா வெடிப்பு சில செக்கன்களில் இருந்து சில நிமிடங்கள் வரை. ஆகவே சுப்பர்நோவா வெடிப்பின் அளவை நீங்களே ஒப்பிட்டுக் கொள்ளலாம்.


இந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.

unawe.org/kids/unawe1514